பிரிட்டன் வாழ் இந்தியர்களின் இன்னொரு முகம்!
மேற்சொன்ன டைட்டிலே இப்படம் ஒரு ‘த்ரில்லர்’ என்பதை உணர்த்தும். முதன்மை பாத்திரத்தில் கரீனா கபூர் நடித்திருக்கிறார் என்பதால் இப்படம் ரசிகர்களின் கவனத்தை எட்டியது. அனைத்துக்கும் மேலே, இக்கதை பிரிட்டனில் நிகழ்வதாகக் காட்டியது படத்தின் ட்ரெய்லர். 2022இல் இரு தரப்புக்கு நடுவே ஏற்பட்ட மோதலைச் சொல்லும் வகையில் அமைந்திருப்பதாக, அது உணர வைத்தது. அதுவே, ‘பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ குறித்த ஈர்ப்பை ஏற்படுத்தியது.
இப்படத்தின் உள்ளடக்கத்தில் அது முக்கியப் பங்கு வகிக்கிறதா? எப்படிப்பட்ட அனுபவத்தைத் தருகிறது இப்படம்?!
பதற்றத்தை உருவாக்கும் மரணம்!
டிடெக்டிவ் ஜஸ்மித் பாம்ரா (கரீனா கபூர் கான்), ஒரு அங்காடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தனது பத்து வயது மகனைப் பறி கொடுக்கிறார். கணவரின் துணையில்லாமல் தனியே மகனோடு இருந்து வந்தவர், அந்த துக்கத்தை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிறார்.
இந்த நிலையில், பக்கிங்ஹாம்ஷைர் பகுதிக்கு அவர் மாற்றம் செய்யப்படுகிறார்.
பக்கிங்ஹாம் பகுதியில் தல்ஜீத் – ப்ரீத்தி (ரன்வீர் ப்ரார், ப்ராப்லீன் சாந்து) தம்பதி வசித்து வருகிறது. அவர்களது மகன் இஸ்ப்ரீத் காணாமல் போனதாகக் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்படுகிறது.
அடுத்த சில மணி நேரங்களில், அப்பகுதியிலுள்ள ஏரிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இஸ்ப்ரீத்தின் சடலம் கண்டெடுக்கப்படுகிறது.
பிரேதப் பரிசோதனை முடிவில், நீரில் மூழ்கி இஸ்ப்ரீத் இறந்ததாகத் தகவல் சொல்லப்படுகிறது.
நீரில் மூழ்கிய நபர் எப்படி காருக்குள் இருக்க முடியும்? யார் அவரது உடலை அதில் கிடத்தியது? ஒரு சிறுவனைக் கொல்லும் அளவுக்கு என்ன நடந்தது? அந்தச் சிறுவன் ஏன் அங்கு வந்தார்? அவரை வரவழைத்தது யார்? சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் யார்?
இவ்வழக்கை டிஐ ஹர்தீக் படேல் (ஆஷ் டாண்டன்) தலைமையிலான குழு விசாரணை செய்கிறது. அவருக்கு உதவியாளராக ஜஸ்மித் நியமிக்கப்படுகிறார்.
போலீசாரின் விசாரணையில், இஸ்ப்ரீத்தின் சடலம் கிடைத்த கார் சலீம் சவுத்ரி (அசாத் ரஜா) என்பவருக்குச் சொந்தமானது என்று தெரிய வருகிறது. அந்த காரை அவரது மகன் சாகுய்ப் எடுத்துச் சென்றது உறுதி செய்யப்படுகிறது.
அப்பகுதியைச் சேர்ந்த இமாமின் மகன் சாகுய்ப்பின் நண்பர். அதனால், அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். அவர், சாகுய்ப் தான் இஸ்ப்ரீத்தை கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறார். அதன் முடிவில், சாகுய்ப்பை கைது செய்கிறார் ஹர்தீக்.
ஆனால், அந்த வழக்கில் நிறைய முடிச்சுகளுக்குப் பதில் இன்னும் கிடைக்கவில்லை என்று மேலதிகாரியிடம் தெரிவிக்கிறார் ஜஸ்மித். அதையடுத்து, அவரை அந்த வழக்கில் இருந்து வெளியேற்றும் வேலைகளைச் செய்கிறார் ஹர்தீக்.
அதனை மீறி, டிடெக்டிவ் ஜஸ்மித் பாம்ராவின் விசாரணையில் அடுத்தடுத்துச் சில தகவல்கள் கிடைக்கின்றன.
இதற்கிடையே, இஸ்ப்ரீத்தின் கொலை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. கொலையானவர், குற்றம்சாட்டப்பட்டவர் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் சமூகத்தில் அது பிளவை உருவாக்குகிறது. அதனால், சில அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழ்கின்றன.
அந்த களேபரங்களுக்கு நடுவே, உண்மையான குற்றவாளி யார் என்பதை ஜஸ்மித் கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை.
மிளிரும் கரீனா!
‘ஜப் வி மெட்’ போன்ற படங்களில் காதலையும் பிரிவையும் முகம் முழுக்கத் தேக்கி வைத்து கரீனா நடித்ததை நாம் பார்த்திருக்கிறோம். ‘சைஸ் ஜீரோ’ அழகோடு இருந்ததில் தொடங்கி இன்று வரை வெவ்வேறு பரிமாணங்களில் திரையில் அவரை ரசித்திருக்கிறோம்.
அவற்றில் இருந்து வேறுபட்டு, இப்படத்தில் ஜஸ்மித்தாக அவர் தோன்றியிருக்கிறார். மகனை இழந்த துக்கத்தில் தவிக்கும் ஒரு தாயாக, ஒவ்வொரு பிரேமிலும் மிளிர்கிறார். கிளைமேக்ஸில் உண்மையான குற்றவாளியோடு பேசும் காட்சியிலும் அது நூறு சதவிகிதம் தென்படுகிறது.
சமையல்கலைஞர் ரன்வீர் ப்ரார் இதில் தல்ஜீத்தாக நடித்துள்ளார். சில உண்மைகளை மறைத்து, சிலவற்றை மட்டும் பொதுவெளியில் வெளிப்படுத்தும் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரும் வரும் நிமிடங்கள் குறைவென்றாலும், நடிப்பு நிறைவாக இருக்கிறது.
அவரது மனைவியாக ப்ராப்லீன் சாந்து நடித்திருக்கிறார். அவரது நடிப்பும் இப்படத்தில் பேசப்படும் விதமாக உள்ளது.
போலீஸ் உயரதிகாரியாக கெய்த் மில்லர் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர்த்து ஆஷ் டாண்டன், சஞ்ஜீவ் மிஸ்ரா உட்படப் பலர் நடித்துள்ளனர். அவர்களில் பலர் பிரிட்டனைச் சேர்ந்த இந்தியர்கள்.
இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் எம்மா டேல்ஸ்மேனின் ஒளிப்பதிவு. இருள் கவிந்த, மேகம் சூழ்ந்த பக்கிங்ஹாம்ஷைர் பகுதியை அவர் காட்டியிருக்கும் விதம் நம்மைத் திரையோடு ஒன்ற வைக்கிறது.
அமிதேஷ் முகர்ஜியின் படத்தொகுப்பு, சீராகக் கதை திரையில் விரிய உதவியிருக்கிறது. பல காட்சிகள் மிகச்செறிவாக ‘கட்’ செய்யப்பட்டுள்ளன.
மே டேவிஸின் தயாரிப்பு வடிவமைப்பு, கேதன் சோதா மற்றும் நைட் சாங் ரிக்கார்ட்ஸின் பின்னணி இசை உட்பட இப்படத்திலுள்ள தொழில்நுட்ப அம்சங்கள், இயக்குனர் திரையில் சொல்லும் கதைக்கு உயிரூட்ட உதவியிருக்கின்றன.
அஸீம் அரோரா இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். அவரோடு இணைந்து ராகவ் ராஜ் கக்கர், காஷ்யப் கபூர் இதன் திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கின்றனர்.
லண்டன் போன்ற பெருநகரங்களைக் காட்டாமல், ஒரு சாதாரண நகரத்தில் கதை நிகழ்வதாகக் காட்டியிருப்பது படத்தோடு நாம் எளிதாக ஒன்ற வகை செய்கிறது.
பிரிட்டனில் வாழும் இந்தியர்களிடையே நிலவும் மத வேறுபாடுகள், அது சார்ந்து தினசரி வாழ்வில் விளையும் முரண்கள், இளம் தலைமுறையினரிடையே பரவும் போதைப்பொருட்கள் நுகர்வு, பழமையில் ஊறிப்போன முந்தைய தலைமுறையின் ஆதிக்கம் என்று பல விஷயங்களைப் பேசுகிறது இதன் திரைக்கதை.
கூடவே, யாரோ ஒருவரின் கொலை வெறிக்கு மகனைப் பறி கொடுத்த நாயகியின் துக்கம் இக்கதையின் அடிநாதமாகச் சொல்லப்படுகிறது. பிரியத்திற்குரியவர்களை இழந்த அவரது தவிப்பே, குற்ற விசாரணையில் அடுத்தடுத்த உண்மைகளை அவர் கண்டுபிடிக்கத் துணையாக இருப்பதாகக் காட்டியிருப்பது நல்ல உத்தி.
நேர்த்தியான காட்சியாக்கம்!
சர்ச்சைக்குரிய விஷயங்களை வெறுமனே வசனங்களாகப் பேசிக் கொண்டிராமல், ஒருகட்டத்தில் மௌனத்தின் வழியாகவே அதனை உணர்த்தப் பெரும் திறமை வேண்டும். ஸ்கேம் 1992, ஸ்கேம் 2003, ஸ்கூப், லூட்டேரே போன்ற வெப்சீரிஸ்களின் வழியே சமீபகாலமாகப் பிரமாண்ட உருவெடுத்திருக்கும் இயக்குனர் ஹன்சல் மேத்தா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
கிட்டத்தட்ட முப்பதாண்டு கால திரையனுபவம், ஒரு கதையை எப்படிச் சொல்ல வேண்டுமென்ற வித்தையை அவரிடத்தில் புடம் போட்டிருக்கிறது.
‘பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ படம் முழுக்கப் பிரிட்டனில், அங்குள்ள நடிப்புக்கலைஞர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் எப்படிப்பட்ட சூழலை எதிர்கொள்கின்றனர் என்பதை அவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியைக் காட்டிச் சொல்கிறது இப்படம். அதனாலேயே இது முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு குற்றம், அது குறித்த விசாரணை, அதில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் முரண்பட்ட சிந்தனைகள், அதனால் விளையும் சிக்கல் முடிச்சுகள், அதனூடே பயணித்து உண்மையான குற்றவாளியை அடையாளம் கண்டறியும் போலீசார் என்றே ‘இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர்கள்’ அமையும். அந்த ‘பார்மெட்’டில் நேர்த்தியான காட்சியாக்கத்தைக் கொண்டதாக விளங்குகிறது ‘பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’.
இதன் திரைக்கதை மிக மெதுவாக நகரக்கூடியது. அது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.
இதன் இந்தி டப்பிங்கை விட, இந்தியும் ஆங்கிலமும் கலந்த பதிப்பைப் பார்ப்பதே சரியானதாக இருக்கும். ஏனென்றால், அதில் இயக்குனர் காட்டும் உலகத்தின் பரிமாணத்தை இன்னும் அதிகமாக உணர முடியும்.
பொழுதுபோக்கு படமொன்றை எதிர்பார்த்து ஒரு சாதாரண ரசிகர் தியேட்டருக்கு வருகையில், அவரிடம் இப்படியொரு உலகைக் காண்பிப்பது பொருத்தமாக இருக்காது. அதனால், ‘பக்கிங்ஹாம் மர்டர்ஸ்’ பார்ப்பதற்கு முன்னதாகப் படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிடுவது நல்லது. அது பிடித்துப்போனால், இப்படமும் உங்களை ஈர்க்கும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசங்கரன் பாடகலிங்கம்
திருமணமான 40 நாளில் 6 முறை மட்டுமே குளித்த கணவர்… நாற்றம் தாங்காமல் மனைவி செய்த சம்பவம்!
டெல்லி புதிய முதலமைச்சர் ஆகிறார் அதிஷி