டிவியில் ஒரு பழைய படத்தைப் பார்க்க நேர்ந்தால் உடனே சேனல் மாற்றத் தோன்றும். சில படங்கள் அதற்கு விதிவிலக்கு. அதிலொன்றுதான் கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’. ‘எ பிலிம் பை’ என்று இயக்குனர் பெயரைக் குறிப்பிடுவார்களே! அப்படி கங்கை அமரனின் பிலிமோகிராபியில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்க ஒரு படைப்பு.
1989ஆம் ஆண்டு இதே மாதம் இதே தேதியில் வெளியான இப்படம், 34 ஆண்டுகள் ஆனபின்னும் இன்றைய தலைமுறையையும் இழுத்துப் பிடிக்கிற அம்சமொன்றைத் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறது.
தில்லானா மோகனாம்பாள் தாக்கம்!
இசைக்கச்சேரிகளை நடத்தும் நாதஸ்வரம், தவில், மிருதங்க வித்வான்களையும், பரதநாட்டியம் சார்ந்த நடனக்கலைஞர், நட்டுவனார், இதர இசைக்கலைஞர்களையும் ஒருசேர பெருமைப்படுத்திய படம் ஏ.பி.நாகராஜனின் ‘தில்லானா மோகனாம்பாள்’. கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஆதாரமாகக் கொண்ட அப்படத்தில் சிவாஜி, பத்மினி இடையே இருந்த மோதல், காதல், ஊடல் காட்சிகள் திரும்பத் திரும்ப ரசித்தாலும் திகட்டாது. அதற்கு இணையாக டி.எஸ்.பாலையா, கே.சாரங்கபாணி கூட்டணியின் காமெடி அட்ராசிட்டி அக்காலத்திய இசைக்கலைஞர்களைத் திரையில் பிரதிபலித்திருக்கும்.
மேற்சொன்னவற்றை அப்படியே கிராமப்புற அனுபவங்களோடு கூடிய திரைக்கதைக்கு மடைமாற்றினால் ‘கரகாட்டக்காரன்’ திரைக்கதை கிடைத்துவிடும். இன்று ‘ரீபூட்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்களே, அதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பே கங்கை அமரன் செய்துவிட்டார். உண்மையைச் சொன்னால், அந்த வழக்கம் தேவர் பிலிம்ஸ் காலத்திற்கு முன்பிருந்தே திரையுலகில் நடைமுறையில் இருந்து வருகிறது.
தனது பேட்டியொன்றில், இந்த படத்தின் மையக்கருவைச் சொன்னது ராமராஜன் தான் என்று கூறியிருக்கிறார் கங்கை அமரன். அதாவது, நாயகனின் விருப்பத்திற்கிணங்க ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். அதேநேரத்தில், பெரிதாகக் காட்சிகளை யோசிக்காமல் கலைஞானம், கலைமணி, ஏ.வீரப்பன் என்று புகழ்பெற்ற ஸ்க்ரிப்ட் ரைட்டர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு படப்பிடிப்புக்குத் தயாராகியிருக்கிறார்.
எது தேவையோ அதை மட்டுமே படம்பிடிக்கிற வழக்கம் இருந்ததால், படப்பிடிப்புத்தளத்திலேயே எழுதுகிற பழக்கமும் அப்போதிருந்தது. ஒரு காட்சி எங்கு தொடங்கும், எப்போது முடியும், அது எந்த வகையில் அமைந்தால் ரசிகர்களைக் கவரும் என்கிற நுட்பங்களை அறிந்த கவுண்டமணி, சண்முகசுந்தரம் போன்ற நடிப்புக் கலைஞர்கள் அப்போதிருந்தார்கள். அனைத்துக்கும் மேலே, ஒரு இயக்குனராகத் தன்னை நிரூபித்து வெற்றி கண்ட ராமாராஜன் அந்தப் படத்தில் நாயகனாக இருந்தார்.
ராமராஜனின் கெட்டிக்காரத்தனம்!
வெள்ளந்தியான மனிதர் என்ற அடையாளத்தைத் தான் நடிக்கும் பாத்திரங்களுக்கான முன்மாதிரியாக வடிவமைத்துக் கொண்டவர் கே.பாக்யராஜ். அந்த குணாம்சத்துடன் நேர்மையான, எல்லோருக்கும் உதவுகிற, சொந்தங்களையும் நட்புவட்டத்தையும் தாங்கிச் சுமக்கிற பாத்திரங்களாகத் தேடித் தேடி நடித்தார் ராமராஜன்.
’கோழி கூவுது’வின் இமாலய வெற்றிக்குப் பிறகு, கங்கை அமரன் தந்த கொக்கரக்கோ, பொழுது விடிஞ்சாச்சு, தேவி ஸ்ரீதேவி, வெள்ளைப்புறா ஒன்று ஆகியன பெரிதாக வரவேற்கப்படவில்லை. அதனால், பட இயக்கத்திற்கு இடைவெளி விட்டு இசையமைப்பில் கவனம் செலுத்தினார்.
1985ஆம் ஆண்டு பி.எஸ்.வீரப்பா தயாரிப்பில் உருவான ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தில் இயக்குனராக அறிமுகமானார் ராம.நாராயணனின் உதவியாளராக இருந்த ராமராஜன். அதன் வெற்றி, இரண்டாவது படமான மருதாணியைப் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் தயாரிக்கக் காரணமானது. அதன் தொடர்ச்சியாக ஹலோ யார் பேசறது, மறக்கமாட்டேன், சோலை புஷ்பங்கள் ஆகிய படங்களை இயக்கினார் ராமராஜன். இப்படங்களுக்கு இசையமைத்தது கங்கை அமரன்.
தொடர்ச்சியாகப் படங்கள் தந்த ராமராஜனிடம் இருந்த நாயகனை, ‘நம்ம ஊரு நல்ல ஊரு’வில் வெளிக்கொணர்ந்தார் இயக்குனர் வி.அழகப்பன். அந்தப் படத்தின் வெற்றி இளைய தலைமுறையினர் மத்தியில் ராமராஜனுக்கு ஒரு பெயரைத் தந்தது. அதன் தொடர்ச்சியாக சங்கிலி முருகன் எழுதித் தயாரித்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் மீண்டும் டைரக்ஷனை கையிலெடுத்தார் கங்கை அமரன்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவு உதவியாளராகப் பணியாற்றிய ரவீந்தர், படப்பிடிப்புத்தளத்தில் எந்தவித பந்தாவும் வெட்கமும் இன்றி தான் அணிந்திருந்த ஷார்ட்ஸ் உடன் ராமராஜன் திரிந்ததை சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் நினைவுகூர்ந்திருந்தார். தொழிலில் அவரது அர்ப்பணிப்பு எப்படியிருந்தது என்பதற்கான உதாரணம் அது. இன்றுவரை, அவருக்கு அடைமொழியாகவும் இருப்பது அந்த ஆடைதான். ஆனால், இப்படித்தான் நடக்குமென்று தெரிந்தும் சிறிதும் கவலைப்படாமல் தனக்கு வெற்றியைத் தேடித் தரும் கதைகளில் கவனம் செலுத்தியது ராமராஜனின் கெட்டிக்காரத்தனம். அதற்குக் கைமேல் பலன் கிடைத்தது.
1987ஆம் ஆண்டு சித்திரைத் திருநாளில் வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ தியேட்டர்களில் கூட்டத்தை நிறைத்தது. அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் கங்கை அமரனுடன் மீண்டும் ராமராஜன் இணைந்த ’செண்பகமே செண்பகமே’ பெரிய வெற்றியைச் சுவைத்தது.
அதற்கடுத்து பாண்டியன், ரகுவரன், கல்லாப்பெட்டி சிங்காரம், கே.கே.சௌந்தர், மீனா உள்ளிட்டோரைக் கொண்டு ‘கோயில் மணியோசை’ படத்தைத் தந்தார் கங்கை அமரன். அந்த படத்திற்கு அவரே இசையமைத்தார். ஆனால், அது தோல்வியைச் சந்தித்தது. அதனால், ஒரு வெற்றியைத் தர வேண்டிய கட்டாயத்தில் கங்கை அமரன் இருந்தபோது, ராமராஜன் சொன்ன ஐடியாவே ‘கரகாட்டக்காரன்’ படமாக மாறியது.
மாயாஜாலம் நிகழ்த்தும் திரைக்கதை!
‘கரகாட்டக்காரன்’ கருவைக் கங்கை அமரன் சொன்னபோது, முழுக்கதையையும் கேட்காமல் அதன் போக்கைத் தானாக அனுமானித்து பாடல்களைத் தந்திருக்கிறார் இளையராஜா. இந்தப் படத்தில் முத்தையா, காமாட்சி, தனலட்சுமி, தங்கம் என்று பாத்திரப் பெயர்கள் சாதாரண மக்களுக்கு நன்கு தெரிந்தவையாக இருந்தன. கவுண்டமணி, செந்தில் நடித்த பாத்திரங்கள் முறையே தவிலார், நாதஸ் என்றே குறிப்பிடப்பட்டன. அதாவது, அப்பாத்திரங்கள் இசைத்த வாத்தியங்களின் பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டன. இன்றும் நட்பு வட்டத்தில் கிண்டலடிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்றாக நாதஸ் விளங்குவதே, அப்பாத்திரங்களின் அற்புதமான வார்ப்புக்குக் கிடைத்த வெற்றி.
அடூர் கோபாலகிருஷ்ணன் படமொன்றில் பார்த்த நகைச்சுவையைப் பிரதியெடுத்த ‘வாழைப்பழ காமெடி’ ஏ.வீரப்பனின் எழுத்தாக்கத்தில் வேறொன்றாக மலர்ந்தது. படத்திலேயே இடம்பெறாத ’சொப்பன சுந்தரி’ என்ற பாத்திரப் பெயரும், அதனை மையப்படுத்திய கார் காமெடியும் இன்றும் பல படங்களில் எடுத்தாளப்படுகின்றன.
இந்தப் படத்தில் சண்முகசுந்தரம் வீட்டுக்கு ராமராஜன் முதன்முறையாகச் செல்லும் காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது. கவுண்டமணி, செந்திலின் ‘எலி – பூனை’ ரக அட்டகாசங்களோடு காமெடியாகத் தொடங்கி, பின்னர் கனகாவை ராமராஜன் பார்த்தபிறகு காதலாக மாறி, இறுதியில் காந்திமதி பாத்திரம் பற்றிய தகவலைச் சொல்லத் தொடங்கியதும் சென்டிமெண்டுக்கு நகரும். ஒரு காட்சி குறிப்பிட்ட சுவையோடுதான் இருக்க வேண்டுமென்ற நியதிக்கு எதிரானது இது. ஆனாலும், அதில் நடித்தவர்களின் ஈடுபாட்டினால் வேறொன்றாக உருமாறியிருக்கும்.
’கோயில் மணியோசை’ தந்த அனுபவத்தினாலோ என்னவோ, இந்தப் படத்தில் கதை, பாத்திரங்கள் குறித்த எவ்வித விளக்கத்தையும் முன்வைக்காமல் காட்சிகளை அமைத்திருப்பார் கங்கை அமரன். ரசிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்ற அணுகுமுறையுடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு எளிய பொழுதுபோக்குப் படம் என்பதை உணர்த்தும்விதமாக, படத்தின் தொடக்க விழா காட்சிகளோடு ‘பாட்டாலே புத்தி சொன்னான்’ பாடல் உடன் டைட்டில் ஓடும். நாயகி கனகாவை முதன்முறையாகத் திரையில் அறிமுகப்படுத்துவதே முதல் காட்சி. அவர் ஒரு கரகாட்டக் கலைஞர் என்பதைச் சொன்னபிறகு, வில்லனாக வரும் சந்தானபாரதியைத் திரையில் காட்டியிருப்பார் கங்கை அமரன்.
வில்லனின் குயுக்தியாலேயே, கோயில் கொடைவிழாவில் பங்கேற்க ராமராஜன் கோஷ்டிக்கு அழைப்பு விடுக்கப்படும். அதன் தொடர்ச்சியாக, அந்தக் குழுவினர் ரிப்பேர் ஆன காரில் ஊருக்கு வருவது காட்டப்படும். அதன்பிறகு வாழைப்பழ காமெடியும், அதற்கடுத்து ராமராஜனும் கோவை சரளாவும் கரகம் ஆடுவது காட்டப்படும். ’நந்தவனத்தில் வந்த ராஜகுமாரி’ பாடல் துணுக்கிலேயே கனகாவுக்கும் ராமராஜனுக்கும் இடையே ஈர்ப்பு முளைப்பது சொல்லப்பட்டுவிடும்.
இப்படி முதல் இருபது நிமிடங்களிலேயே பாதிக்கதையைச் சொல்லி முடித்துவிட்ட காரணத்தால், அடுத்துவரும் காட்சிகளோடு ரசிகர்கள் ஒன்றப் பெரிதாகத் தடைகள் இல்லாமல் போயிருக்கும். அதனை இன்னும் பிரமாண்டப்படுத்துவது போல ‘மாங்குயிலே பூங்குயிலே’ இடம்பெற்றிருக்கும்.
யோசித்துப் பார்த்தால், இந்தக் காட்சிகளின் அமைவு ஒரு மாயாஜாலம் தான். இப்படியொரு படத்தை ரசிகர்கள் கொண்டாடாமல் போனால்தான் ஆச்சர்யம்!
கூட்டுழைப்பின் மகத்துவம்!
கரகாட்டக்காரன் படத்தை உருவாக்கும் முன்னரே கிராமப்புற வாத்தியங்களை முழுமையாகப் பயன்படுத்தி இசையமைக்க இளையராஜாவும் கங்கை அமரனும் முடிவு செய்திருந்தனர். பாடல்களைப் போன்றே ‘கரகாட்டக்காரன்’ தீம் இசையும் அதே பாணியில் இருக்கும். இந்தப்படம் முழுமை பெற்றதில் பலருடைய பங்குண்டு. தாயின் சமையல் போல அனைவரும் ஆத்மார்த்தமான அன்பைக் கொட்டினால் மட்டுமே அது சாத்தியம்.
கிளைமேக்ஸில் வரும் ‘மாரியம்மா’ பாடல் முழுவதிலும் ராமராஜன், கனகாவை நெருப்பின் மீது நடக்க வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் கங்கை அமரன். திரையில் அந்த இடம் வரும்போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டுமென்று சொல்லி, அதற்கான பில்டப்பாக பாடலின் பெரும்பகுதி இருக்கும்வகையில் மாற்றச் சொன்னவர் கவுண்டமணி தானாம். கங்கை அமரனே பகிர்ந்த தகவல் இது. ஒரு நடிகர் என்பதையும் தாண்டி ஒரு தொழில்நுட்பக் கலைஞரைப் போன்று கவுண்டமணி சிந்தித்திருக்கிறார் என்பதற்கான சான்று இது.
இப்படிப்பட்ட பங்களிப்பும் கூட்டுழைப்புமே ஒரு படத்தைக் காவியமாக மாற்றியது. சுமார் இருபது லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட இப்படம் 28 நாட்களில் தயாராகியிருக்கிறது.
அதே காலகட்டத்தில் அர்ஜுன், சீதாவை வைத்து ‘அண்ணனுக்கு ஜே’ படத்தையும் கங்கை அமரன் இயக்கியிருக்கிறார். இந்த தகவலே ’கரகாட்டக்காரன்’ படத்திற்கு சிறப்பு அந்தஸ்து எதையும் இயக்குனர் தனியாகத் தரவில்லை என்பதைக் காட்டுகிறது. அதாகப்பட்டது, ‘பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டும்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் உருவானது ‘கரகாட்டக்காரன்’ என்பதாகவே இதனை நோக்க வேண்டும்.
கோயில் மணியோசை தந்த தாக்கத்தினால் இந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களது கணிப்பை மீறி, காலத்தால் அழியாத வெற்றியைப் பெற்றது ‘கரகாட்டக்காரன்’. ‘ரிப்பீட்டு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தந்த படங்களில் இதுவும் ஒன்று.
’கரகாட்டக்காரன்’ தாக்கத்தில் கங்கை அமரன் – ராமராஜன் கூட்டணி தந்த ‘வில்லுப்பாட்டுக்காரன்’, ‘தெம்மாங்கு பாட்டுக்காரன்’ இரண்டுமே இதே மாயாஜாலத்தை நிகழ்த்தவில்லை. ’நாளை மற்றுமொரு நாளே’ என்ற எண்ணத்துடன் இந்த நொடியில் கவனம் செலுத்தும் உழைப்பு அவற்றில் கொட்டப்படவில்லை. அதற்கு மாறாக அமைந்த படங்களே ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.
ராமராஜன் நடித்தவற்றில் ‘எங்க ஊர் பாட்டுக்காரன்’, ‘செண்பகமே செண்பகமே’, ‘கரகாட்டக்காரன்’ மூன்றும் எனது ஆல்டைம் பேவரைட். மூன்றையும் இயக்கியது கங்கை அமரன் தான். மூன்றிலுமே கூட்டுழைப்பின் மகத்துவம் தெரியும். படத்தில் பங்கேற்றவர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் கூட பல கதைகளைப் பகிரும் வகையில் அனுபவங்களை அள்ளித் தந்த திரைப்படம் ‘கரகாட்டக்காரன்’. காலத்தால் அழியா திரைக் காவியங்கள் மட்டுமே நிகழ்த்தும் மாயாஜாலம் அது!
உதய் பாடகலிங்கம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் வழக்கில் இன்று தீர்ப்பு!