தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் கபில் ரிட்டர்ன்ஸ் படத்தை பேராசிரியர் ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
இவ்விழாவில் பேராசிரியர் சுப வீரபாண்டியன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், பட அதிபர் என்.விஜயமுரளி நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சுப வீரபாண்டியன்
நான் இந்த விழாவில் கலந்து கொள்வதை பற்றி சமூக வலைதளத்தில் அழைப்பை பதிவிட்டிருந்தேன். இதில் கேள்விகள் எழுப்பப்பட்டது.
திரைப்பட விழாவில் நீங்கள் எப்படி ?அதுவும் ஆத்திகரான இயக்குனர் பேரரசும், நீங்களும் ஒரே மேடையில் எப்படி? என பல்வேறு விதமாக கேள்விகள் எழுப்பப்பட்டது.
வெவ்வேறு கட்சிகள் என்பது சினிமா மேடைக்கு அல்ல. எஜமான், சின்ன கவுண்டர் படத்தை நான் உட்கார்ந்து பார்த்தவன். அந்த வாய்ப்பு இந்த மேடையில் எனக்கு கிடைத்துள்ளது.
திரைப்படம் நடிக்காமல் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்திருக்க முடியுமா? அதில் வெற்றி தான் பெற்றிருக்க முடியுமா? நாம் கலையை நேசிப்பதை விட கலைஞர்களின் நிலையை சிறப்பாக நேசிக்க கற்றுக் கொண்டிருக்கின்றோம்.
அதனால் ஆயிரம் மேடைகளில் பேசுவதை படத்தில் அரை மணி நேரத்தில் கூறிவிடுகிறார்கள். படத்தை ஒரு முறை பார்த்தால் போதும் அது மனதில் நிற்கும்.
திரைப்படம் எடுப்பது நல்ல தொழில் தான். நல்ல படைப்புகளை கொண்டு சேர்த்தால் மக்களுக்கு போய் சேரும். இதை கருத்தில் கொண்டுதான் நல்ல கதையை எடுத்திருக்கிறார் ஸ்ரீனி சௌந்தரராஜன்.
அதுவே மிகச்சிறந்த தொண்டாக நான் பார்க்கிறேன். படத்தின் பாடல்களை ஒரு முறை கேட்டேன், நான்கு ஐந்து முறை கேட்கத் தோன்றியது இதுவே இந்த படத்திற்கு வெற்றி.
இயக்குனர் பேரரசு
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர் ஐயா சுப.வீ தான். அவருடைய வாழ்த்து படத்திற்கு முக்கியமானது. நான் கடவுள் ஏற்பாளர்,அவர் கடவுள் மறுப்பாளர்.
சுப.வீ ஐயா நல்லதையே நினைப்பவர்.அவரின் மனசு தான் கடவுள் போன்றது. எனவே கடவுளையும் வணங்குகிறேன். அவரையும் வணங்குகிறேன்.
படத்தை எடுத்துக் கொண்டால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்றாற்போல் படம் எடுத்திருக்கிறார். இயக்குனர் பேராசிரியர் ஸ்ரீனி.சௌந்தரராஜன். நான் படம் பார்க்க சென்றால் என் மகளோடு தான் செல்வேன். ஆகவே பெண் குழந்தைகளும் பார்க்கும் படமாக இப்படம் உள்ளது. இது இளைஞர்களும் பெற்றோர்களும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான படம். மனதார வாழ்த்துவதில் நான் பெருமை அடைகிறேன்.
இராமானுஜம்
நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரம்!
பள்ளி சீரமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்: காரணம் என்ன?