காந்தாரா திரைப்படத்தின் எதிரொலியாக தெய்வ நர்த்தகர்களுக்கு ரூ.2000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கன்னட மொழியில் உருவாகிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான காந்தாரா கடந்த மாதம் செப்டம்பர் 30 அன்று கன்னட மொழியில் வெளியானது.
முதல் வாரத்தில் பெரிதும் பேசப்படாத இந்த திரைப்படம் அதற்கடுத்த வாரத்தில் இருந்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தது. இதனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் படத்தின் வசூல் அதிகரித்தது.
தமிழ் ஹீரோக்கள் பாராட்டிய காந்தாரா!
இதனைதொடர்ந்து படத்தினை தயாரித்த பிரபல ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் படத்தினை கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியானது.
வெறும் ரூ.16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் சமீபத்தில் இந்தியா பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டியது. மேலும் மற்ற மொழிகளிலும் இத்திரைப்படம் நல்ல வசூலை குவித்து வருவது கன்னட திரையுலகை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டியின் அசாத்தியமான நடிப்பினை கண்ட தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் தனுஷ், கார்த்தி, எஸ்.ஜே சூர்யா ஆகியோர் காந்தாரா திரைப்படத்தை வெகுவாக பாராட்டினார்.
மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை!
மேலும் பழங்குடி மக்களுக்கும், பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் தெய்வ நர்த்தகர்களின் வாழ்க்கை முறையும் இடம்பெற்றது.
இந்நிலையில் அதன் எதிரொலியாக, ”60 வயதுக்கு மேற்பட்ட ‘தெய்வ நர்த்தகர்களுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
ஆவி வழிபாடு இந்து தர்மத்தின் ஒரு பகுதி!
இதுகுறித்து ட்விட்டரில் பெங்களூரு பாஜக எம்பி பிசி மோகன், “காந்தாரா திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட ஆவி வழிபாட்டு சடங்கு இந்து தர்மத்தின் ஒரு பகுதியாகும்.
அதன்படி பாஜக தலைமையிலான கர்நாடகா அரசு 60 வயதுக்கு மேற்பட்ட ‘தெய்வ நர்த்தகர்களுக்கு’ ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகையை அறிவித்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை காந்தாரா படக்குழுவினருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் ஏற்கெனவே கிராமப்புற கோயில்களில் எவ்வித ஊதியமின்றி பணியாற்றிவரும் பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
”நீங்களா! எனக்கு வேண்டவே வேண்டாம்!”: மணமகள் கொடுத்த விளம்பரத்தால் அதிர்ச்சி!
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய சாதனை படைத்த நியூசிலாந்து!