‘ஜெய்பீம்’, ‘கேஜிஎஃப் 2’ படங்களை பின்னுக்குத் தள்ளி கன்னட படமான ‘காந்தாரா’ ஐஎம்டிபி தளத்தில் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளது.
செப்டம்பர் 30 அன்று கன்னட திரைப்படம் ‘காந்தாரா’ வெளியானது.
பண்ணையாருக்கும் பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் பதிவு செய்திருந்த இந்தப் படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதைநாயகனாக நடித்திருக்கிறார்.
கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.
காலங்காலமாக இந்திய சினிமாவில் கூறப்பட்டுவரும் நில அபகரிப்பு, அரசு நிர்வாகம், நிலச்சுவான்தார்கள், பூர்வகுடிகளான பழங்குடியின மக்களை பற்றிய கதை தான் இப்படம்.
சாதாரண திரைக்கதை மசாலா தனம் இன்றி திரைமொழியாக்கப்பட்டு அது மக்களுக்கு பிடித்து விட்டால் கல்லா வழியும் என்பதற்கான சமீபகால உதாரணமாக உள்ளது காந்தாரா.
சுமார் ஐந்து கோடிக்கும் குறைவான செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கர்நாடகாவில் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வருகிறது.
காந்தாரா படத்தின் வெற்றியை கேள்விப்பட்டு தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சென்னையில் இருந்து பெங்களூர் சென்று இந்தப் படத்தை பார்த்து வந்துள்ளனர்.
கர்நாடகாவை கடந்து வெளி மாநிலங்களிலும் படத்தின் தாக்கம் இருப்பதை உணர்ந்த படக்குழு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து இன்று (அக்டோபர் 15) வெளியிட்டுள்ளது
இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்கில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தின் ரேட்டிங் 8.9. பெற்று இந்திய சினிமாவில் முதலிடத்தில் இருந்து வந்தது
இதற்கு அடுத்தபடியாக ‘கேஜிஎஃப் 2’ திரைப்படம் 8.4 ரேட்டிங்குடன் இரண்டாவது இடத்தில் இருந்தது மூன்றாமிடத்தில் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ 8 ரேட்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், மூன்று படங்களையும் பின்னுக்குத் தள்ளி 9.5 ஐஎம்டிபி ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது ‘காந்தாரா’.
இந்திய சினிமாவில் அதிக ஐஎம்டிபி ரேட்டிங் கொண்ட படமாக இது கருதப்படுகிறது.
ஐஎம்டிபி ரேட்டிங் என்பது படம் பார்க்கும் பார்வையாளர்களின் கருத்து, விமர்சனங்கள் அடிப்படையில் வழங்கப்படுவது பல மொழிகளில் வெளியாகி வணிகரீதியாக வசூலை குவித்த,
பாகுபலி, 2.0, ஆர், ஆர், ஆர், புஷ்பா போன்ற படங்களுக்கு கிடைக்காத கௌரவம் தமிழில் ஓடிடியில் மட்டும் வெளியான ஜெய்பீம், அதனை தொடர்ந்து கன்னடத்தில் மட்டும் வெளியான காந்தாரா படத்திற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!