காப்புரிமை சர்ச்சையில் சிக்கிய காந்தாரா படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் மீதான தடையை நீக்கி கோழிக்கோடு நீதிமன்றம் நேற்று (நவம்பர் 25 ) அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனால் காந்தார படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் காந்தாரா திரைப்படம் வெளியானது. கர்நாடகாவில் மிகப் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. வெளியான அனைத்து மொழிகளிலும் காந்தாரா திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார்.
படத்தின் தியேட்டர் வசூல் மட்டும் 400 கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கேரளாவைச்சேர்ந்த கோவிந்த் வசந்தாவின் இசைக்குழுவான ”தாய்க்குடம் பிரிட்ஜ்” இசைத்து யூடியூப்பில் வெளியான ’நவரசம்’ பாடலும் காந்தாரா படத்தில் வரும் ’வராஹ ரூபம்’ பாடலும் ஒரே மாதிரியாக இருப்பதாக காப்புரிமை சர்ச்சை கிளம்பியது.
இதையடுத்து ‘தாய்க்குடம் பிரிட்ஜ்’ சட்டப்பூர்வமாக நீதிமன்றத்தை அணுகிய நிலையில் ‘வராஹ ரூபம்’ பாடலை ஒலிபரப்ப தடைவிதித்து கோழிக்கோடு முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
நவம்பர் 24 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான காந்தார படத்தில் ’வராஹ ரூபம்’ பாடலின் ஒரிஜினல் ட்ராக் மாற்றியமைக்கப்பட்டு வெளியிட்டு இருந்தது ரசிகர்களை ஏமாற்றமடையச்செய்தது. இதனால் ரசிகர்கள் மீண்டும் அந்த பாடலுடன் “காந்தாரா” படத்தை வெளியிடுமாறு கோரிக்கை வைத்து சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து காந்தாரா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோழிக்கோடு நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில் எந்த காப்புரிமை சட்டத்தையும் மீறவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம் , ‘மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து , மனுதாரர் ஏன் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார் என்று தெரியவில்லை . மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது.
அவர்களின் உத்தரவு இறுதியானது அல்ல. அங்கே ஏன் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, எதிர் அறிக்கை பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்து, அதன் முன் அனைத்து வாதங்களையும் எழுப்புவது மனுதாரரின் பொறுப்பாகும் ’என்று கூறியது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நேற்று (நவம்பர் 25) இரு தரப்பு வாதத்தையும் கோழிக்கோடு நீதிமன்றம் விசாரித்தது அப்போது ’வராஹ ரூபம் ’பாடல் மீதான தடையை நீக்கி முக்கிய உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை காந்தாரா ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர் வரவேற்றுள்ளனர்.

‘அதாவது தாய்க்குடம் பிரிட்ஜ் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற எல்லை வரம்புக்கு உட்பட்டது அல்ல’ என்று கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
அதேநேரம் எர்ணாகுளத்தில் உள்ள கமர்சியல் நீதிமன்றத்தில் அடுத்த 14 நாட்களுக்குள் தாய்க்குடம் பிரிட்ஜ் இசைக் குழுவினர் முறையீடு செய்து கொள்ளலாம் என்ற வழிகாட்டுதலையும் இந்த வழக்கில் கோழிக்கோடு நீதிமன்றம் கூறியுள்ளது. கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம்தான் காந்தாரா திரைப்படத்தையும் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காதலனைத் தேடி 5000 கி.மீ பயணம்: மெக்ஸிகன் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
“இந்தியா முன் புதிய வாய்ப்புகள் குவிகின்றன” – பிரதமர் மோடி