நடிகர் ரஜினி காந்த்தை சந்தித்து காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார்.
கன்னட மொழியில் வெளியான ‘காந்தாரா’ படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். செப்டம்பர் 30 அன்று கன்னடத்திலும் அக்டோபர் 15 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் வணிக ரீதியாக எல்லா மொழிகளின் வெளியீட்டில் வெற்றி பெற்றுள்ளது.
திரைக்கலைஞர்களை பொறுத்தவரை பிரமிப்புடன் படத்தை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
16 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட காந்தாரா இதுவரை உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
காந்தாரா பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படம் குறித்து வெளியிட்ட பதிவில், “இந்த படத்தில் தெரிந்ததை விட, தெரியாததை இதைவிட சிறப்பாக சொல்லியிருக்க முடியாது. இப்படம் இந்தியாவின் மிகச் சிறந்த படைப்பு.
‘காந்தாரா’ எழுதி, இயக்கி, நடித்துள்ள ரிஷப் ஷெட்டிக்கு பாராட்டுக்கள். படக்குழுவினருக்கு மனதார பாராட்டுக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தனது வலைத்தளப் பக்கத்தில் நன்றி தெரிவித்த ரிஷப்ஷெட்டி இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நீங்கள் உங்களிடமிருந்து வாழ்த்து கிடைப்பதை பாக்கியமாக கருதுகிறேன் எட்டு வயதில் இருந்து நான் உங்கள் ரசிகன் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ‘காந்தாரா’ படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி நேற்று (அக்டோபர் 29) சென்னையில் போயஸ் கார்டன் இல்லத்தில், ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதன்பிறகு ‘காந்தாரா’ படம் குறித்து பல்வேறு விஷயங்களை ரிஷப் ஷெட்டியிடம் ரஜினி கேட்டு தெரிந்துக்கொண்டார். ரஜினியுடனான இந்த சந்திப்பு ரிஷப் ஷெட்டியை மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளது.
இராமானுஜம்