நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு விதிமுறைகளை மீறியதாக கூறி முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கன்னட மொழியில் வெளியானது.
கன்னட மொழியில் நல்ல வரவேற்பைப் பெற்ற காந்தாரா இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் எனப் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு 500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. காந்தாரா படத்தில் வனத்துறை அதிகாரி முரளிதர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் குமார் நடித்திருந்தார்.
இவர் ட்விட்டர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன் வெளிப்படையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நடிகர் கிஷோர் குமாரின் ட்விட்டர் கணக்கைத் தேடினால், ”ட்விட்டரின் விதிகளை மீறியதற்காக இந்த ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது” என்று காட்டுகிறது.

இவர் ஜனவரி 1 ஆம் தேதி அன்று, காந்தாரா கடவுளை அவமதித்த ஒருவருடைய மரணம் தொடர்பான வீடியோ குறித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அது கடவுளாக இருந்தாலும் சரி, பேயாக இருந்தாலும் சரி. அதை நாம் ஏன் வெறும் நம்பிக்கையாக மட்டும் பார்க்கக்கூடாது.
கடவுள் இருப்பதாக நீங்கள் நம்பினால் இருக்கும், இல்லை என்றால் இல்லை. ஆனால் அதே சமயம் இக்கட்டான நேரங்களில் நம்மில் பலருக்குத் தைரியம் தரும் நம்பிக்கைகளை அவமதிக்க வேண்டிய அவசியமில்லை.
சமூக விரோத சக்திகளைச் சட்டம் கையாளட்டும். நம்பிக்கை என்பது தனி நபரின் விருப்பமாக இருக்கட்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
நாடக நடிகராகத் தனது திரைப்பயணத்தை கர்நாடகாவில் தொடங்கிய நடிகர் கிஷோர் குமார் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து தென்னிந்தியாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.
இவர் 2007-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தினை தொடர்ந்து ஜெயம் கொண்டான், வெண்ணிலா கபடிக்குழு போன்ற வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரைத்துறையில் பிரபலமானவர்.
இவர் திரைத்துறை மட்டுமின்றி 2019-ம் ஆண்டு ஹை ப்ரிஸ்ட்ஸ் என்ற ஜீ நிறுவனத்தின் இணையதள தொடரிலும் நடித்துள்ளார். திரையுலகில் பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமான இவர், தென்னிந்தியாவில் பல விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
ராஜேஷ் தாஸ் வழக்கு : மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு!
“நீதிமன்றம் கிடங்கல்ல”- நீட் வழக்கில் தமிழக அரசுக்கு எச்சரிக்கை!