இன்னொரு ‘தீரன் அதிகாரம் ஒன்று’!
காவல் துறையினரின் பராக்கிரமங்களைக் காட்டும் படங்கள் உலகம் முழுக்கப் பல மொழிகளில் வந்து கொண்டிருக்கின்றன. ஹீரோயிசத்தை முன்னிறுத்தும் கமர்ஷியல் படங்கள், காவல் துறை செயல்பாட்டை விவரிக்கும் யதார்த்தப் படங்கள் என்று அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம். மிக சில படங்கள் இந்த இரண்டையும் சேர்த்தாற்போல உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும். காவல் துறையினராக வரும் கதாபாத்திரங்களைச் சிலாகிப்பதுடன், தினசரி வாழ்வை எதிர்கொள்வதில் அவை எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் பேசும்.
அதிலொன்றாக அமைந்துள்ளது ரோனி டேவிட் ராஜ் திரைக்கதையில், சுஷின் ஷ்யாம் இசையமைப்பில், ரஹீல் ஒளிப்பதிவில், ரோபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில், மம்முட்டி தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கண்ணூர் ஸ்குவாட்’.
இந்த படத்தின் ட்ரெய்லர், தமிழில் வெளியான போது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை நினைவூட்டியது. படமும் அப்படித்தான் இருக்கிறதா?
தனிப்படையின் சாகசம்!
கண்ணூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணலால் (விஜயராகவன்) தலைமையில் ‘கண்ணூர் ஸ்குவாட்’ எனும் தனிப்படை உருவாக்கப்படுகிறது. இரண்டு பிரிவாக இயங்கும் இப்படையில், முதல் பிரிவுக்கு ஏஎஸ்ஐ ஜார்ஜ் மார்ட்டின் (மம்முட்டி) தலைமை வகிக்கிறார். ஜெயகுமார் (ரோனி டேவிட் ராஜ்), ஜோஸ் சகாரியா (அசீஸ் நெடுமங்காடு), முகம்மது ஷாபி (சபரீஷ் வர்மா) ஆகிய கான்ஸ்டபிள்கள் அதில் இருக்கின்றனர்.
காவல் துறையின் மிகச்சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிந்த அனுபவம் இத்தனிப்படைக்கு உண்டு. அதற்காக, வெளியுலகம் அறியாத பல்வேறு சாகசங்களையும் அது படைத்துள்ளது.
காசர்கோட்டைச் சேர்ந்த ஒரு இஸ்லாமிய அரசியல் பிரமுகரின் கொலை வழக்கும் அதிலொன்று. மத அரசியல் அடிப்படையில் அக்கொலை நிகழ்ந்ததாக மாநிலம் முழுவதும் எதிர்ப்பு உருவானநிலையில், குற்றவாளிகள் குறித்த சிறு துப்பு கூட கிடைக்காமல் காவல் துறை திணறுகிறது.
அந்த நேரத்தில், காசர்கோடு காவல் கண்காணிப்பாளர் மனுநீதிச்சோழனிடம் (கிஷோர்) ‘கண்ணூர் ஸ்குவாட் ஏ டீமிடம் இவ்வழக்கு விசாரணையை ஒப்படைக்கலாமா’ என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. அவர் சரி என்று சொன்ன கணத்தில் இருந்து, அக்குழுவினரின் இன்னொரு சாகசம் தொடங்குகிறது.
கொலை நிகழ்ந்த வீட்டின் கழிவறையில், ஒரு நபர் சிறுநீர் கழித்ததைத் தவிர வேறு எந்த தடயங்களும் கிடைக்காத நிலை. அதையடுத்து, அந்த வட்டாரத்தில் ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்படுகின்றன. கொலை நிகழ்ந்தபிறகு பயன்படுத்தப்படாத மொபைல் எண்களைத் தனியே பிரித்தெடுத்து, அவற்றில் இருந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்த சிறு தகவலை அறிகிறது ‘கண்ணூர் ஸ்குவாட்’,
அதன் தொடர்ச்சியாக, அமீரகத்தில் பணியாற்றச் சென்ற, கேரளாவைச் சேர்ந்த அமீர், ஜூபி என்ற இரண்டு நபர்கள்தான் இக்கொலையில் பிரதானக் குற்றவாளிகள் என்பதைக் கண்டறிகிறது. அவர்களைத் தேடிப் பிடிப்பதுதான், இப்படத்தின் மீதிக் கதை.
’கண்ணூர் ஸ்குவாட்’ எனும் பெயரில் கேரளாவில் இயங்கிய காவல்துறை தனிப்படை, 2013ஆம் ஆண்டு திரிகாரிபூரில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கு விசாரணையை அது கையாண்ட விதம் தொடர்பான தகவல்கள், இது ஒரு உண்மைக்கதை என்பதனைப் பறை சாற்றுகின்றன. அதுவே, திரைக்கதையின் ஓட்டத்தோடு நம்மை ஒன்றியிருக்கச் செய்கிறது.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
அசத்தும் ஒளிப்பதிவு!
ரோர்சா, நண்பகல் நேரத்து மயக்கம் என்று வெவ்வேறு திசைகளில் நின்ற இரு படங்களைத் தனது ‘மம்முட்டி கம்பெனி’ மூலம் தயாரித்து நடித்த மம்முட்டி, இதில் இன்னொரு காட்சியனுபவத்தைப் பெற வகை செய்திருக்கிறார். மேற்சொன்ன படங்களைப் போலவே, இதிலும் அவருடன் நடித்த சக கலைஞர்களுக்குச் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது இன்னொரு சிறப்பு.
அதைத் தாண்டி, மம்முட்டி சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இந்த வயதிலும் ஒரு வெற்றிகரமான படத்தில் தன்னைப் பொருத்திக் கொள்கிற வித்தையை அவர் கைக்கொண்டிருப்பது நம்மை ஆச்சர்யப்படுத்தும் விஷயம்.
பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் சிறிய அளவில் திரைக்கதையில் உண்டென்றபோதும், படம் முழுக்க ஆண்கள் வாசம் தான். அதற்கேற்ப ரோனி டேவிட் ராஜ், அஜீஸ், சபரீஷ் மூவரும் மம்முட்டி உடன் பெரும்பாலான காட்சிகளில் இடம்பெற்றிருக்கின்றனர்.
அர்ஜுன் ராதாகிருஷ்ணன், துருவன் இருவரும் இதில் வில்லன்களாக நடித்துள்ளனர். மலையாள நடிகர் விஜயராகவன், கிஷோர் ஆகியோருக்கும் இத்திரைக்கதையில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இந்த தலைமுறையினரின் மனம் கவர்ந்த சன்னி வெய்ன், ஷைனி டாம் சாக்கோ ஆகியோரும் ஆளுக்கொரு காட்சியில் தலைகாட்டியுள்ளனர். இவர்கள் தவிர சிறு வேடங்களில் நடித்தவர்கள், வந்து போனவர்கள் எண்ணிக்கை நிச்சயம் இரண்டு டஜனை தாண்டும்.
ஒளிப்பதிவாளர் முகம்மத் ரஹீல் இப்படத்தின் இன்னொரு நாயகன் என்று சொன்னால் அது மிகையல்ல. பல களங்களைக் காட்டியபோதும், காட்சிகளின் தன்மையை நம்முள் எளிதாக உணர்த்துகிறது அவரது உழைப்பு. ஒரு காட்சியில் பரபரப்பு அதிகம் என்றால், முதல் ஷாட்டில் இருந்தே அதனைத் தெரிவித்துவிடுகிறது அவரது ஒளிப்பதிவு.
ஒளிப்பதிவுக்கு ஏற்ற களத்தை அமைத்துத் தந்ததில் முக்கியப் பங்கு வகிக்கிறார் தயாரிப்பு வடிவமைப்பாளர் ஷாஜி நெடுவில்.
படத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களைக் கவர வேண்டும் என்பதற்காக சுப்ரீம் சுந்தர், ராஜசேகர், கனல் கண்ணன், ஜாலி பாஸ்டியன், ரன் ரவி, பிசி ஸ்டண்ட்ஸ் ஆகியோரோடு இணைந்து இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். அதனால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் உள்ளது.
படத்தொகுப்பாளர் பிரவீன் பிரபாகர், மிகக்கவனமாக ஒவ்வொரு ஷாட்டையும் கோர்த்திருக்கிறார்.
திரைக்கதை எந்த இடத்திலும் தொய்வைச் சந்தித்துவிடக் கூடாது என்பதில் கவனம் காட்டியிருக்கிறது சுஷின் இசையமைப்பு. அவரது பின்னணி இசை சில இடங்களில் நம்முள் துள்ளலை விதைக்கிறது.
’புதிய நியமம்’ தொடங்கி ‘ஜான் லூதர்’ வரை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ரோபி வர்கீஸ் ராஜ், ‘கண்ணூர் ஸ்குவாட்’ படத்தில் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.
ஒரு உண்மையான நிகழ்வினைத் திரையில் யதார்த்தம் போன்று காட்டியதுடன், சரியான அளவில் ஹீரோயிசம் கலந்து தந்த வகையில் பார்வையாளர்களுக்கு ‘ஆக்ஷன் விருந்து’ தந்திருக்கிறார். இந்த பாணியை அவர் அடுத்துவரும் படங்களிலும் தொடர வேண்டும்.
தீரனின் பிரதிபலிப்பு!
ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் ஞாபகம் சட்டென்று வரும் அளவுக்கு அமைந்துள்ளது ‘கண்ணூர் ஸ்குவாட்’ ஏற்படுத்தும் காட்சியனுபவம். மம்முட்டி உடன் வரும் மூன்று பேருக்கும் திரைக்கதையில் சம முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது மட்டுமே இதிலுள்ள வித்தியாசம். மற்றபடி, கொலை மற்றும் கொள்ளைக்கான துப்பு கண்டறிவதில் தொடங்கி தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டுவருவது வரை ’இன்னொரு தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகவே விளங்குகிறது இப்படம்.
காவல் துறையைப் பெருமைப்படுத்தும் விதமான கதையமைப்பைக் கொண்டபோதும், இப்படத்தில் அதன் மீதான விமர்சனங்களும் இடம்பெற்றுள்ளன. விசாரணையின் போது போலீசார் மேற்கொள்ளும் சில கொடூரமான செயல்முறைகளும் திரையில் காட்டப்பட்டுள்ளன. காவல்துறையினரை ஹீரோக்களாக சித்தரிக்கும் படங்களில் அவை தவிர்க்கப்படுவதோ அல்லது வேறுவிதமாகக் காட்சிப்படுத்தப்படுவதோ நிகழும். இப்படக்குழு அவ்வழக்கத்தைப் பின்பற்றவில்லை.
படத்தின் தொடக்கத்தில் வரும் விசாரணைக் காட்சியில் சிதைந்த பிணமொன்று விஎஃப்எக்ஸில் காட்டப்படுவது, இப்படம் குழந்தைகள் மற்றும் முதியோர் காணத் தகுந்ததல்ல என்பதைச் சொல்லிவிடுகிறது. அதேநேரத்தில், உண்மையான தகவல்களின் அடிப்படையில் அமைந்த சாகசக் கதைகளை விரும்பிகளுக்கு ‘கண்ணூர் ஸ்குவாட்’ நிச்சயம் திருப்தி தரும்.
தேவையான பட்ஜெட்டில், மிகத்தரமான கதையமைப்பில், ஒரு நல்ல கமர்ஷியல் படத்தைத் தந்திருக்கிறது ‘மம்முட்டி கம்பெனி’. அந்த வகையில், அதன் அடுத்த தயாரிப்பு குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது இந்த ‘கண்ணூர் ஸ்குவாட்’!
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
எடப்பாடியை சந்தித்த முபாரக்: பேசியது என்ன?
வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பணி!
“லியோ” வெற்றி பெற திருப்பதி சென்ற லோகேஷ்!