கண்ணை நம்பாதே: விமர்சனம்!

சினிமா

ஓடிடி தளங்களின் வரவுக்குப் பிறகு த்ரில்லர் படங்களுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. காரணம், இதற்கு முன் தமிழில் நாம் பார்த்த பல த்ரில்லர் படங்கள் ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் காப்பியாக இருக்கும்.

இறுதிவரை இறுக்கம் கூட்டிய அம்சங்கள் நம் கலாசாரத்திற்கு உதவாது என்று கூறி, பின்பாதியில் குத்துப்பாட்டு, கிளைமேக்ஸ் பைட்டு என்று ஹீரோவின் தலை மீது மொத்தப் பழியையும் ஏற்றியிருப்பார்கள் இயக்குனர்கள். அதனால் முன்பாதிக்கும் பின்பாதிக்கும் சம்பந்தேமே இருக்காது.

அந்தக் குறைகளை எல்லாம் களைந்துவிட்டு, முதல் ஷாட்டில் தொடங்கும் விறுவிறுப்பை ‘கிளைமேக்ஸ்’ வரை தரும் நீட்டிக்கும் படங்கள் சமீபகாலமாக வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், அருள்நிதியின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் பார்த்து ‘கண்ண நம்பாதே’ வாய்ப்பை இயக்குனர் மாறனுக்குத் தந்திருக்கிறார் உதயநிதி. படத்தின் கதையில் அல்லது படப்பிடிப்பில் என்ன குளறுபடி நடந்ததென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட நான்காண்டுகள் கழிந்து திடீரென்று வெளியாகியிருக்கிறது ‘கண்ணை நம்பாதே’.

ஒரு நல்ல த்ரில்லர் பார்த்த உணர்வைப் படம் தருகிறதா? ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ போலவே இருக்கிறதா என்று கேட்டால், இரண்டு கேள்விகளுக்கும் சேர்த்தாற்போல ஒரேநேரத்தில் ‘ஆமாம்’, ‘இல்லை’ என்று பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

kannai nambathey movie review

எத்தனை ட்விஸ்டு!

அருண் (உதயநிதி) என்ற இளைஞர். வெளியூரைச் சேர்ந்த இவர் வேலை நிமித்தம் சென்னையில் தங்கியிருக்கிறார். ஒரு வீட்டில் குடியிருக்கும்போது, வீட்டு உரிமையாளரின் (ஞானசம்பந்தன்) மகள் திவ்யாவுடன் (ஆத்மிகா) காதல் முளைக்கிறது. அது தெரிந்ததும், அருணை அன்றைய தினமே வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார் அந்த மனிதர்.

நண்பன் ஜெகனுடன் (சதீஷ்) சேர்ந்து அவசர அவசரமாக வீடு பார்க்கிறார் அருண். இக்கட்டான சூழலில், ஒரு வீட்டில் ஏற்கனவே வசித்துவரும் சோமு (பிரசன்னா) என்பவருடன் அவர் தங்க நேர்கிறது. சந்தித்த சில மணி நேரத்தில் சோமு, ஜெகன் உடன் மது அருந்தச் செல்கிறார். இருவரும் மது அருந்த, அருண் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் திவ்யாவின் போன் வர, வெளியே வருகிறார். அங்கே, ஒரு பெண் (பூமிகா) ஓட்டிவரும் கார் விபத்துக்குள்ளாவதைப் பார்க்கிறார்.

காரை ஓட்ட முடியாத நிலையிலிருக்கும் அந்த பெண்ணைப் பார்த்துவிட்டு, அருணே காரை ஓட்டிச் செல்கிறார். வீட்டு வாசல் வரை சென்றபிறகு, ’நீங்களே காரை எடுத்துச் செல்லுங்கள், காலையில் வந்து விட்டுவிடுங்கள்’ என்கிறார் அந்தப் பெண். கேட்க வினோதமாக இருந்தாலும், அவர் தன்னை நம்புகிறார் என்பதை உணர்கிறார் அருண்.

ஜெகன், சோமுவிடம் நடந்ததைச் சொல்கிறார். தனது கேர்ள்ப்ரெண்ட் மொபைலில் பேசாமல் இருப்பதால் அப்செட்டில் இருக்கும் சோமு, அருணுக்குத் தெரியாமல் நள்ளிரவில் அந்த பெண் வீட்டுக்குச் செல்கிறார். அந்த பெண்ணைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்க முயற்சிக்கிறார். அப்போது, அந்த பெண் கீழே விழுகிறார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி பயந்து போகிறார் சோமு.

அடுத்த நாள் காலையில், காரை எடுக்க வரும் அருண் அதிர்ந்துபோகிறார். காரின் பின்புறத்தில் அந்த பெண்ணின் பிணம் கிடக்கிறது. சோமுவோ, எதுவும் தெரியாதவர் போல அதனைப் பார்க்கிறார். ‘போலீஸுக்கு போகலாம்’ என்று சொல்லும் அருணை திசைதிருப்பி, அந்த பிணத்தைத் தூக்கியெறியும் முயற்சியில் ஈடுபடுத்துகிறார். அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று வந்ததற்கான சாட்சியங்களை அழிக்க முற்படும்போது, அவர்களிருவரும் ஒரு மர்ம நபரின் (கராத்தே கார்த்தி) கேமிரா பார்வைக்கு இலக்காகின்றனர்.

தன்னைச் சுற்றிப் பின்னப்படும் வலையில் இருந்து அருண் தப்பித்தாரா, சோமுவின் சுயரூபம் அவருக்குத் தெரிந்ததா, இறந்துபோன அந்தப் பெண் யார் என்ற கேள்விகளுக்குப் பதில் தேடி நகர்கிறது ‘கண்ணை நம்பாதே’வின் மீதிப்பகுதி.

கதையில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் வருகின்றன. சோமுவைப் பற்றி அருணுக்குத் தெரிய வருவதும், தன்னைப் பின்தொடர்வது யார் என்று அவர் அறிவதும் நம்மை இருக்கையில் நிமிர்ந்து உட்கார வைக்கின்றன. ஆனால், இறந்து போன பெண் யார் என்று விளக்குவதில்தான் திணறியிருக்கிறார் இயக்குனர் மாறன். அதனாலேயே, படத்தின் பின்பாதியில் வரும் திருப்பங்கள் நம்மை திருப்திப்படுத்துவதாக இல்லை. கூடவே, ‘எத்தனை டுவிஸ்டு’ என்று வடிவேலு பாணியில் புலம்ப வைத்திருக்கிறது. இத்தனைக்கும் படத்தின் தொடக்க காட்சியே அப்பெண் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கிறது.

கடின உழைப்பு!

உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, வசுந்தரா, ஸ்ரீகாந்த், பூமிகா, சதீஷ், மாரிமுத்து, சுபிக்‌ஷா என்று கிட்டத்தட்ட ஒரு டஜன் கலைஞர்கள் இதில் முதன்மைப் பாத்திரங்களாக நடித்துள்ளனர்.

சம்பந்தமேயில்லாமல் ஒரு சதிவலையில் மாட்டிக்கொள்ளும் சராசரி இளைஞன் வேடத்திற்கு எளிதாகப் பொருந்தியிருக்கிறார் உதயநிதி. எந்தக்காட்சியிலும் அவரது நடிப்பு துருத்தலாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நெஞ்சுக்கு நீதி, மாமன்னன் உட்பட இரண்டு படங்களின் கெட்டப்போடும் பல காட்சிகளில் தோன்றியிருக்கிறார். இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி, உதயநிதி உட்படப் பல கலைஞர்களின் தோற்ற மாற்றம் ஒரு குறையாகத் தென்படாமல் சாமர்த்தியமாகச் சமாளித்திருக்கிறார் இயக்குனர் மாறன்.

kannai nambathey movie review

கதாநாயகியாக வரும் ஆத்மிகாவுக்குப் பெரிதாக வேலையில்லை. சுபிக்‌ஷாவுக்கும் அதே நிலைதான். அவர்களிருவரும் இரண்டொரு காட்சிகளில் தலைகாட்டிவிட்டு காணாமல் போவது நினைவுக்கு வருவதில்லை. ஆனால் வசுந்தராவும் பூமிகாவும் பின்பாதியில் காட்டப்படுவதுதான் ரொம்பவே உறுத்தலாகத் தெரிகிறது. அவர்களது பாத்திரங்கள் பற்றிச் சூசகமாக முன்கூட்டியே சொல்லப்பட்டிருந்தாலும், திரைக்கதையில் அவர்களது இருப்பு குறைவுதான். படம் நிறைவைத் தராததற்கும், அதுவே முக்கியக் காரணமாக உள்ளது.

பூமிகாவோடு சேர்ந்து வரும் ஸ்ரீகாந்துக்கு இதில் கொஞ்சம் வித்தியாசமான வேடம். அவருக்கும் போதுமான இடம் தரப்படவில்லை. அந்தக் குறை தனக்கு அறவே இல்லை என்பது போல, படம் முழுக்க உதயநிதியுடன் பயணிக்கிறார் பிரசன்னா. ஆனால், அவரது பாத்திரம் எப்படிப்பட்டது என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர்த்தத் தவறியிருக்கிறார் இயக்குனர்.

இவர்கள் தவிர்த்து பிளாக்மெயிலாக வரும் கராத்தே கார்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்து, அவரது மகனாக நடித்தவர், ஞானசம்பந்தன், சதீஷ், சென்றாயன், பழ.கருப்பையா என்று பலரும் ‘சும்மா’ வந்து போயிருக்கின்றனர். அவர்களுக்காக ஓரிரு நிமிடங்கள் அதிகப்படுத்தி காட்சிகள் வைத்திருந்தால், ஒவ்வொரு பாத்திரத்திற்குமான நியாயம் திரைக்கதையில் வெளிப்பட்டிருக்கும்.

இந்த குறைகளை முன்வைத்தால், இயக்குனர் மாறன் வேறுவிதமாகப் பதில் சொல்லலாம். நான்காண்டுகளுக்கும் மேலாகப் படப்பிடிப்பில் இருந்த காரணத்தால் ஏற்பட்ட சிக்கல்களையும், அதையும் மீறி ஒரு படத்தை முழுமையாக உருவாக்கும் பதற்றத்தையும் எதிர்கொள்வது நிச்சயம் சுலபமான விஷயமல்ல.

இந்த படத்தின் மாபெரும் குறை; எந்தத் தேவையுமில்லாமல் இரவு நேரத்தில் நடப்பது போன்று அமைக்கப்பட்ட காட்சிகள் தான். ஆனால், அதுவே படத்தின் பலம் என்பது போல திரைக்கதையில் பரபரப்பூட்ட உதவியிருக்கிறது ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு. கையிலிருக்கும் ஷாட்கள் மக்கள் மனதில் கோர்வையாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என்பதை உணர்ந்து சித்து குமாரின் பின்னணி இசையும், ஷான் லோகேஷின் படத்தொகுப்பும் அமைந்திருப்பது சிறப்பு.

படக்குழுவினரின் கடின உழைப்புதான் ‘கண்ணை நம்பாதே’வின் பலம். ஆனால், திரையரங்குகளுக்கு வரும் ஒவ்வொரு ரசிகருக்கும் அதனை அவர்கள் விளக்க முடியாது என்பதே உண்மை.

kannai nambathey movie review

குறைகளுக்குக் காரணம்!

ஒரு நாயகனின் அடிப்படைக் குணாதிசயம் எப்படிப்பட்டது என்பதை அடிக்கோடிட்டுக் காண்பிக்க, அவனது தினசரி வாழ்க்கை அனுபவங்கள் எப்படிப்பட்டதென்று காண்பிக்கப்பட வேண்டும். கிளைமேக்ஸ் காட்சி முடிந்ததும், நம் மனதில் அதுவே தோன்றுகிறது.

முக்கியமாக, இந்த கதையில் காரில் இருக்கும் பெண் பிணத்தை போலீசாரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று இரண்டு மையக் கதாபாத்திரங்கள் முடிவு பண்ணுமிடம் தெளிவாக வடிவமைக்கப்படவில்லை. ஒருவர் அப்பாவியாகவும் இன்னொருவர் குயுக்திகளைக் கொண்டிருப்பவராகவும் உள்ளதை ரசிகர்களுக்குப் புரியும்படி விளக்கியிருக்க வேண்டும். ஏனென்றால், அந்த கதை தடம் மாறிப் பயணிக்க அடிப்படைக் காரணமே அதுதான்.

ஒவ்வொரு பாத்திரமும் திரையில் ஏன் தோன்றுகிறது, எப்போது மறைகிறது என்பதை ரசிகர்கள் திருப்தியுறும் வகையில் சொல்வது இயக்குனரின் கடமை. ’இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் அதனைச் சரிவர செய்த மாறன், இதில் அதனைத் தவறவிட்டிருக்கிறார்.

ஊக்க மருந்துகள் தொடர்பான ஒரு ஆய்வும் அதன் முடிவும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில் அதில் உண்மையின் சதவீதம் அதிகமிருக்கலாம். ஆனால், அது என்னவென்று மூளை புரிந்துகொள்வதற்கு முன்பே அக்காட்சிகள் முடிந்து விடுகின்றன. அதனை அடிக்கோடிட்டு உணர்த்தும் வகையிலான விஷயங்களை முன்பாதியில் ஆங்காங்கே தெளித்திருக்கலாம். அதுவும் நிகழவில்லை. இது போன்று இன்னும் சில விஷயங்கள் உண்டு.

எல்லாமே தெரிந்தும், அவற்றைச் சரிப்படுத்த முடியாத சூழலில் ‘கண்ணை நம்பாதே’ படம் உருவாகியிருக்கலாம். அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. ஏனென்றால், அவ்வாறு செய்திருந்தால் படமே நேர்த்திமிக்க த்ரில்லர் ஆக மாறியிருக்கும்.

அத்தனையையும் மீறி கண்ணதாசன், மருதகாசி பாடல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்ட நல்ல தமிழ் தலைப்புகளைக் கொண்டு ‘த்ரில்’ ஊட்டும் வகையில் கதை சொல்லும் மாறனின் முயற்சிகள், இப்படம் பெறும் கலவையான விமர்சனங்களால் நின்றுவிடக்கூடாது. ‘கண்ணை நம்பாதே’வைக் காண்பதற்கான மெனக்கெட்டு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதையே உணர்த்துகிறது.

உதய் பாடகலிங்கம்

ராகுல் காந்தியிடம் டெல்லி போலீஸ் விசாரணை!

இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.