பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமான நிலையத்தில் ‘ஏரோ இந்தியா 2023’ நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக நேற்று (பிப்ரவரி 13)
பெங்களூரு சென்றார்.
அதனையொட்டி பிரதமரை கன்னட திரை உலகை சேர்ந்த கேஜிஎப் பட நாயகன் யஷ் , காந்தாரா பட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி, புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி மற்றும் கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிர்கந்தூர் ஆகியோர் கர்நாடக மாநில கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினர்.
அப்போது பிரதமரிடம் கன்னட திரைத்துறை சார்ந்த கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். குறிப்பாக வரி தொடர்பான விஷயங்கள், கர்நாடகாவில் திரைப்பட நகரம், வெளிநாடுகளில் இருப்பது போன்று இங்கும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். பிரதமரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“நரேந்திர மோடியுடனான சந்திப்பு ஊக்கமளிக்கிறது. புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடகத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கை நாங்கள் விவாதித்தோம். உங்கள் தொலைநோக்குத் தலைமை எங்களுக்கு ஊக்கமளிக்கிறது. அந்த ஊக்கம் எங்களுடைய மிகப்பெரிய பலம்” என பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில், கன்னட மாஸ் நடிகர்களுடனான மோடியின் சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
ராமானுஜம்
முசிறி சம்பவம்: மின்னம்பலம் செய்தி எதிரொலி – ஆக்ஷனைத் தொடங்கிய போலீஸ்
ரிசர்வ் பெட்டியில் அமர்ந்து மிரட்டிய வடமாநிலத்தவர்கள்: போராட்டத்தில் குதித்த பெண்கள்!
டிஜிட்டல் பணப் பரிமாற்றம்: நான்கு ஆண்டுகளில் 200% அதிகரிப்பு!