லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘ கூலி ‘ திரைப்படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அவர் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
கன்னட சினிமாவை இந்திய அளவில் பிரபலப்படுத்திய முக்கிய இயக்குநர்களில் ஒருவர் உபேந்திரா. இவர் இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் 1995-இல் வெளியான ‘ ஓம் ‘ திரைப்படம் 500 முறைக்கு மேல் ரீ ரிலீஸ் ஆகி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பின், 1998 யில் வெளியான ‘ ஏ ‘ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உபேந்திரா, அதற்கு பிறகு கன்னட சினிமாவின் முன்னணி கதாநாயகன் ஆனார்.
2008ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ‘சத்யம் ‘ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் உபேந்திரா. இதுவே தமிழில் அவருக்கு முதல் திரைப்படமாகும். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படத்தில் நடிகர் உபேந்திரா நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
நடிகர் உபேந்திராவும் அவரது சமூக வலைதளத்தில் அதை உறுதிபடுத்தும் வகையில், ரஜினியுடன் தான் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். ஆனால், சில மணி நேரங்களில் அந்தப் பதிவை தனது பக்கத்திலிருந்து நீக்கி விட்டார்.
இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், ” 25 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினி சாரை சந்தித்தேன் . தற்போது அவரை மீண்டும் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
அவருடன் இணைந்து நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை. ரஜினி எனக்கு துரோணாச்சாரியார் மாதிரி. தொழில் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அவரிடத்தில் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
‘ கூலி ‘ திரைப்படத்தில் நான் இணைந்தது குறித்து தயாரிப்பாளர் தரப்பு தான் அறிவிக்க வேண்டும். அது நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் கேரேக்டராக அது இருக்கும்” எனப் பேசியுள்ளார்.
மேலும், 2002 -ல் உபேந்திரா இயக்கத்தில் காவேரி பிரச்சனை குறித்து பேசி வெளியான ‘ H20 ‘ திரைப்படத்தில் நடிக்க ரஜினி – கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ் குமார் ஆகிய இருவரையும் அணுகினார் உபேந்திரா. ஆனால், கதையில் உள்ள சர்ச்சை தன்மை காரணத்தால் அதில் நடிக்க இருவரும் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜம்மு காஷ்மீர் தேர்தல்… முதல் கட்ட பாஜக வேட்பாளர் பட்டியல் ரிலீஸ்!