கங்குவா : விமர்சனம்

சினிமா

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் திரையரங்கில் ரிலீஸாகும் சூர்யா படம், ஸ்டூடியோ கிரீன்ஸ் மற்றும் சூர்யா செய்த பான் இந்தியா புரொமோஷன்ஸ், ரிலீஸ் தேதி மாற்றத்தால் ரசிகர்களிடத்து ஏற்பட்ட அதிருப்தி, நீதிமன்ற வழக்கு முதல் தொடர்ந்த பல்வேறு தடங்கல்கள் ஆகியவைகளைக் கடந்து தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கங்குவா’.

இந்தப் படத்திற்கான ஏகப்பட்ட ஹைப், அதீத நம்பிக்கையுடன் படக்குழு இருப்பது போலான ஒரு தோற்றத்தையே அனைவருக்கும் அளித்தது. குறிப்பாக, படத்தின் ஆடியோ லாஞ்சிலேயே 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைக்கும் வெற்றி விழாக்கான பாஸை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்தது கொஞ்சம் அதீதமாகவே தெரிந்தது. ஆக, இவ்வளவு ஹைப்களைக் கொடுத்த ’கங்குவா’ திரைப்படம் நமது பார்வையில்!

ஒன்லைன்:

2024யில் தொடங்குகிறது திரைப்படம். சூர்யா ஒரு பவுண்டி ஹண்டர். அதாவது, காவல்துறைக்கு உதவும் ஒரு ’ஷாடோ காப்’ எனச் சொல்லலாம். அவர் இறங்கும் ஒரு மிஷனில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அந்த சிறுவனைப் பார்க்கும் போது அவருக்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்குக் காரணம் என்ன? இங்கு நடக்கும் இந்த கதைக்கும் 1070ஆம் ஆண்டில் நடந்த ஒரு கதைக்கும் என்ன சம்பந்தம்? போன்ற விஷயங்களைக் கூறுவதே ‘கங்குவா’.

அனுபவப் பகிர்தல்:

தமிழ் சினிமாவில் இத்தகைய மேக்கிங் உள்ள திரைப்படங்களை சமீப காலங்களில் நிறையவே பார்க்க முடிகிறது. ஆனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றியின் ஃப்ரேம்ஸ் நம் கண்களுக்கு நல்ல விருந்து. கதைக்களத்திற்குள் நம்மை ஓரளவு ஒட்டவைப்பதும் அதுவே.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஒரு 3டி படம். ஒரு 3டி திரைப்படத்திற்கான தேவை அந்தப் படத்தின் கதையில் இருக்க வேண்டும். அதை விட்டு பொருட்காட்சியில் காண்பிக்கும் 3டி படம் போல் அந்த தொழில்நுட்பத்திற்காகவே வடிவமைக்கப்பட்ட கண்ணுக்குள் பாம்பு வருவது, ஜெம்ஸ் மிட்டாய் பறப்பது போன்ற காட்சிகள் சலிப்பே.

ஆனால், இந்த அனுபவத்தை தொழில்நுட்பக்குழு நேர்த்தியாகக் கடத்தவே முயற்சி செய்துள்ளதால் அது நமக்கு ஓரளவு நல்ல அனுபவமாகவே இருந்தது. குறிப்பாக சில காட்சிகளில் ஃப்ரேமின் ஒவ்வொரு லேயரையும் நம் கண்கள் முன்னே காண முடிந்தது நன்று.

சூர்யாவின் இத்தனை கால உழைப்பை ஸ்கிரீனில் பார்க்க முடிந்தது. ஒரு பெரிய ஸ்டார் நடிகர் ஒரு படத்திற்காக இத்தகைய உழைப்பை போடுவது தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியம். கூடவே கொஞ்சம் ஸ்கிரிப்டடை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

படம் முழுக்க ஏகப்பட்ட சப்தங்களும், ரத்தங்களும் இந்தப் படமெங்கும் இருந்தது. அதில் சப்தங்கள் வெறும் இரைச்சல்களாகவும், இரத்தங்கள் அனைத்தும் சினிமா இரத்தங்கள் என்றே கடந்து போகும் படி அமைந்தது. பார்ப்போருக்கு எந்த ஒரு பாதிப்பையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை.

கிளைமாக்ஸில் வரும் ஃபிளாஸ்பேக் மற்றும் நிகழ்காலத்திற்கான நான் லீனியர் கனெக்‌ஷன் காட்சிகள் அற்புதமான யுக்தி. ஆனால், அதில் நிகழும் சில அபத்தமான சண்டை காட்சிகள் அதோடு நம்மை ஒட்டவிடாமல் செய்கிறது.

படத்தின் முதல் பாதியில் வரும் சில காமெடி காட்சிகள் ஒரே வார்த்தையில் ‘கிரிஞ்ச் மேக்ஸ்’ !

விரிவான விமர்சனம்:

ஒரு அரசனின் அறம், அவன் சத்தியத்தின் வலிமை, போர், வன்முறை, போன்ற விஷயங்களைத் தொட்டு நகரும் இந்தத் திரைப்படத்தில் முன் ஜென்மம், சூப்பர் பவர் போன்ற ஃபேண்டசி படத்திற்கான கூறுகளும் உள்ளன. இதில், மேல் சொன்ன எதையும் பார்வையாளர்களுக்கு அழுத்தமாக கடத்தாத இந்த ’கங்குவா’, பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஒரு சராசரி கமர்சியல் திரைப்படமாகவே உள்ளது. படத்தின் பெரிய பலங்கள் சூர்யா, தொழில்நுட்பக் குழு.

இந்தப் படத்திற்காக மேக்கப், உடல் தோற்றம், உடல் மொழி என அனைத்திலும் தன் உழைப்பை அர்ப்பணித்துள்ளார் சூர்யா. ஆனால், அவரது கதாபாத்திரத்தை இன்னும் தெளிவாக வடிவமைக்காததால் அது ஒரு சாதாரண கமர்சியல் ஹீரோவாக மட்டுமே சுருங்கி விடுகிறது. யார் இந்த ’கங்குவா’? அவன் ஏன் இத்தகைய சத்தியத்தை காக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இன்னும் அழுத்தமான காட்சிகளும், காரணங்களும் வைத்திருக்கலாம்.

அது இல்லாததால் அந்தக் கதாபாத்திரத்தோடு நம்மால் சரியாக ஒட்டமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரம் பேசும் வசனங்களும் நாம் ஏற்கனவே கண்ட பல பீரியட் பட கதாபாத்திரங்களையே நியாபகப்படுத்துகிறது. அவர் ஏன் இவ்வளவு பலசாலியாக இருக்கிறார் என்றால் அவர் தான் இந்தப் படத்தின் ஹீரோ என்கிற அளவில் தான் அந்தக் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருப்பினும் இந்தப் படத்தை தாங்கிப் பிடிப்பதில் சூர்யாவின் நடிப்பிற்கு முக்கிய பங்குண்டு.

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை முதலில் குறிப்பிட வேண்டியது ஒளிப்பதிவாளர் வெற்றியின் காட்சியமைப்புகள். அத்தனையும் அற்புதம். குறிப்பாக, இயற்கையான ஒளிகளை வைத்து அவர் காட்சியமைத்திருந்த பீரியட் காட்சிகள் அற்புதம். படத்தொகுப்பாளர் நிசாத் யூசப் கிளைமாக்ஸ் காட்சிகளில் செய்திருக்கும் நான் லீனியர் கட்ஸ் அற்புதம்.

ஆனால், படத்தின் முதல் பாதியில் வரும் அந்த காமெடி கிரிஞ்ச் காட்சிகளை நிச்சயம் பாரபட்சமின்றி வெட்டியிருக்கலாம். மறைந்த கலை இயக்குநர் மிலனின் சிறப்பான செட் வடிவமைப்புகள் மிகுந்த பாராட்டுகளுக்கு உரியவை. குறிப்பாக ஒவ்வொரு குடிகளுக்கான ஊர், வீடுகள், இடங்கள் எப்படி இருக்கும், அந்த காலத்து ஆடை வடிவமைப்புகள் எப்படி இருக்கும் போன்றவற்றை சரியாக வடிவமைத்துள்ளார்.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை ஆங்காங்கே காட்சியை மெருகேத்தியது. ஆனால், சில இடங்களில் இரைச்சலாகவும் தோன்றியது. பாடல்களில் ’தலைவனே’ பாடல் இடம்பெறும் காட்சி நன்றாக இருந்தது, ஆனால் இரண்டாம் பாதியில் ஒரு  பாடல் அவரின் பழைய தெலுங்கு பாடல்களை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.

படத்தின் பெரிய பலவீனம், இயக்குநர் சிவாவின் எழுத்து. குறிப்பாக படத்தின் முதல்பாதியில் இடம்பெறும் தற்காலத்தில் நடக்கும் அந்த 30 நிமிட காட்சிகள் மொத்தமும் அபத்தமே. ஃபிளாஸ்பேக் காட்சிகளில் வரும் பழங்குடி கதாபாத்திரங்கள் சாதாரணமாகவே சப்தமாக பேசும் கதாபாத்திரங்களாக வடிவமைத்தது பெரிய சலிப்பை ஏற்படுத்தியது.

திரைக்கதையில் எந்த வித திருப்பங்களோ, ஆழத் தன்மையோ இன்றி நகர்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. காரணம், இதுபோன்ற ஒரு மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்படும் ஒரு பீரியட் படத்தில் நேர்த்தியான எழுத்து இருக்க வேண்டாவா…?  கற்பனை மிகப் பெரியதாக இருக்கலாம். ஆனால், அந்த கற்பனை மட்டுமே சுவாரஸ்யமான கதையாகி விடாது தானே? இதுவே ’கங்குவா’ சறுக்கும் முக்கிய இடம். விமர்சிக்க வேண்டிய இடமும் கூட.

‘கங்குவா’ கதாபாத்திரத்தின் அறிமுக காட்சி, பழங்குடி பெண்கள் இடம்பெறும் ஒரு சண்டைக் காட்சி, கிளைமாக்ஸில் நடந்தேறும் ஒரு நான்லீனியர் சண்டை காட்சி ஆகிய காட்சிகள் மட்டுமே நமக்கு சுவாரஸ்யமாக இருந்தது. கதாபாத்திர வடிவமைப்பில், திரைக்கதை நேர்த்தியில் கவனம் செலுத்தாததால் இது வழக்கமான கமர்சியல் படமாக மட்டுமே நிற்கிறது.

அடுத்தது, இரண்டாம் பாகத்திற்கான லீடை இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் வைத்து முடித்துள்ள யுக்தி. இது வெற்றிகரமான ஃபார்முலா என சமீக கால படங்கள் பெரும்பாதியில் பயனபடுத்துகின்றனர். ஆனால், அதற்கான தேவையைப் பொறுத்தே அது சுவாரஸ்யமாக அமையும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு ‘கங்குவா’.

மேலும், வில்லன் கதாபாத்திரமான பாபி டியோலே சரியாக வடிவமைக்கப்படாததால் அவரது மகன் என கிளைமாக்ஸில் அறிமுகமாகும் அந்த ’தம்பி’ நடிகரின் கதாபாத்திரம் மட்டும் எப்படி பார்ப்போருக்கு அழுத்தம் தரும்? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கும் பழங்குடி அரசன் என்றால் அவனது வசனங்கள் எவ்வளவு நேர்த்தியாகவும், அழுத்தமாகவும், இடம்பெற்றிருக்க வேண்டும்? இதில் எல்லாம் சரியாக கவனம் செலுத்தி இருக்கலாம். மொத்தத்தில் இந்த ‘கங்குவா’ தமிழில் எடுக்கப்பட்ட மற்றும் ஒரு அடுத்தகட்ட முயற்சி, மற்றும் ஒரு அழுத்தமில்லா முயற்சி!

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

திரையில் மிகச்சாதாரண மனிதன்… யதார்த்த நடிப்புக்கான சமகால உதாரணம் – காளி வெங்கட்!

நடிகர் ரஞ்சித் குழந்தைக்கு இப்படி ஒரு பிரச்னையா? மனம் திறந்த பிரியாராமன்

+1
1
+1
2
+1
0
+1
7
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *