நடிகர்கள் சூர்யா, அவரது தம்பி கார்த்தி இருவரும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. முதன்முறையாக இருவரும் கங்குவா படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் படம் கங்குவா. சூர்யா, திஷபதானி, பாபிதியோல், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சிறுத்தை சிவா இயக்குகிறார்.
3 டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இரண்டு வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார்.
அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பையர் சாங்’ எனும் பாடல், நாளை(23.07.2024) சூர்யாவின் 43 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது.
கங்குவா முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது என்று கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்னவாக இருக்கும் என தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்த போது, “கங்குவாவில் கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் அதற்கான படப்பிடிப்பு தான் இது. கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் இறுதியில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா தோன்றினார்.அது வெறும் சிறப்புத் தோற்றம் மட்டுமல்ல அடுத்த பாகத்துக்கான முன்னோட்டம் என்று கூறப்பட்டது.
அதேபோல் இந்தப் படத்தின் இறுதியில் கார்த்தி நடிக்கும் காட்சி ஒன்று படமாக்கப்படவுள்ளது. அது அடுத்த பாகத்துக்கான முன்னோட்டமாக இருக்கும்” என்றும் சொல்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி? செல்வப்பெருந்தகை ரியாக்ஷன்!
நீட் குளறுபடி: சர்ச்சைக்குரிய கேள்வியை ஆய்வு செய்ய நிபுணர் குழு… உச்சநீதிமன்றம் உத்தரவு!