இந்திராகாந்தி இந்திய பிரதமராக இருந்த போது 1975 ஆம் ஆண்டு அவசர நிலை சட்டத்தை பிறப்பித்தார். அதன் விளைவாக இந்திய அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் முதன் முறையாக காங்கிரஸ் அல்லாத மாற்றுக் கட்சி தலைமையில் மொரார்ஜி தேசாய் பிரதமராக பொறுப்பேற்றார்.
1975 ஆம் ஆண்டு ஜுன் மாதம் தொடங்கி 1977 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை அமுலில் இருந்த அவசர நிலை சட்டத்தால் ஏற்பட்ட நிகழ்வுகளை மையமாக கொண்டதுதான்’ எமர்ஜென்சி’ திரைப்படம்.
பாஜகவை சேர்ந்த நடிகை கங்கனா ரனாவத் இந்திரா காந்தி யாக நடித்து, இயக்கி தயாரிக்க போவதாக அறிவிப்பு வெளியானபோது கூடுதல் கவனம் பெற்றது.
காங்கிரஸ் கட்சியை சேதாரப் படுத்தும் காட்சிகள் அதிகம் இருக்கும் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்பதால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் எந்தவொரு தடங்கலும் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
எமர்ஜென்சி படம் தொடங்கியபோது பாஜக ஆதரவு நடிகையாக இருந்த கங்கனா ரனாவத் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பித்த போது பாஜகவின் சார்பில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தார்.
இருந்த போதிலும் எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்தி திரையுலகம் என்னை கைவிட்டுவிட்டது என கங்கனா கருத்து வெளியிட்டார். அரசியல் கட்சிகள் மெளனம் காத்தனர். தங்களை பற்றி விமர்சிக்கும் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எந்தவொரு எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் சீக்கிய சமூகத்தினர் எமர்ஜென்சி படத்தில் தங்கள் சமூகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என உக்கிரமாக கருத்து தெரிவித்து, போராட்டம், சட்ட ரீதியான நீதிமன்ற போராட்டங்களை மேற்கொண்டனர் .
இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க படம்பார்த்த தணிக்கை குழு விதித்த நிபந்தனைகளை ஏற்க மறுத்து கங்கனா மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார். அங்கேயேயும் நிபந்தனைகளில் தளர்வு கிடைக்காததால் எமர்ஜென்சி படத் தயாரிப்பில் பிரதான முதலீடு செய்திருக்கும் ஜீ எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு விசாரணையில், “ரிவைசிங் கமிட்டி குறிப்பிட்டுள்ள காட்சிகளை படத்தில் இருந்து நீக்கினால், எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தர தயார்” என தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்
அதற்கு நீதிபதிகள், சென்சார் சான்றிதழை வழங்குவது குறித்து உரிய முடிவை அறிவிக்க கோரி சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்சார் போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபினவ்விடம் நீதிபதிகள், “ஏதாவது நல்ல செய்தியை சொல்லுங்கள்” என்று கேட்க, அதற்கு அவர், “சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டி படத்தில் சில காட்சிகளை நீக்க பரிந்துரைத்துள்ளது. தேவையான மாற்றங்கள் நிகழ்த்திய பின்பு, படத்துக்கான சென்சார் சான்றிதழ் வழங்கப்படும்” என தெரிவித்தார்.
அப்போது ஜீ என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சென்சார் போர்டு ரிவைசிங் கமிட்டி கூறிய திருத்தங்களை செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு நீதிபதியிடம் கோரினார்.
இதையடுத்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை செப்டம்பர் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் செந்தில்பாலாஜி
வங்கதேசத்தின் தீவிர ரசிகர் டைகர் ராபி… 15 பேர் சுற்றி நின்று செய்த காரியம்!