கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியான ‘தேஜஸ்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் 3.80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை.
தொடர்ந்து அக்டோபர் 27ஆம் தேதி சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் கங்கனா ரனாவத் விமானப்படை அதிகாரியாக நடித்துள்ள ‘தேஜஸ்’ இந்திப்படம் திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தில் அன்சுல் சவுகான், ஆசிஷ் வித்யார்த்தி, விஷாக் நாயர் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான அன்றே தியேட்டர்களில் ஓபனிங் இல்லை. அதனால் பல திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
படம் முதல் நாள் 1.25 கோடி, இரண்டாவது நாள் 1.30 கோடி, மூன்றாவது நாள் 1.25 கோடி என முதல் 3 நாட்களில் திரையரங்குகள் மூலம் 3.80 கோடி ரூபாய் மட்டுமே மொத்த வசூல் செய்துள்ளது.
சுமார்60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரானதாக கூறப்படும் இப்படம் ரசிகர்களை கவராததால் வசூலில் பின்தங்கியுள்ளது. கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான முந்தைய இரண்டு படங்களும் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை.
அடுத்ததாக கங்கனா ரனாவத் மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியாக நடித்து இயக்கியுள்ள ‘எமர்ஜென்சி’ படம் வெளியாக இருக்கிறது.
முன்னதாக, திரையரங்குகளுக்கு பார்வையாளர்கள் வருகை மோசமாக இருந்ததை குறிப்பிட்டு நடிகை கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “கொரோனாவுக்கு முன்பே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருவது குறைந்தது. அதற்குப் பின் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
இலவச டிக்கெட்டுகள் உட்பட நியாயமான சலுகைகள் வழங்கப்பட்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. அந்தச் சரிவு தொடர்கிறது.
அதனால், திரையரங்குகளுக்குச் சென்று படங்களைக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள். இல்லை என்றால் திரையரங்கை நடத்துகிறவர்கள் வாழ முடியாது” என்று பேசியிருந்தார்.
இருந்தபோதிலும் திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமனுஜம்
தமிழ்நாடு நிறுவனத்தில் ஐடி சோதனை!
மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: முதல்வர்