இந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியான கங்கணா ரனாவத் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டியில் பிறந்தவர் கங்கணா ரனாவத். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு அனுராக் பாசு இயக்கத்தில் வெளியான ‘கேங்ஸ்டர்’ இந்தி திரைப்படம் மூலம் கதாநாயகியாக பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.
அவரது முதல் படமே வணிக ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் அடுத்தடுத்து வோ லம்ஹே, பேஷன், குயின் என வெற்றிப் படங்களின் நாயகியாக இந்தி திரையுலகில் வலம் வந்தார்.
தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்திலும், கடந்த ஆண்டு தமிழில் ‘சந்திரமுகி 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தாலும், அரசியல், பொது பிரச்சினைகளில் அதிரடியாக கருத்துக்களை வெளியிட்டு கங்கணா ரனாவத் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் நடிகை, தயாரிப்பாளராக தொடர் தோல்விகளை அவர் எதிர்கொண்டு வருகிறார். அதேவேளையில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவர் அரசியலில் கால் பதிப்பார் என்று கருதப்பட்டது.
அதுபோலவே தற்போது அவரது சொந்த தொகுதியான மண்டி தொகுதி பாஜக வேட்பாளராக கங்கணா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 111 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் மண்டி தொகுதி வேட்பாளராக கங்கணா ரனாவத் பெயர் இடம்பெற்றுள்ளது.
My beloved Bharat and Bhartiya Janta’s own party, Bharatiya Janta party ( BJP) has always had my unconditional support, today the national leadership of BJP has announced me as their Loksabha candidate from my birth place Himachal Pradesh, Mandi (constituency) I abide by the high…
— Kangana Ranaut (@KanganaTeam) March 24, 2024
பெருமையாக உணர்கிறேன்!
இதனையடுத்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்த பாஜக தலைமைக்கு கங்கனா ரனாவத் நன்றி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. நான் பிறந்த இடமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் இருந்து லோக்சபா வேட்பாளராக பாஜகவின் தேசியத் தலைமை அறிவித்திருக்கிறது.
லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து உயர்நிலைக் குழு முடிவால் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்ததை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். வரும் நாட்களில் நான் ஒரு தகுதியான காரியகர்த்தாவாகவும் நம்பகமான பொது ஊழியராகவும் இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி” என கங்கனா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்