vickram kamal

மாஸ்டரை முறியடித்த விக்ரம்

சினிமா

தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை நடிகர்களுடன் களத்தில் உள்ளார் 67 வயதை கடந்த கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக, நடன இயக்குநராக, குணசித்திர நடிகராக, பாடகராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, கதாநாயக நடிகராக எல்லா தளங்களிலும் 60 ஆண்டு காலம் திரையுலகில் பயணித்து வருகிறார்.

இந்திய சினிமாவில் மற்ற திரைக் கலைஞர்களை காட்டிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவர் என்கிற பெருமை கமல்ஹாசனுக்கு மட்டுமே உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திற்கு பின்பு கமல்ஹாசன் – ரஜினிகாந்த் எனும் ஆதிக்கம் தொடங்கிய பின்பு இன்று வரையிலும் வணிகரீதியாக, வசூல் அடிப்படையில் ரஜினிகாந்தை வெற்றி கொண்டதில்லை கமல்ஹாசன். மிக சிறந்த நடிகராக, தயாரிப்பாளராக சாதனைகள் பல நிகழ்த்திய கமல்ஹாசனால் வணிகத்தில் மிகப்பெரும் வெற்றியை சாதிக்க முடியவில்லை.

மூன்றாம் தலைமுறை நடிகர்கள் கூட 100 கோடி ரூபாய் வசூல் என்பதை எளிதாக கடந்துபோனார்கள். கமல்ஹாசன் என்ன முயற்சி செய்தும் படங்கள் பேசப்பட்டன, பாராட்டப்பட்டது, கௌரவம் கிடைத்தது ஆனால் கல்லா நிரம்பிவழியவில்லை. அவரது 60 ஆண்டுகால திரையுலக அர்பணிப்புக்கு “விக்ரம்” திரைப்படத்தின் வசூல் மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறது.

ஆம் நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் இதுவரை வசூல் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட அனைத்து சாதனைகளையும் பின்னுக்கு தள்ளி முன்னேறி முதல் இடத்திற்கு வந்திருக்கிறது “விக்ரம்”.
தமிழ் சினிமாவில் சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், விஸ்வாசம், மாஸ்டர் போன்ற படங்கள் அந்தந்த கால கட்டங்களில் வசூல் சாதனை நிகழ்த்திய படங்களாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் குறைந்தபட்ச(400 திரைகள்) திரையரங்குகளில் திரையிடப்பட்டு அதிக பார்வையாளர்கள்(1.65 கோடி) பார்த்ததின் மூலம் சுமார் 150 கோடி வரை வசூல் செய்த படமாக பாகுபலி உள்ளது.

அந்த வசூலை கேஜிஎஃப் முறியடித்ததாக கூறப்பட்டது. இருபடங்களும் டப்பிங் படங்களாகும் கடந்த வருடம் வெளியான மாஸ்டர் அதிகபட்ச வசூல் செய்த தமிழ் படமாக (சுமார் 80 கோடி) விக்ரம் படம் வெளியாகும் வரை இருந்தது. அந்த சாதனையை 14 நாட்களில் விக்ரம் படம் முறியடித்திருக்கிறது.

ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், சிவகார்த்திகேயன் இவர்கள் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படங்கள்(விஸ்வாசம் தவிர்த்து) அனைத்தும் போட்டிக்கு படங்கள் எதுவும் வெளியாகாத குழ்நிலையில் வெளியான படங்கள்.

அதேபோன்றுதான் விக்ரம் படத்திற்கு தமிழில் போட்டிக்கு படங்கள் எதுவும் வரவில்லை. அதே வேளையில் கேரளா, ஆந்திரா, இந்தி பகுதியில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் வெளியானது. ஆனால் விக்ரம் வசூல் அடிப்படையில் முதல் இடத்தில் இன்றுவரை உள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் நிகழ்ச்சி ஒன்று சென்னையில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை விக்ரம் பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் செய்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் வசூல் சாதனை, 100 கோடி கிளப்பில் இணைந்தது போன்ற செய்திகள் அனைத்தையும் அதிகாரபூர்வமற்ற முறையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக அறிவிக்கவில்லை.

இந்திய சினிமாவில் மாற்றங்களை, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் முதல் ஆளாக களமிறங்கிய கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் உண்மையான வசூல் விபரங்களை இன்று மாலை அறிவிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

-இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.