விக்ரம் பட வசூல் உண்மையில் சாதனைதானா?

சினிமா

தமிழ் சினிமாவில் எம்.கே.தியாகராஜ பாகவதர் காலம் முதல் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் குமார் இவர்கள் கதாநாயகர்களாக நடித்த படங்கள் எல்லாம் எத்தனை நாட்கள் ஓடின, 50 நாட்கள், 100 நாட்களை கடந்து எத்தனை திரையரங்குகளில் ஓடியிருக்கின்றன என்பது பெருமைக்குரியவையாகப் பார்க்கப்பட்டன.

1990களுக்குப் பிறகு முதல் நாள் வசூல், முதல் வார மொத்த வசூல் முதன்மைப்படுத்தப்பட்டு நடிகர்களின் அடுத்த படத்துக்கான சம்பளம், படத்தின் விலையைத் தீர்மானிக்கும் காரணியாக மாறியது. லட்சங்களில் படம் தயாரித்து, லட்சங்களில் லாபம் பார்த்த தமிழ்த் திரையுலகில் இப்போது கோடிகளில் முதலீடு செய்து அதை முதல் வாரத்தில் வசூல் மூலம் எடுத்தாக வேண்டும் என்கிற மனநிலையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

அதே வேளையில் பிற மொழி படத் தயாரிப்பாளர்கள் அந்தப் படத்தில் நடித்த நட்சத்திரங்களின் துணையுடன் வசூலை அதிகரிக்க முயற்சி மேற்கொண்டனர். ஆனால், தமிழ் சினிமாவில் படத்தில் நடித்ததுடன் தனது வேலை முடிந்தது என அடுத்த படத்தில் நடிக்கப் போனார்கள் நட்சத்திரங்கள். அதனால் எதிர்பார்த்த வெற்றியும், அபரிமிதமான வசூலும் எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. கோடிகளில் சம்பளம் வாங்கிய கதாநாயகர்களின் படங்களுக்கு, கோடிக்கணக்கில் வசூல் ஆனாலும் படத் தயாரிப்பில் செய்த முதலீட்டுக்கு உரிய லாபம், இரு மடங்கு, மும்மடங்கு லாபம் என்பது தமிழ் கதாநாயகர்கள் நடித்த படங்களின் மூலம் கிடைக்கவில்லை.

அதே வேளையில் சிறு முதலீட்டு படங்கள், புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகி படைப்பு ரீதியாக வரவேற்புக்குள்ளான படங்கள் மூலம் இரு மடங்கு லாபம் கிடைத்திருக்கிறது. இவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் வசூல் அடிப்படையில் இதுவரை நிகழ்த்தப்பட்ட எல்லா சாதனைகளையும் விக்ரம் படத்தின் மூலம் முறியடித்திருக்கிறார். விக்ரம் படம் வெளியான இரண்டாவது வார முடிவில் நடைபெற்ற விக்ரம் வெற்றி விழா நிகழ்ச்சியில் இந்த வெற்றி எனது தனிப்பட்டது இல்லை, கூலித் தொழிலாளி முதல் கோடீஸ்வரர்கள் வரை விக்ரம் படம் பார்ப்பதற்காக தங்கள் வருமானத்தில் பணத்தை ஒதுக்கீடு செய்ததால் கிடைத்த வெற்றி என்றார்.

படத்தை தயாரித்த நான் முதல் கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் தியேட்டரில் கார் பாஸ் கொடுப்பவர் வரை ஒரே நேர்கோட்டில் பணிபுரிந்ததால் இந்த வெற்றி சாத்தியமானது என்றார் கமல்ஹாசன். அவரது 60 ஆண்டுக் கால திரைப்பயணத்தில் வெற்றிகளையும், தோல்விகளையும் சம அளவில் எதிர்கொண்டவர். ஹீரோ என்கிற கர்வம் இல்லாமல், எனக்காகத்தான் படம் ஓடியது என்று நான் கூற மாட்டேன், சினிமா கணக்கு விவரங்களை வெளிப்படை தன்மையுடன் பகிர்ந்து கொண்டாலே சினிமா தொழில் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறியதுடன் மட்டுமல்லாமல் விக்ரம் படத்தின் இரண்டு வார மொத்த வசூலை சம்பந்தப்பட்ட ஏரியா விநியோகஸ்தர்களை பகிரங்கமாக அறிவிக்க செய்தார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த ‘விக்ரம்’ படம் ஜூன் 3ஆம் தேதி வெளிவந்தது. இந்தப் படம் 256 திரைகளில் நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழ் சினிமாவின் முந்தைய பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனைகளை முறியடித்தது. நம்பர் 1 வசூல் படமாக இந்தப் படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

மூன்று வார முடிவில் இந்தப் படம் 380 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சர்வதேச அளவில் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 2018ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் 2.O உலகம் முழுவதும் ரூ.655 கோடி வரை வசூலித்தது.

2006ஆம் ஆண்டுக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் கமர்ஷியல் சினிமாவை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘மன்மதன் அம்பு’, ‘விஸ்வரூபம்’, ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவனம்’ ‘விஸ்வரூபம் 2’ ஆகிய படங்கள் வெளியானாலும் வணிகரீதியாக வெற்றியைப் பெறவில்லை. கமல்ஹாசன் நடிப்பில் கமர்ஷியல் ஹிட் என்றால் ‘பாபநாசம்’ படத்தை மட்டுமே கூற முடியும். கமல்ஹாசன் திரையுலக வாழ்க்கையில் திரையரங்குகள் மூலம் 400 கோடி ரூபாய் மொத்த வசூல் என்பதும் இதை தென்னிந்திய அளவில் தமிழ் கதாநாயகர்கள் நடிப்பில் வெளியான முந்தைய படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்திருக்கிறது என்பதும் சாதனையாக கமல்ஹாசனும், தமிழ் சினிமாவும் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்

ஆனால், அகில இந்திய அளவில், சர்வதேச அளவில் தமிழ் சினிமா முன்னணி கதாநாயகர்கள் நடித்து வெளியான எந்தப் படமும் இன்று வரை தெலுங்கு, கன்னட படங்கள் நிகழ்த்திய சாதனைகளை நெருங்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. உலக அளவில் பாகுபலி-2 ரூ.1,810 கோடி, கேஜிஎஃப் – ரூ.1,230 கோடி, ஆர்ஆர்ஆர் – ரூ.1,100 கோடி என்கிற அளவில் மொத்த வசூல் செய்திருக்கிறது, இதற்கு காரணம் அந்தப் படங்களில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் இயக்குநரை நம்பி தங்களை ஒப்புக்கொடுத்து சொன்னபடி நடித்தார்கள்.

படம் வெளியீட்டுக்கு முன்பாக அடித்தட்டு மக்கள் வரை, படத்தை பற்றிய தகவல்களைக் கொண்டு சேர்க்கும் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் இன்று வரை அது நிகழவில்லை , கமல் இன்றைய இளம் தலைமுறை இயக்குநர் லோகேஷ் கனகராஜை நம்பி நடித்தார். படத்தை புரமோட் செய்வதற்காக உலகம் முழுவதும் பயணம் செய்தார், ரூ.400 கோடி மொத்த வசூல் என்பது சாத்தியமானது. இதை பிற நட்சத்திரங்களும் கடைப்பிடித்தால் தமிழ் சினிமா 1,000 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டிப் பிடிப்பது எளிதானதாகும்.

-இராமானுஜம்

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *