’தி கேரளா ஸ்டோரி படம் உண்மை கதையா?’: கமல் பளீர் பதில்!

சினிமா

இந்திய சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் தெரிவிக்கும் கருத்துகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். எந்த ஒரு விளைவுக்கும், உடனடியாக கருத்து சொல்வது அல்லது சொன்ன கருத்தை திரும்பப்பெறுவது கமல்ஹாசன் பழக்கமல்ல.

எந்தவொரு கருத்தையும் உரிய ஆவணங்களுடன், எதிர்கொள்வது கமல்ஹாசன் கடைபிடிக்கும் அணுகுமுறை.

2000ம் ஆண்டில் கமல்ஹாசன் நடித்து இயக்கி தயாரித்த ஹேராம் திரைப்படம் தொடக்கம் முதலே சர்ச்சைகளை எதிர்கொண்ட நிலையில் உறுதியுடன் இருந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தார்.

தணிக்கையில் படம் தப்புமா என சினிமா வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது. தணிக்கை குழுவுக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்லக் ப்ரிவியு திரையரங்கில் ஹேராம் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

kamalhaasan denied the fact of the kerala story movie

தணிக்கை குழுவினர் வருவதற்கு முன்பாக ஒரு மினிவேன் தியேட்டருக்கு எதிரில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து கொண்டுவந்து நிறுத்தப்பட்டிருந்தது.

அதில் என்ன கொண்டு வரப்பட்டிருக்கும் என எல்லோரும் கேள்வி எழுப்பியபோது கமல்ஹாசன் தரப்பில் ஹேராம் படத்தை பார்த்துவிட்டு தணிக்கை குழுவினர் எழுப்பும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்குமான ஆவணங்கள், அதற்குரிய வரலாற்று நூல்கள் இருக்கிறது என கூறப்பட்டது.

இதை எல்லாம் அறிந்துகொண்ட தணிக்கை குழு படம் பார்த்த பின் கமல்ஹாசனிடம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பினார்கள்.

அதற்கு உரிய பதிலை கமல்ஹாசன் கூறியதுடன் இவற்றுக்கான ஆவணங்களை ஒரு வேன் முழுவதும் கொண்டு வந்திருக்கிறேன் என்றார்.

தணிக்கை குழுவினர் எந்த எதிர்வாதமும் செய்யாமல் நீங்களே சில கட்டுகளை முடிவு செய்யுங்கள் என வேண்டுகோள் வைத்தனர்.

என்ன பஞ்சாயத்து வரப்போகிறதோ என எதிர்பார்த்து காத்திருந்த சூழலில் சுமுகமாக ஹேராம் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது.

ஒரு படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு இவ்வளவு முன் தயாரிப்புகளை மேற்கொள்ளுவதால்தான் சினிமா சம்பந்தமாக கமல்ஹாசன் கூறும் கருத்துகள் முக்கியத்துவம் மிக்கதாகிறது.

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தபோது அதை பற்றி எந்த கருத்தையும் சொல்லாமல் பெரும்பான்மையான சினிமா பிரபலங்கள் கள்ளமெளனத்துடன் கடந்துபோனார்கள்.

கமல்ஹாசனும் இதுவரை தி கேரளா ஸ்டோரி படம் பற்றி எந்தவிதமான கருத்தும் சொல்லாமல் மெளனம் காத்துவந்தார்.

இந்நிலையில் தற்போது அவருக்கு கிடைத்த சர்வதேச சினிமா விருது விழாவில் தனது கருத்தை பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

23-வது ‘சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி’ (International Indian Film Academy – IIFA Awards) விருது வழங்கும் விழா மே 26,27 ஆகிய இரண்டு நாட்கள் அபுதாபியில் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற்றது.

இதில் இந்திய சினிமாவில் மிகச்சிறந்த பங்களிப்பை செலுத்தியதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு ‘IIFA Outstanding Achievement in Indian Cinema’ எனப்படும் உயரிய விருது வழங்கப்பட்டது.

‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது

இதையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய கமல்ஹாசனிடம், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை எப்படி பார்க்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர்,  “நான் முன்பே கூறியது போல பிரச்சார படங்களுக்கு எதிரானவன் நான். வெறுமனே லோகோவுக்கு பக்கத்தில் ‘இது உண்மைக் கதை’ என எழுதினால் மட்டும் போதாது. அதில் உண்மை இருக்க வேண்டும்.

தி கேரளா ஸ்டோரி படத்தில் காட்டப்பட்டது உண்மையல்ல” என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘எந்த ஒரு பிரச்சினையிலும் தென்னிந்திய சினிமாவில் உள்ள நடிகர்கள், குறிப்பாக தமிழ் சினிமாவைச் சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் அப்படியிருப்பதில்லையே’ என கேட்டதற்கு, 

“இதை நான் ஏளனமாக பார்க்கவோ இது தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன். இந்த நாடு முக்கியமானது. அதேபோல அமைதியுடன் உங்கள் கலையை நீங்கள் செய்வதும் முக்கியமானது.

60-70 ஆண்டுகளுக்கு முன்பு, ஐரோப்பாவைச் சேர்ந்த பல கலைஞர்கள் ஜெர்மனியில் மௌனம் காக்கும் இதே தவறை செய்தார்கள்” என தெரிவித்துள்ளார்.

இராமானுஜம்

உருவமைப்பில் மட்டுமின்றி’: புல்லட் ரயில் குறித்து முதல்வர் ட்வீட்!

ஐ.டி. அதிகாரிகள் மீது தாக்குதல்: 8 திமுகவினர் கைது!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *