இந்திய சினிமாவில் மொகலாயர், ராஜபுத்திரர்கள் ஆட்சி காலங்களை பின்புலமாக கொண்ட பிரமாண்ட வரலாற்று படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
அப்படியானதொரு முயற்சி தமிழ் சினிமாவில் நிறைவேறாத, முயற்சித்தாலும் நிறைவேற்ற முடியாத கனவாகவே இருந்து வந்தது.
அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட், நடிகர்களின் கதாநாயக ஈகோ, ஒருங்கிணைக்கும் ஆளுமையுள்ள இயக்குநர்கள் என பல காரணங்கள் கூறப்பட்டு வந்தன.
இவை அனைத்துக்கும் முடிவு கட்டும் விதமாக எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோர் முயற்சித்தும் முடியாமல் கைவிடப்பட்ட”பொன்னியின் செல்வன்” வரலாற்றுப் புதினம் இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது.
லண்டன் வாழ் யாழ்ப்பாண தமிழரான சுபாஷ்கரண் அல்லி ராஜாவின் லைகா நிறுவனத்தின் முதலீட்டில் இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படமாக்கப்பட்டால் அதில் வந்தியதேவனாக நடிக்க ஆசைப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன். 33 வருடங்களுக்கு முன்பு அதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டு முடியாமல் போனது.
அவரால் முடியாமல் போன அந்தப் படத்தின் தமிழ் ட்ரெய்லர் மூலம் பொன்னியின் செல்வன் கற்பனை புதினத்திற்குள் தனது கரகரத்த கம்பீரக்குரல் மூலம் பார்வையாளனை அழைத்து செல்கிறார் கமல்ஹாசன். அந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
ட்ரெய்லரை வெளியிட்டு கமல் பேசுகையில், “பொன்னியின் செல்வன் எம்ஜிஆர் வாங்கி வைத்த கதை. அவரிடமிருந்து நான் வாங்கினேன். அப்போது அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார்.
பிறகு என்னிடமிருந்து நிறைய பேரிடம் இந்த கதை போனது. நான் முயற்சி செய்தேன், மணிரத்னம் அதை பூர்த்தி செய்துவிட்டார். ரஹ்மானின் இசை சிறப்பாக உள்ளது” என்றவரிடம் ஆதங்கம் தெரிந்தது.
கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படம் எடுக்க முயற்சித்தது, அதனை கைவிட்டது சம்பந்தமாக மூத்த பத்திரிகையாளரும், கமல்ஹாசனின் நெருங்கிய நண்பருமான தேவி மணி, மற்றும் சிலரிடம் கேட்டபோது கிடைத்த தகவல்களின் தொகுப்பு.
எம்ஜிஆருக்குப் பிறகு பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க கமல் முயன்றார். பல வருடங்களாக அது குறித்து பேசிக் கொண்டிருந்தவர், 1989 இல் தனது திட்டங்களை வெளிப்படையாக பத்திரிகையாளர்களிடம் அந்த காலகட்டத்தில் பேசினார்.
மொகல் – லே – ஆசம் போன்ற இந்தி வரலாற்றுப் படங்களை ரசித்த கமலுக்கு அதுபோல் தமிழில் ஒரு வரலாற்றுப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவரைப் பொறுத்தவரை தமிழில் கடைசியாக வெளி வந்த நல்ல சரித்திரப் படம் என்றால் வீரபாண்டிய கட்டபொம்மன்.
அதற்குப் பிறகுதான் எம்ஜிஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெளி வந்தது, அது சரித்திரப் படமில்லையா என எம்ஜிஆர் ரசிகர்கள் கேட்கலாம்.
அந்தப் படத்தில் பாண்டியனைவிட தூக்கலாக தெரிந்தது எம்ஜிஆர்தான் என அதற்கும் கமல்ஹாசன் அப்போது பதிலளித்திருந்தார்.
தமிழில் ஒரு தரமான சரித்திரப் படம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதை மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் கமல்ஹாசன் விவாதித்திருக்கிறார். பிறகு அவரே பொன்னியின் செல்வனை பரிந்துரைத்துள்ளார்.
படத்துக்காக தொல்லியல்துறை சார்ந்தவர்களுடன் விவாதம் செய்துள்ளார். நாவலில் எண்ணற்ற கதாபாத்திரங்கள் வரும்.
அவற்றை தவறவிடக் கூடாது, அதேநேரம் திருவிழா கூட்டமாகவும் படம் ஆகிவிடக்கூடாது என்று அதையும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராமுடன் விவாதித்துள்ளார்.
அன்று போல் அனைத்துக் காட்சிகளையும் அரங்கு அமைத்து எடுக்க கமல்ஹாசனுக்கு உடன்பாடில்லை. கதை எங்கு நடப்பதாக சொல்லப்படுகிறதோ, அந்தப் பகுதிகளுக்கே சென்று, தேவைப்பட்டால் அங்கு அரங்கு அமைப்பது என்று முடிவு செய்துள்ளார்.
நாவலில் வரும் பெண் கதாபாத்திரங்களுக்கு புதுமுக நடிகைகளை நடிக்க வைப்பது கமலின் தீர்மானமாக இருந்தது. தெரிந்த நடிகை என்றால் அவர்களின் இமேஜ் அந்த கதாபாத்திரத்தில் படியும், அது நல்லதில்லை என்பது அவரது கருத்து.
அதேநேரம் ஆண் கதாபாத்திரங்களில் நடிக்க சத்யராஜ், பிரபு போன்றவர்களிடம் பேசி அவர்களின் சம்மதத்தைப் பெற்றிருந்தார். வந்தியத்தேவனாக கமல்ஹாசன் நடிப்பதும் உறுதியாகியிருந்தது.
மணிரத்னமே பொன்னியின் செல்வனை இயக்க சரியான ஆள் என்பதிலும் கமல்ஹாசன் உறுதியாக இருந்தார். படத்தின் திரைக்கதை எழுதும் வேலையும் ஜரூராக நடந்தது. முழு ஸ்கிரிப்ட் தயாரானதும் அதனை பொன்னியின் செல்வனின் தீவிர வாசகர்கள் சிலரிடம் வாசிக்கத் தந்து கருத்து கேட்க கமல்ஹாசன் தீர்மானித்திருந்தார்.
ஆனால், அது போல் எதுவும் நடக்கவில்லை. படமும் தொடங்கப்படவில்லை அதற்கு முக்கிய காரணமாக இருந்தது பட்ஜெட்.
பொன்னியின் செல்வனை எந்த சமரசமும் இல்லாமல் படமாக்க 1989 காலகட்டத்தில் 2 கோடிகள் தேவைப்பட்டன. இன்னொருவர் தயாரிப்பதைவிட தானே படத்தை தயாரித்தால்; நினைத்தபடி முடிக்க முடியும் என கமல்ஹாசன் நம்பினார்.
படப்பிடிப்பில் ஏதாவது குளறுபடி நடந்தாலும் 2 கோடி என்ற பட்ஜெட் 4 கோடியாகிவிடும். இதுபோன்ற சிக்கல்கள் இருந்ததால் பொன்னியின் செல்வன் தொடங்கப்படவில்லை.
சுமார் 33 வருடங்கள் கழித்து மணிரத்னம் பொன்னியின் செல்வனை வெற்றிகரமாக திரைப்படமாக்கியிருக்கிறார். தற்போது அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதற்கு கமல் வாய்ஸ் ஓவர் தந்திருக்கிறார்.
வந்தியத்தேவனாக நடிக்க விரும்பிய கமல்ஹாசன் அப்படத்தின் வாய்ஸ் ஓவரை மட்டுமே தர முடிந்திருக்கிறது. மருதநாயகம் போல கமலின் நிறைவேறாத கனவாகிப் போனது பொன்னியின் செல்வன் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தேவி மணி.
தொகுப்பு : இராமானுஜம்
கமல் குரலில் பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் வெளியீடு! மற்ற பாடல்கள் என்னென்ன?