மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள கலகத் தலைவன் திரைப்படம் நவம்பர் முதல் வாரத்தில் வெளிவர உள்ளது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடித்துள்ள மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்திருக்கிறது.
இதற்கடுத்து உதயநிதி நடிக்கும் படத்தை ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருப்பதாக கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்,
கிடாரி படத்தை இயக்கிய பிரசாந்த் முருகேசன் இயக்குவார் என அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு எப்போது என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது.
அதற்கு காரணம், அதர்வா நடிக்கும் ஓர் இணையத் தொடர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட குயின் இணையத் தொடர் ஆகிய இரண்டு தொடர்களின் வேலைகளை முடிக்க வேண்டி இருந்தது அந்தப் பணிகள் இன்னும் முடியவில்லையாம்.
மாமன்னன் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன் பின் இயக்குநர் பிரசாந்த் முருகேஷனை தொடர்பு கொண்ட ராஜ்கமல் நிறுவனம்
“உதயநிதி படபிடிப்புக்காக தயாராகிவிட்டார். எனவே படப்பிடிப்பைத் தொடங்க வேண்டும். அதற்கான வேலைகளைப் பாருங்கள்.
டிசம்பரில் கிறிஸ்துமசையொட்டி படத்தின் அறிவிப்பை ஒரு டீசராக வெளியிட்டுவிட்டு அப்படியே படப்பிடிப்பைத் தொடங்கலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் இயக்கி வரும் குயின் இணையத்தொடரில் அவரதுபெயரைப் போடவேண்டாம் அது திரைப்பட வியாபாரத்தை பாதிக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதை கேட்டு இயக்குநர் பிரசாந்த் முருகேசன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவசரநிலை இந்தியாவில் அமுல்படுத்தபட்ட போது கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் அனுபவித்த கொடுமைகளை மையப்படுத்தி எழுதப்படும் திரைக்கதையில்தான் மு.க.ஸ்டாலின் கதாபாத்திரத்தில் உதயநிதி நடிக்கவுள்ளார்.
திரைக்கதை உண்மை தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மிசா சட்டத்தில் கைதானவர்களை சந்தித்து தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறாராம் இயக்குநர்.
இவையெல்லாம் முடிந்தபின்னரே திரைக்கதை தயாராகும் அதற்குள் அவசரப்பட்டால் நான் என்ன செய்ய முடியும், பெரிய நிறுவனங்கள் தயாரிப்பில் படங்களை இயக்க ஒப்புக்கொண்டால் இப்படியெல்லாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டுமோ என இயக்குநர் பிரசாந்த் முருகேஷன் புலம்பி வருகிறாராம்.
இராமானுஜம்
அதிவேக பைக் ரைட் : டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!
கிச்சன் கீர்த்தனா : குதிரைவாலி – பாசிப்பருப்புக் கஞ்சி