கமல்ஹாசன் எண்ட்ரீ கொடுத்து, அகம் டிவி வழியே அகத்திற்குள் போவதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன.
அதில், மாயா, பூர்ணிமா, விஷ்ணு என அனைவரும் பிரதீப்புக்கு எதிராக சனிக்கிழமை கமல் சார் எபிசோடில், அவர்களுக்கு தரப்பட்ட செங்கொடியைத் தூக்கி புகார் கொடுப்பது என கூட்டு சேர்ந்து திட்டமிடுகின்றனர். மறுபக்கம், அக்ஷயாவின் ஜெயில் தண்டனை நிறைவடைகிறது. இவ்வளவு கம்மியாகவே காண்பிக்கப்பட்டது வெள்ளிக்கிழமை நிகழ்வுகள்.
அடுத்ததாக அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்றதும் வீட்டின் பெரும்பாலானோர் தங்களுக்கு தரப்பட்ட உரிமைக் குரல் துணியை தூக்கிக் காட்ட, அவர்களின் புகாரை சொல்லச் சொன்னார் கமல். அனைவரின் விரல்களும் பிரதீப்பை நோக்கியே நீட்டப்பட்டன.
அதில் முக்கியமாக வைக்கப்பட்ட குற்றஞ்சாட்டுகள், ’பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’, ’அனைவரும் அச்சத்தில் உள்ளோம்’, ’கெட்ட வார்த்தை பேசுகிறார்’, ’மரியாதை தருவதில்லை’. ’இத்தனை நாள் நீங்கள் ஏன் இதை தட்டி கேட்கவில்லை’ என கமல் கேட்க, ‘அவரோட ரசிகர்கள பார்த்து நாங்க பயந்துட்டோம்’ என சொன்னார்கள்.
உடனே, ‘இங்க கேட்குற கை தட்டல் சத்தங்கள வைச்சி நீங்க கேம் ஆடனும்ன்னு நினைச்சா ஏமாந்து தான் போவீங்க’ என நூதனமாக சொன்னது மட்டுமல்லாமல், உரிமை குரல் கொடுத்த அனைவரின் புகாரையும் கேட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் பிரதீப்பிடம் விளக்கம் கேட்டார், அதற்கு முன்னரே பிரதீப்பை போட்டியை விட்டு விலக்கும் முடிவை கமல் எடுத்து விட்டார் என்பது அவரது முகத்திலேயே தெரிந்தது. வழக்கம் போல் தன்னை நியாயப்படுத்த நீண்ட உரையை பேசத் தொடங்க, பாதியிலேயே போதும் என வாயடைத்தார் கமல்.
இதற்கான தண்டனையை சிறிய இடைவேளைக்கு பிறகு சொல்கிறேன் என சொல்லிவிட்டு கமல் செல்ல, வீட்டில் புகார் அளித்த அனைவரும் உற்சாகமாய் தங்களின் வெற்றியை கொண்டாடினர். விசித்ரா மட்டுமே, ‘இத நீங்க ஆரம்பத்துலயே கேட்ருக்கனும். அவனுக்கு இடம் கொடுத்துட்டு, இப்போ வந்து மொத்தமா புகார் கொடுக்குறது தப்பு’ என சொன்னார்.
அதற்கு பின்னர் வந்த கமல்ஹாசன், அனைவரிடத்திலும் தனித் தனியே கன்ஃபசன் ரூமில் வைத்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு தரலாமா என கேட்க பெரும்பாலானோர் ஆம் என்றே பதிலளித்தனர். அதில், அர்ச்சனா, கூல் சுரேஷ், தினேஷ், விசித்ரா ஆகியோர் மற்றும் விதிவிலக்குகள். ஆக, பெரும்பாலானோரின் விருப்பத்தின் படி பிரதீப்பிற்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் ஹவுஸ்மேட்ஸிடம், ‘பெண்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டால் எங்கையும் குரல் கொடுப்பேன், அது வீட்டிலும் சரி, நாட்டிலும் சரி’ என இதான் சரியான டைமிங் என கேமராவை பார்த்து அரசியல் நெடியை கொஞ்சம் தூவி விட்டார்.
இது முடிந்ததும், விசித்ரா அனைவரிடத்திலும், ‘பெண்களுக்கு பாதுகாப்பு பாதிப்பு அடையும் அளவுக்கு அவன் என்ன பண்ணிட்டான்…?, அவனுக்கு வார்னிங் கொடுத்திருக்கலாம்’ என பேசினார். அவரைத் தவிற மறுபக்கம் தினேஷ் கானா பாலாவிடம் பிரதீப்புக்கு சப்போர்ட்டாக பேசிக்கொண்டிருந்தார். அவ்வளவே இன்றைய எபிசோடு.
ஆனால் , ஆண்டவரின் இந்த தீர்ப்பால் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றது பிரதீப் ஆர்மி. இனி பிக் பாஸே பார்க்க மாட்டோம் போன்ற சபத ரைட்டப்களையெல்லாம் பார்க்க முடிந்தது. இந்த அதிரடி முடிவு நிச்சயம் இந்த சீசனின் போக்கை அப்படியே மாற்றும் என்பது திண்ணம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ஷா
ICC WorldCup: பாகிஸ்தான் வெற்றி… பரிதாபமாக வெளியேறிய நடப்பு சாம்பியன்!