தமிழ் சினிமாவில் புதிய படங்களின் வெற்றி சதவீதம் குறைந்து வருகிறது. முதல் வாரத்தை திரையரங்குகளில் புதிய படங்கள் கடப்பதே கஷ்டகாலமாகி வருகிறது.
அதனால் ஏற்கனவே வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படங்களை தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு மாற்றி வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. எம்.ஜி.ஆர் திரையுலக வாழ்க்கையில் தவிர்க்க முடியாத எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய கவிஞர் கண்ணதாசன் வசனத்தில் வெளியான நாடோடி மன்னன், எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் எப்போது திரையிட்டாலும் வசூலை குவித்து வருகின்றன.
அதேபோன்று சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான கர்ணன், வசந்த மாளிகை ஆகிய இரு படங்களும் எப்போது வெளியிட்டாலும் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வரிசையில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான மிகச்சிறந்த படங்களில் வேட்டையாடு விளையாடு தவிர்க்க முடியாத படமாகும்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று வெளியானது ‘வேட்டையாடு விளையாடு’. படத்தை செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம் சுமார் 60 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்தது. 1999-ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் வசூலில் பெரும் வெற்றி பெற்ற படையப்பா வசூல், வியாபாரத்தை வேட்டையாடு விளையாடு முறியடித்தது.

தமிழ் சினிமாவின் மிக முக்கிய க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இப்படம் இடம்பெற்று இன்று வரை கொண்டாடப்படுகிறது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘போர் தொழில்’ படத்தின் இன்ஸ்பிரேஷனே ‘வேட்டையாடு விளையாடு’ தான் என்று அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
தற்போது ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இராமானுஜம்