விக்ரம் 100 நாள்: வெளிவராத பின்னணி!

சினிமா

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், வெளியான ‘விக்ரம்’ திரைப்படம், 100 நாட்களை நேற்றுடன் நிறைவு செய்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்துக்குப் பின் 100 நாட்கள் தியேட்டரில் தொடர்ச்சியாகத் திரையிடப்பட்ட படம் என்கிற பெருமையை விக்ரம் பெற்றிருக்கிறது.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘விக்ரம்‘ உலகம் முழுவதும் சுமார் 5 ஆயிரம் திரையரங்குகளில், வெளியானது. வெளியான நாள் முதலே இந்த படத்திற்குக் கமல் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது மக்களிடமும், குழந்தைகளிடமும் ஆதரவு கிடைத்தது.

அதன் காரணமாகவே ஐம்பது நாட்களை எளிதாகக் கடந்தது ,திரையரங்கில் விக்ரம் படத்திற்குப் பின் ஏராளமான படங்கள் திரைக்கு வந்தாலும் விருமன், திருச்சிற்றம்பலம் என இரண்டு படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்தது. மற்ற நேரடி தமிழ்ப் படங்கள் எல்லாம் முதல் வாரம் திரையரங்குகளில் தாக்குப்பிடிக்கவே தடுமாறியது.

தமிழ்நாட்டில் சுமார் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான விக்ரம், முதல் மூன்று வாரங்களில் 100 கோடி மொத்த வசூலை எளிதாக எட்டியது. அதன் பின்னர் திரையரங்குகளில் புதிய படங்களுக்குத் திரைகள் கிடைக்கும் வகையில் குறைக்கப்பட்டன.

120 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட விக்ரம் 75 நாட்களைக் கடந்த போது உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்ததாகத் தகவல் வெளியானது.

பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய விக்ரம் திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக மால் தியேட்டர்களில் குறிப்பிட்ட காட்சிகள் தமிழகம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஓட்டப்பட்டது.

இதன் மூலம் வினியோகஸ்தருக்கு வருமானம் இல்லை என்றாலும் 100 நாட்கள் ஓடிய நேரடி தமிழ்ப் படங்களின் பட்டியலில் விக்ரம் இடம்பெறப் படத்தைத் திரையரங்குகளில் தக்கவைக்கவேண்டிய கட்டாயம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.

எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த், மோகன், சத்யராஜ், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியான படங்கள் தனி திரையரங்குகளில் 100 நாட்களை நிறைவு செய்திருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக அப்படி ஒரு சாதனை தமிழ் சினிமாவில் நிகழவில்லை என்ற போதும் குறிப்பிட்ட சில படங்கள் ஒரு காட்சி, இரண்டு காட்சிகள் எனத் திரையரங்குகளில் ஓட்டப்பட்டு 100 நாள் ஓடிய படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

அந்த வகையில் விக்ரம் 100 நாட்களைக் கடந்த திரைப்படங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக நடிகர் கமல்ஹாசன் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

இராமானுஜம்

நட்சத்திரம் நகர்கிறது படத்தைப் புகழ்ந்த ரஜினிகாந்த்

+1
1
+1
1
+1
1
+1
9
+1
2
+1
5
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *