இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு நடிகர் கமல்ஹாசன் அவருடனான நட்புக் குறித்து பேசி கண் கலங்கினார்.
நடிகர், எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநருமான பிரதாப் போத்தன் இன்று (ஜூலை 15) காலை சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் நலக் குறைவால் காலமானார். அழியாத கோலங்கள் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெற்றிவிழா உள்ளிட்ட 12 படங்களை இயக்கியுள்ளார்.
இவரது மரணத்துக்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், அவருக்கு அஞ்சலி செலுத்திய கமல்ஹாசன் தனக்கும் பிரதாப் போத்தனுக்குமான நட்பு குறித்தும், அவரது திறமை குறித்தும் உருக்கமாக பேசினார்.
“ பிரதாப் போத்தனை முதலில் மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற ஒரு மேடை நாடகத்தில் தான் சந்திதேன். அவரது திறமை குறித்து பாலு மகேந்திராவிடம் கூறினேன். பிறகு அவர் திரைப்படத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை 40 ஆண்டுகளுக்கு மேலாக எங்களது நட்பு தொடர்ந்து வந்தது. அவரை இயக்குநராக்கி பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. ராம்குமார் அவர்களும் நானும் இவருக்கு நெருக்கமான நண்பர்கள். சிறந்த எழுத்தாளரும் கூட, ஆங்கிலத்தில் எழுதுவார். அவரது திறமைகள் இன்னும் முழுவதுமாக வெளிவரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் ஒரு முழு வாழ்வை வாழ்ந்துவிட்டு சென்ற அவரை வழி அனுப்ப வந்துள்ளோம். அவரது நினைவுகள் என்றும் எங்களது மனதில் இருக்கும்” என்று நெகிழ்ந்தார் கமல்.
மோனிஷா