kamal haasan says students

தற்கொலை எண்ணம் எனக்கும் தோன்றியது: கமல்ஹாசன்

சினிமா

நடிகர் கமல்ஹாசன் லயோலா கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் தற்கொலை எண்ணம் குறித்து பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் நம்பிக்கையூட்டும் விவாத பொருளாக மாறியுள்ளது.

சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் நேற்று (செப்டம்பர் 23) மாணவர்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன் தனக்கும் தற்கொலை எண்ணம் ஏற்பட்டதாகவும்.. ஆனால், அது தவறு என பின்னர் புரிந்து கொண்டேன் என்று பேசியது பலரையும் கவர்ந்துள்ளது.

kamal haasan says students

மாணவர்கள் மத்தியில் அதிகமாக தற்கொலை எண்ணம் ஏற்பட்டு வரும் நிலையில், அந்த எண்ணத்தை கடந்து வாழ்க்கையில் சாதிப்பது எப்படி என்பது குறித்த பேச்சை நடிகர் கமல்ஹாசன் லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.

“சிறுவயதிலேயே களத்தூர் கண்ணம்மா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், இளைஞன் ஆன பின்னர் 21 வயது இருக்கும் போது சினிமாவே என்னை ஒதுக்கியது போல இருந்தது. அப்போது எனக்கும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் தோன்றியது. ஆனால், என்ன ஆகுதுன்னு ஒரு கைபாத்துடலாம்னு தைரியத்தில் கடைசிவரை முயற்சி செய்ய முடிவெடுத்தேன், இப்போ உங்கள் முன் கமல்ஹாசனாக நிற்கிறேன்.

மரணம் அனைவர் வாழ்விலும் வரும் ஒரு நிகழ்வு. அது வரும் போது வரட்டும். நாமாக அவசரப்பட்டு விடக்கூடாது. தற்கொலை எண்ணத்தை தாண்டி வாழ்ந்தவர்கள் பலர் சாதனையாளர்களாக உள்ளனர்” என்றவர் மாணவ மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு தனது பாணியில் பதில் கூறியுள்ளார்.

மாணவி ஒருவர் கமல்ஹாசனிடம், “உங்கள் வாழ்க்கைக்கு பணம் எந்த அளவிற்கு முக்கியம் சார்?” என்று கேட்டார்.

கேள்விக்குபதில் அளித்து கமல்ஹாசன் பேசுகையில், “என் வாழ்க்கையில் 15 வயது முதல் 16 வயது வரை பணம் என்பது கையில் கிட்டத்தட்ட இல்லவே இல்லைங்க.. அது இல்லாமல் என்னுடைய அனுபவத்தில் 6 மாதம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கேன். ஆனால் மூச்சு இல்லாமல் 40 செகண்ட், அல்லது ஒரு நிமிடம் தாங்கும். தண்ணீர் இல்லாமல் ஆறு ஏழு நாட்கள் தாங்கும். சோறு இல்லாமல் 10 நாட்கள் தாங்கும். அதைவிட பணம் எப்படி முக்கியமாக இருக்க முடியும். இதை எல்லாம் வாங்குவதற்கு பணம் ஒரு கருவி அவ்வளவு தான்.

ஆண்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், தாடி வைக்க வேண்டுமா அல்லது மழிக்க வேண்டுமா என்பது உங்கள் இஷ்டம்.. அதை  பிளேடு கிட்ட போய் கேட்டுக்கிட்டு இருக்க முடியாது. அது வெறும் கருவி தான்.. வேணாம் கொஞ்சம் தாடி நீளமாக வச்சுக்கோ, மீசை மட்டும் வச்சுக்கோ என்று அதுவா சொல்லும்.. இதை எல்லாம் பிளேடுக்கு சொல்லத் தெரியாது. அவ்வளவு தான் பணமும்.. அது பேசா மடந்தை.. அவ்வளவு தான்” என்று கூறினார்.

மாணவர் ஒருவர் கமல்ஹாசனிடம் இன்னொரு கமல்ஹாசனை நாம் பார்க்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “இதை பாராட்டாக சொல்வதாக நான் சந்தேகப்படுகிறேன். ஏனெனில் இந்த மாதிரி இன்னொருவர் இருக்க முடியாது என்பது போல் சொல்றீங்க.. அப்படி இருக்கவே கூடாது என்பது தான் என்னுடைய கற்பனை..

உடனே இன்னொரு கமலை பார்க்க வேண்டும் என்றால் உங்களது பெயரான பெல்மார்ட் என்பது கமல் என்று மாற்றினால் இரண்டு பேர் இருப்பாங்க..இல்லைங்க அது சும்மா ஜோக் அடிக்கிறீங்க என்றால், வேண்டாம் ஒரு கண்ணாடி கொண்டு வந்து வையுங்க.. இங்க ஒரு கமல் தெரியும்.. அங்க ஒரு கமல் தெரியும்.. நான் சொல்வது என்னவென்றால், பெல்மாண்ட் மாதிரி இன்னொருவர் வருவாரா என்று சொல்வது மாதிரி நீங்க(மாணவர்) ஆயிடுங்க அவ்வளவு தான்.. இதை பார்த்து பொறாமை படாதீங்க.. இது வெறும் கைரேகை தான்.. நான் பண்ற குற்றங்களை இந்த உடம்பை வைத்து கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான் இது.. அடையாளம்..

kamal haasan says students

ஆனால் உங்களுக்கு என்று தனி அற்புத டிஏன்ஏ இருக்கிறது.. அதை பற்றி நான் தசாவதாரம் படத்தில் சொல்லியிருப்பேன்.. எல்லாருமே உலக நாயகன் தான் என்று கூறியிருப்பேன்.. ஏனெனில் 40 லட்சம் விந்துக்களில் ஒரு விந்துவில் வந்தவன் தான் நீ.. உன்னுடைய முதல் அப்பியரன்ஸே வெற்றி வீரனாக நீ வந்திருக்கிறாய்.. உன்னை தோல்வியை தழுவ வைப்பது உன்னுடைய சோம்பேறித்தனம் தான் முடியுமே தவிர, உனக்கு முதலில் இருப்பது போல் நம்பிக்கையும் வேகமும் இருந்தால் உன்னை வீழ்த்தவே முடியாது.

கமல்ஹாசனை பாராட்டுங்கள்.. இல்லாவிட்டால் எனக்கு சம்பளம் வராது.. கமல்ஹாசனை பாராட்டுங்கள், எனக்கு சம்பளமும் வரும்.. நம்பிக்கையும் வரும்.. இத்தனை பேர் பாராட்டுறாங்களே.. அப்ப நாம் ஏதோ சரியாக செய்கிறோம் என்ற நம்பிக்கை வரும்.. ஆனால் இது மாதிரியே ஆகனும் அப்படீன்னு நினைக்காதீங்க…நான் சினிமாவில் நடிக்க வந்த போது.. இப்படி எல்லாம் நடிக்க முடியுமா என்று வியந்த நடிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக என் ஏரிக்கரையில் தெரிந்த முதல் சூரியன் சிவாஜி அவர்கள்.. அதற்கு அப்புறம் தான் தெரியும்.. இப்படி ஒரு கேலக்ஸியே இருக்குது என்று.. அதற்கு காரணம் .. எனக்கு கோனார் நோட்ஸ் கொடுத்து சொல்லி அனுப்பி வைத்தது சிவாஜி சார் தான்.

நான் உங்களுக்கு சொல்லிக்கொள்வது எல்லாம்.. நான் இன்னொரு சிவாஜியாக நினைக்கவே இல்லீங்க.. இன்னொரு சிவாஜி வருவாரான்னு கூட கேட்கல.. அவர் வந்துட்டேன் தம்பி என்று கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதுபோல் உங்களுக்கு நான் கைகொடுக்க வேண்டும் அதுதான் ஆசை.. அவர் தான் சொல்லிட்டாருல்ல.. இனி மதிக்கவே வேண்டாம்னு விட்டுறாதீங்க.. அதுதான் எனக்கு ஆக்சிஜன்” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

நீட் தற்கொலை, பெற்றோரிடம் பிரச்சனை, மன அழுத்தம், மொபைல் போன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை, காதல் தோல்வி போன்ற காரணங்களால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கமல்ஹாசனின் தற்கொலை எண்ணம் தொடர்பான பேச்சு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இராமானுஜம்

மதுர குலுங்க குலுங்க… ஹேப்பி ஸ்ட்ரீட்டில் முண்டியடித்த கூட்டம்!

கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஜெயக்குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *