கமல் பிறந்த நாளுக்கு லைகா வாழ்த்தாதது ஏன்? மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் இதோ!

சினிமா

சாதாரண யூடியூப் சேனலில் இருந்து தேசிய செய்தி தொலைக்காட்சி வரை நவம்பர் 7 அன்று நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், இந்தியன் 2 படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் மட்டும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என்ற கேள்வி தமிழ் சினிமா வட்டாரத்தில் எழுந்தது.

நடிகர் பாபி சிம்ஹா, ஆர்ஜே விஜய்க்கு எல்லாம் வாழ்த்து சொல்லும் லைகா நிறுவனம், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாததற்கு காரணம் என்னவாக இருக்கும் என்கிற கேள்விகளுடன் கோடம்பாக்கத்தை சுற்றியபோது சில தகவல்கள் கிடைத்தன.

“கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் கொண்டாட்டம் நவம்பர் 7 அன்று  நடைபெற்றது. அன்றே விக்ரம் படத்தின் 100வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியும் சென்னையில் களைகட்டியது. விஜய் டிவியில் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

இந்தியன் -2 படத்தை இயக்கி வரும் இயக்குநர் ஷங்கர் அந்தப் படத்தின் பிரத்யேக புதிய போஸ்டரை வெளியிட்டு இந்தியன் படக்குழு சார்பாக உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருந்தார்.

ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகா கமல்ஹாசனை சட்டை செய்யாமல் போனதற்கு காரணம் நவம்பர் 6 அன்று மாலை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட கமல்ஹாசன்-234 பட அறிவிப்புதான்.

தற்போது கமல்ஹாசன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்- 2 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். விரைவில் அப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது. அதற்கடுத்து அந்நிறுவனத்தின் தயாரிப்பிலேயே இன்னொரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லி ஏற்கனவே பெரும் தொகையை முன்பணமாக பெற்றுள்ளார் கமல்ஹாசன். ’தலைவன் இருக்கிறான்’ என்று அப்படத்திற்குப் பெயர் வைத்திருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

ஆனால், அதற்கு பின் அப்பட வேலைகள் எதுவுமே நடக்கவில்லை. இந்தியன் 2 முடிந்ததும் அந்தப்பட வேலைகளைத் தொடங்குவார் என்று லைகா நிறுவனத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கமல்ஹாசன்பிறந்த நாளையொட்டி வெளியான அறிவிப்பில், கமல்ஹாசனின் 234 ஆவது படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் அப்படத்தை வெளியிடுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

லைகா நிறுவனர் சுபாஸ்கரன் சென்னையில் இருக்கும்போதே இந்த அறிவிப்பு வெளியானது.  அத்தகவல் அறிந்ததும் சுபாஸ்கரன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
நூறு கோடி ரூபாய்வரை நம்மிடம் பணம் வாங்கியிருக்கிறார் கமல்ஹாசன். அதற்கான வேலைகள் பற்றி எதுவும் சொல்லாமல் அடுத்த படத்தை அறிவிப்பதா என்பதுதான் அவருடைய கோபத்துக்குக் காரணம்.

கமல்ஹாசன் புத்திசாலித்தனமாக, கமல் 234 படம் என்று அறிவித்தாலும் அப்படம் 2024 வெளியீடு என்று அறிவித்திருப்பதால் இந்தியன்-2 முடிந்ததும் அப்படத்தில் நடித்தால்தான் 2024 வெளியீட்டுக்குத் தயாராக முடியும். இதனால், ’தலைவன் இருக்கிறான்’ படத்தின் நிலை என்னவாகும், கமல்ஹாசன் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்தப் பின்னணியில், ‘எங்கள்  படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்த படத்துக்குப் போகவேண்டும் என்று கமல்ஹாசனிடம் கறாராகச் சொல்வது. அதற்கு அவர் சம்மதிக்கவில்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது’ என்று லைகா தரப்பு முடிவு செய்திருப்பதாகச் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, கமல்ஹாசன் பிறந்தநாள் விருந்துக்கு அழைப்பு இருந்தும் அதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறார்  சுபாஸ்கரன்.

இவையெல்லாம் சேர்ந்துதான் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் லைகா நிறுவனம் தவிர்க்க காரணம்” என்கின்றனர், கோடம்பாக்க வட்டாரத்தில்.

ஒரு பிறந்தநாள் வாழ்த்துக்குப் பின்னால் எத்தனை கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகம் இருக்கிறது என்பதுதான் சோகம்!

இராமானுஜம் 

”என் பயம் போனதற்கு இது தான் காரணம்”: சிம்பு சொன்ன சீக்ரெட்!

‘வாத்தி’க்கு மாறாக ‘டிஎஸ்பி’!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *