கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய சரித்திர புனைவு நாவலான பொன்னியின் செல்வன் தமிழ் மக்களிடம் பிரபலமானது. இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாகத் தயாரிக்கப்பட்டுள்ள படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார்.
புனைவு நாவலில் இடம்பெற்றுள்ள ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா, பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்னபழுவேட்டரையராக பார்த்திபன், சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தகனாக ரகுமான், வானதியாக நேகா துலிபாலா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, பெரிய வேளாராகப் பிரபு, மலையமானாக லால் மற்றும் பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு மற்றும் ஆழ்வார்கடியன் நம்பியாக ஜெயராம் என ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இவர்களது கதாபாத்திரங்களின் தோற்றத்தை ஏற்கனவே படக்குழு வெளியிட்டு படத்தின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியது.

பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனத்திற்காக முதல் பிரதி அடிப்படையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
செப்டம்பர்30 அன்று பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (செப்டம்பர் 7) இரவு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு ட்ரெய்லர் வெளியிடுவார் என கூறப்பட்டு வந்தது. அவர் பங்கேற்காத நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் பங்கேற்கின்றனர் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

அதன்படி விழா 6 மணிக்குத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது .ஆனால் வழக்கம்போல தாமதமாக 7:25 மணிக்கு தான் தொடங்கினார்கள்.விழாவில் மணிரத்னம், ரஜினிகாந்த், கமல்ஹாசன், லைகா சுபாஸ்கரன், விக்ரம், ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், நாசர், சித்தார்த், அதிதி ராவ், கிஷோர், ஜெயசித்ரா, சோபிதா துலிபாலா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ரகுமான், ஜெயராம், காளிதாஸ், ஷங்கர், டிஜி தியாகராஜன், தேனாண்டாள் முரளி, தரணி, மிஷ்கின் உள்ளிட்ட ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திரைநட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ட்ரெய்லரை வெளியிட்டனர். சுமார் 3.23 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் குரலில் தொடங்கும் இந்த முன்னோட்டம் அப்படியே பொன்னியின் செல்வன் கதை களத்திற்குள் பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. சமர், காதல், வஞ்சம், நட்பு, பகை என ஒவ்வொரு ஃப்ரேமும் நகர்கிறது. குறிப்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தின் மூலம் கவர்கிறார். நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் நடந்தது.
ஆறு பாடல்கள் என்னென்ன
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இவற்றில் பொன்னி நதி மற்றும் சோழா சோழா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. மீதமுள்ள நான்கு பாடல்கள் விபரமும் வெளியாகி உள்ளன. அதன்படி ராட்சச மாமனே… சொல்… அலைகடல்… மற்றும் தேவராளன்…. ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 6 பாடல்களையும் வித்தியாசமான முறையில் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.
இராமானுஜம்
பொன்னியின் செல்வன் திரைப்படம்: எதிர்பார்ப்புகள், சர்ச்சைகள், விவாதங்கள்…