சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிராமமொன்றைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவரது நண்பரான தீனா இருவரும், சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள்.
ஆனால், ஜி.வி.பிரகாஷுக்கு எப்படியாவது வனத்துறையில் பணிபுரிய வேண்டும் என்பதே லட்சியம். இதற்கிடையில், முதியோர் இல்லத்தில் இருந்து பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
எதற்காக பாரதிராஜாவை திருட்டு வேலை செய்யும் ஜி.வி.பிரகாஷ் தத்தெடுக்கிறார்?, பாரதிராஜாவின் பின்னணி என்ன? ஜி.வி.பிரகாஷ் குமார் வனத்துறையில் சேர்ந்தாரா? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்வதே ’கள்வன்’ திரைப்படத்தின் கதையாகும்.
கொங்கு மண்டலத்தில் நடைபெறும் கதைக்களம் என்பதால் அனைத்து கதாபாத்திரங்களும் கொங்குத் தமிழிலேயே உரையாடுகின்றனர். அது ஓரளவுக்கு கதைக்களத்திற்குள் நம்மைக் கொண்டு செல்கிறது.
போதுமான அழுத்தம் தரக்கூடிய இந்த கதையினை, மிக எளிமையாகக் கையாண்டிருந்தால் நிச்சயம் ஒரு சிறந்த திரைப்படமாக வந்திருக்கக் கூடும். ஆனால், திரைக்கதை வடிவமைப்பிலும் கதை சொல்லல் முறையிலும் நம்மை மிகவும் சோர்வாக்குகிறார் இயக்குநர் பி.வி.சங்கர்.
ஜி.வி.பிரகாஷின் கதாபாத்திர வடிவமைப்பைப் பொறுத்தவரையில், காசுக்காக எதையும் செய்யும் சுயநலவாதியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதையின் தேவையும் அது தான். ஆனால், அவரை ஒரு சராசரி தமிழ் சினிமா ஹீரோ என்று தான் நம்மால் கடந்து போக முடிகிறது.
Video: இப்படி சொதப்பிருச்சே… திருமண வீடியோவால் அப்செட்டான டாப்சி
இதன் காரணமாக படத்தின் முக்கியத் திருப்பமாக வரும் இடைவேளை காட்சியானது நம்மை பெரிதாக ஈர்க்கவில்லை. அப்போதே, கிளைமாக்ஸ் நிச்சயம் இப்படித்தான் முடியப் போகிறது என்கிற எண்ணம் பார்வையாளர்களிடம் தானாக வந்துவிடுகிறது.
மறுபக்கம், படத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான பாரதிராஜாவின் கதாபாத்திரத்தை பல்வேறு கோணத்தில் ஆழமாக எழுத வாய்ப்புகள் இருந்தும் இயக்குநர் அதைத் தவற விட்டிருக்கிறார்.
பாரதிராஜாவின் பின்னணி, அவரது தற்போதைய நிலை போன்றவற்றை சொன்னதிலும் சினிமாத்தனங்கள் மட்டுமே எஞ்சியிருந்ததால் அவைகளைப் பெரிதாக நம்மால் தொடர்பு படுத்திக்கொள்ள முடியவில்லை.
ஆனால், பாரதிராஜா அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பாத்திரத்தை அவர் ஏற்றதால் மட்டுமே நம்மால் கொஞ்சம் சோர்வின்றி பார்க்க முடிந்தது என்பதே திண்ணம்.
ஒரு அழிந்துவரும் கலையைச் செய்து வந்த கலைஞன் கண்ட வலி, தனிமை, போன்ற பல்வேறு உணர்ச்சிகளை பாரதிராஜாவின் கதாபாத்திரத்தின் வாயிலாக நிச்சயம் சிறப்பாக கடத்தியிருக்க முடியும்.
அதை போதுமான அளவு எழுத்தில் காட்டாததால் மற்றும் ஒரு வழக்கமான கதாபாத்திரமாக மட்டுமே அது திகழ்கிறது. படத்தின் மையக்கதையை விட்டு விலகி தேவையில்லாத காதல், காமெடி, ஹீரோயின் போன்றவையெல்லாம் நமக்கு காட்டியது ஏன் என்று தெரியவில்லை.
ஒரு வேளை அந்த காதல் காட்சிகள் புதுமையாகவும், கதைக்கு பலம் சேர்ப்பதாகவும் இருந்திருந்தால் கூட பரவாயில்லை. அதற்கான எந்த ஒரு அறிகுறியும் அக்காட்சிகள் எழுதப்பட்ட விதத்தில் இல்லை.
திரைப்படங்களில் சினிமாத்தனங்கள் இருக்கலாம். ஆனால், அவை எவ்வாறு உள்ளது, எதற்காக உள்ளது என்பது மிக அவசியம்.
குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸில் யானையுடன் ஜி.வி.பிரகாஷ் சண்டைபோடும் காட்சி ஏதோ ஒரு மாஸ் ஹீரோவிற்கும், வில்லனுக்குமான கிளைமாக்ஸ் ஃபைட் சீன் போல் படமாக்கியதை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷின் இசையில் ‘அய்யய்யோ நெஞ்சு’ பாடல் போல உள்ள ஒரு பாடல் மட்டும் நினைவில் கொஞ்சம் பதிந்தது. தீனாவின் ஒரு சில காமெடி கவுண்டர்களுக்கு ஆடியன்ஸிடம் சி(ற)ரிப்பான வரவேற்பு இருந்தது.
அதைத் தவிர்த்து தமிழ் சினிமாவின் வழக்கமான ஹீரோயினாக இவானா. சத்தியமங்கலம் வனப்பகுதி கிராமங்கள், அவற்றைச் சுற்றியுள்ள ஆபத்து, வாழ்வியல் சிக்கல்கள் போன்றவற்றை இன்னும் தெளிவாக அழுத்தமாகக் காட்டியிருக்கலாம்.
ஏனெனில் இந்தப் படத்தில் காட்டப்படும் சிக்கல்கள், ஆபத்துகள் அனைத்தும் எந்தவொரு பதைபதைப்பையோ, அழுத்தத்தினையோ நமக்குக் கடத்தவில்லை. சுமாரான கிராஃபிக்ஸில் வரும் ‘புலி காட்சி’ எந்த ஒரு படபடப்பையும் நம்மிடையே உண்டாக்கவில்லை என்பதையும் இந்த இடத்தில் நாம் குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் படத்தில் இருக்கும் லாஜிக் பிரச்சனைகளைப் பற்றி நாம் ஆராய முற்பட்டால் அது முட்டாள்தனம். படத்தில் நடித்துள்ள நாய் மற்றும் யானை சிறப்பான பங்கைத் தந்துள்ளன.
மொத்தத்தில் சென்ற வாரம் ‘ரிபெலாக’ வந்து நம்மை சத்திய சோதனை செய்த ஜி.வி இந்த வாரம் ‘கள்வனாக’ வந்து மீண்டும் நம்மை சோதித்துள்ளார்.
-ஷா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
AK: ஜஸ்ட் மிஸ்ஸில் ‘உயிர்’ தப்பிய அஜித்- ஆரவ்… வீடியோ பார்த்து பதறும் ரசிகர்கள்!
25 ஆண்டுகள் முதலமைச்சர்…அஸ்திவாரத்தை அசைக்கும் பாஜக…ஒரிசாவைக் கைப்பற்றப்போவது யார்?
கோவை : ஒரே மேடையில் ஸ்டாலின், ராகுல் பிரச்சாரம்!
நடராஜன் பர்த்டே பார்ட்டியில் அஜித்… இதுதான் காரணமா? வெளியான சுவாரஸ்ய தகவல்!