நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 கி.பி’. ஜூன் 27 அன்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது.
மகாபாரதம், ஏஐ தொழில்நுட்பம், கல்கி அவதாரம் என புராணக் கதைகளுடன் எதிர்காலத்தை கற்பனை செய்து படம் முழுவதும் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் உலகளவில் 15 நாட்களில் ரூ.1000 கோடி மொத்த வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கல்கி படம் வெளியான ஜூன் 27, ரூ.191.5 கோடி, ஜூன் 28, ரூ.104 கோடி, ஜூன் 29, ரூ.120 கோடி, ஜூன் 30 ரூ.140 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்த கல்கி படத்தின் வசூல் அடுத்து வந்த நாட்களில் அதிகரிக்கவில்லை.
வாரத்தின் இறுதி நாட்களில் வசூல் அதிகரித்தாலும் மற்ற நாட்களில் குறைவாகவே இருந்ததை தயாரிப்பு நிறுவனம் அறிவித்த கணக்கில் இருந்தே புரிந்து கொள்ள முடிகிறது. இப்படத்தின் பெரும்பகுதி வசூல் தெலுங்கு, இந்தி மொழிகளின் மூலமாகவே கிடைத்துள்ளது.
இந்திய மொழிகளில் வெளியான ஏழு படங்கள் ரூ.1000 கோடி மொத்த வசூலை கடந்திருக்கிறது. இதில் மூன்று படங்கள் இந்தி, மூன்று படங்கள் தெலுங்கு, கன்னடத்தில் ஒரு படம் ஆகும்.
இந்திய அளவில் ஷாருக்கான், பிரபாஸ் இருவரும் ரூ.1000 கோடி வசூல் செய்த இரண்டு படங்களில் நடித்த நடிகர்களாக உள்ளனர். ரூ.1000 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த மூன்றாவது படமாகவும், பிரபாஸ் நடிப்பில் வெளியான இரண்டாவது படமாகவும் கல்கி 2898 கி.பி. படம் இடம் பெற்றுள்ளது.
கல்கி 2898 கிபி திரைப்படம் படைத்த சாதனைகள்!
1. 2024-ஆம் ஆண்டு இந்தியில் முதல் வாரத்தில் ரூ.162.8 கோடி வசூல் செய்து இந்தாண்டு முதல் வாரத்தில் அதிகம் வசூல் செய்த படமாக இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு பைட்டர் ரூ.146.5 கோடி வசூலித்திருந்ததே அதிகபட்சம்.
2. 2024 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களில் கல்கி திரைப்படம் தான் முதல் வார முடிவிற்கு முன்பாக 6 நாட்களில் ரூ.700 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.
3. 2024 ஆம் ஆண்டு ஜூன் வரை வெளியான இந்தியப் படங்களில் 2 கோடி பேர் திரையரங்குக்கு வந்து பார்த்த சாதனையை கல்கி நிகழ்த்தியுள்ளது. இதற்கு முன்பு ஹனுமன் படத்தை 1.44 கோடி பார்வையாளர்களும், பைட்டர் படத்தை 1.17 கோடி பார்வையாளர்களும் தியேட்டருக்கு வந்து பார்த்துள்ளனர்.
4. பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி, சலார் படங்களுக்கு பின் ஒரு வாரத்தில் 2 ஆவது அதிகபட்ச வசூல் செய்த படம் கல்கி. பாகுபலி 1 (ரூ.650 கோடி), சலார் 1(ரூ.615 கோடி)
5. முதல்வாரத்தில் இந்தியளவில் அதிகம் வசூலித்த படங்களான பாகுபலி 2, கேஜிஎஃப் 2, ஆர்.ஆர்.ஆர், ஜவான், அனிமல், பதான், தங்கல் ஆகிய படங்கள் வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது கல்கி.
6.அமெரிக்காவில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே 14 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.110 கோடி. மிக விரைவாக இந்த சாதனையை இந்தப் படம் படைத்துள்ளதாக அமெரிக்க விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகளவில் ரூ.1000 கோடி மொத்த வசூலை கடந்த இந்திய படங்கள்!
1.தங்கல்-2016 (இந்தி)
நிதிஷ் திவாரி இயக்கிய தங்கல் படம் உலகளவில் ரூ.2,070 கோடி வசூல் செய்தது. பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது. அமீர்கான், பாத்திமா சனா ஷேக், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். இன்று வரை இந்த படத்தின் சாதனையை இந்திய மொழிகளில் வெளியான வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2..பாகுபலி 2 : 2017 (தெலுங்கு)
ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தின் தொடர்ச்சியாக 2017-ம் ஆண்டு வெளியான பாகுபலி 2 படம் உலகளவில் ரூ.1,742.3 கோடி வசூல் செய்தது.
3.RRR-2022(தெலுங்கு)
ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படம் உலகளவில் ரூ.1,250.9 கோடி வசூல் செய்தது.
4.கேஜிஎஃப் 2 -2022 (கன்னடம்)
பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப்- 2 உலகளவில் ரூ.1,177.9 கோடி ரூபாய் வசூல் செய்தது.
5.பதான்-2023 (இந்தி)
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருந்த பதான் படம் உலகளவில் ரூ.1,050 கோடி ரூபாய் வசூல் செய்தது.
6.ஜவான்-2023 (இந்தி)
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படம் ரூ.1,148 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
7. கல்கி கி.பி-2898- 2024(தெலுங்கு)
பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 15 நாட்களில் ரூ.1000 கோடி மொத்த வசூல் செய்துள்ளது.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
WCL 2024: பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி!