நாக் அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயண் இசையமைப்பில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி மற்றும் பலர் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ தெலுங்கு படம் இன்று (ஜூன் 27) உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
சினிமாவில் வெற்றி பெறுவதை காட்டிலும் பெற்ற வெற்றியை தொடர்ந்து தக்க வைத்து கொள்வது முக்கியமானது.
இந்திய சினிமாவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் படைப்பு, பாக்ஸ் ஆபீஸ் வசூலில் அதிர்வை உண்டாக்கிய படம் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி-2 .
தனி நபர் சாகசம், ஹீரோயிசம் கடந்து அந்த படத்தின் உள்ளடக்கம், பிரம்மாண்டம் படத்தை பார்க்கும் எந்த நாட்டை சேர்ந்தவருக்கும் புரிவதுடன் தன்னை அப்படத்துடன் இணைத்து கொள்ள கூடிய திரைக்கதையே பாகுபலி-2 படம் உலகம் முழுவதும் வெற்றி பெற காரணம்.
அதனை தொடர்ந்து ஆர் ஆர் ஆர் படமும் அதே பாணியில் ஹீரோயிசம் தவிர்த்து படைப்பாக்கத்தில் வெற்றி பெற்றது.
தெலுங்கு நடிகர்களை பொறுத்தவரை ஹீரோயிச தனி நபர் சாகசங்களில் இருந்து இன்னும் வெளிவரவில்லை என்றே கூறலாம்.
பாகுபலி-2 படத்திற்கு பின் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, சாலார், ஆதிபுரூஷ் படங்கள் எல்லாம் உள்ளடக்கத்தை கடந்து ஹீரோயிசத்தை பிரதான படுத்திய படங்கள். எந்தவொரு படமும் பாகுபலி-2 படத்தின் வசூலை நெருங்க முடியவில்லை.
இன்று வெளியாகும் கல்கி 2898 ஏடி படத்தின் வெற்றி மட்டுமல்ல அதன் பாக்ஸ் ஆபீஸ் வசூல் 1000 ம் கோடி ரூபாயை கடக்க வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிலீஸ்க்கு முன்பே லாபம்!
அதற்காகவே இந்தி ரசிகர்களுக்காக அமிதாப்பச்சன், தென்னிந்திய ரசிகர்களுக்காக கமல்ஹாசன் இருவரையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இந்தி நடிகையான தீபிகா படுகோனே முதல் முறையாக நடிக்கும் தெலுங்குப் படம். இப்படி பல விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளன.
சுமார் 600 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது. ஆனால் படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமை எதிர்பார்த்த விலைக்கு வியாபாரம் ஆகவில்லை.
ஆந்திர, தெலங்கானா – ரூ.170 கோடி ,கர்நாடகா மாநில உரிமை – ரூ.25 கோடி, தமிழ்நாடு விநியோக உரிமை – ரூ.16 கோடி, கேரள மாநில உரிமை – ரூ.6 கோடி, இந்தி மொழி விநியோக உரிமை – ரூ. 85 கோடி, வெளிநாட்டு விநியோக உரிமை- ரூ.70 கோடி என மொத்தமாக 372 கோடி ரூபாய் அளவில் இப்படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. பிற உரிமைகள் மூலம் 400 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் லாபத்துடன் படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
அதே நேரம் திரையரங்குகள் மூலமாக சுமார் 1000ம் கோடி ரூபாய் வசூல் ஆனால் தான் திரையரங்கு உரிமைக்கு விநியோகஸ்தர்களால் கொடுக்கப்பட்டுள்ள 372 கோடி ரூபாய் அசல் திரும்ப கிடைக்கும்.
தயாரிப்பாளராக வெற்றி பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற வேண்டும் என்பதில் வைஜெயந்தி மூவீஸ் தெளிவாக உள்ளது.
நிமிடத்துக்கு நிமிட ரிவ்யூ வேண்டாமே!
அதன்படி கல்கி படம் வெளியான பின்பு படம் பற்றிய தவறான விமர்சனங்கள், கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி விட வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் வைத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
அதில், “இது நான்கு ஆண்டு பயணம் மற்றும் நாக் அஸ்வின் குழுவினரால் கடும் உழைப்பு செலுத்தப்பட்ட திரைக்கதை இந்த கதையை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு இனி ஒரு முயற்சி பாக்கி இல்லை என்கிற அளவில் முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்யப்படவில்லை. இதை முன்னோக்கி கொண்டு செல்ல படக்குழு ரத்தமும் வியர்வையும் சிந்தியுள்ளது. தயவுசெய்து சினிமாவை மதிப்போம். கலையை மதிப்போம்.
ஸ்பாய்லர்களை வெளியிட வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். நிமிடத்துக்கு நிமிட தகவல்களை அல்லது பைரசியில் ஈடுபடுவதோ படம் பார்க்கும் பார்வையாளனின் அனுபவத்தை கெடுத்துவிடும். எனவே படத்தின் உள்ளடக்கத்தை பாதுகாத்து, வெற்றியை சேர்ந்து கொண்டாட ஒன்றிணைவோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கடிதம்!