நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மலையாளம் மற்றும் தமிழ்ப்படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆகஸ்ட் 31 அன்று வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்தில் காளிதாஸ் நடித்திருக்கிறார். இதனை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

இந்தப்படத்தை, பாலாஜிமோகன் இயக்க, டாக்டர் முரளிமனோகர் தயாரிக்க உள்ளார். மொத்தப் படப்பிடிப்பும் லண்டனிலேயே நடத்தப்பட உள்ளது. செப்டம்பர் முதல் வாரம் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
இந்தப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் அமலாபால் மற்றும் துஷாராவிஜயன் ஆகியோரும் நடிக்கவிருக்கிறார்கள். இவர்களில் துஷாராவிஜயனை இந்தப்படத்தில் நடிக்க வைக்கும்படி பரிந்துரை செய்தது நாயகன் காளிதாஸ் ஜெயராம் தான் என்கிறது படக்குழு வட்டாரம்.

இவர்கள் இருவரும் இணைந்து நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்திருந்தார்கள். அப்போது அவர்கள் இருவருக்குமிடையில் நல்ல நட்பு உருவாகி காதலாக மாறியிருக்கிறது.
அதனடிப்படையிலேயே இந்தப் பரிந்துரை நடந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. திரையுலகில் அவ்வப்போது புதிய காதல் ஜோடிகள் உருவாவதுண்டு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு காதல் இணையாக, இவர்கள் வந்திருக்கிறார்கள் என்று பேச்சு இருக்கிறது.
ஒரு படத்தில் சேர்ந்து நடித்தாலே இப்படி ஒரு யூகம் கிளம்புவதுண்டு, இதுவும் அதுபோன்றதொரு யூகமா அல்லது உண்மையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராமானுஜம்