ஒரு பண்டிகை எதற்காகக் கொண்டாடப்படுகிறது? சமூகத்தின் அனைத்து தட்டுகளிலும் இருக்கும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக அது அமைகிறது. அப்படி ஒரு பண்டிகையைக் கொண்டாட நாம் என்ன செய்ய வேண்டும்? ஒரு சமூகமாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும். யதார்த்தத்தில் அதுதான் நிகழ்கிறதா? சமூகப் பரப்பில் ஒவ்வொரு அடிக்கும் பல்வேறு வித்தியாசங்கள் நிறைந்திருக்கும் சூழலில், அப்படியொரு கொண்டாட்டத்தில் அனைத்து மக்களும் ஒரேமாதிரியான மகிழ்ச்சியை அனுபவிக்க முடியுமா? இந்த கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் கார்பரேட் வணிகம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது? kali venkat kida movie review
இந்தக் கேள்விகளை நேரடியாகக் கேட்டு நம்மைச் சோர்வுறச் செய்யாமல், தான் இயக்கிய ‘கிடா’ திரைப்படத்தில் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரா.வெங்கட். இதில் மறைந்த ‘பூ’ ராமு, காளி வெங்கட், விஜயா, மாஸ்டர் தீபன், பாண்டியம்மா உட்படப் பலர் நடித்துள்ளனர். தீசன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
காணாமல்போகும் ஆடு!
ஒரு வயதான தம்பதியும் அவர்களது பேரனும் குடிசை வீட்டின் வெளியே அமர்ந்திருக்கின்றனர். அப்போது, அவர்களது வீட்டில் வளரும் ஆட்டை வாங்கச் சிலர் வருகின்றனர். உடனே, அந்த பெரியவர் ஆடு கட்டப்பட்டிருந்த இடத்திற்குச் செல்கிறார்; ‘ஓ’வென்று அலறுகிறார். ஆட்டைக் காணவில்லை. அங்கு வந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்த, அந்தச் சிறுவன் ஏதுமறியாமல் விழிக்கிறான். சில நொடிகளில், ஒரு சிறிய வாகனத்தில் அந்த ஆட்டைச் சிலர் திருடிச் செல்வதைக் காண்கின்றனர். அதனைத் துரத்த முற்படுகின்றனர். இந்தக் காட்சியில் இருந்து ‘கிடா’ திரைக்கதை தொடங்குகிறது. கூடவே, படத்தின் கதை என்னவென்பதையும் சொல்லிவிடுகிறது.
மகளையும் மருமகனையும் விபத்தில் பறிகொடுத்து தவிக்கும் செல்லையா – மீனம்மா (பூ ராமு, பாண்டியம்மா) தம்பதிக்குப் பேரன் கதிர் (தீபன்) ஆறுதலாக விளங்குகிறான். அந்த விபத்து ஏற்படுத்திய விரக்தியினால், அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட ஆட்டைக் கூட செல்லையா கோயிலில் பலி கொடுக்கவில்லை. கருப்பு என்று பெயரிடப்பட்ட அந்த ஆடு கதிரிடம் நெருங்கிப் பழகுகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க, செல்லையா மனம் படபடக்கிறது. டிவி விளம்பரத்தில் வந்த ஆடையை வாங்கித் தருமாறு கதிர் அவரிடம் கேட்கிறான். அவரும் சம்மதிக்கிறார். ஆனால், அவர் கையில் பணம் இல்லை. வேறு வழியில்லாமல், தன் வசமிருந்த தரிசு நிலத்தை விற்க முயற்சி செய்கிறார். அது கைகூடாமல் போக, தீபாவளிக்குப் பணம் வேண்டுமென்று தெரிந்தவர்களிடம் கடன் கேட்கிறார். எவரும் உதவுவதாக இல்லை.
ஒருகட்டத்தில் மனம் நொந்து, ஆட்டை விற்பனை செய்ய முயல்கிறார். அதிலும் தோல்வி. அது அய்யனாருக்கு நேர்ந்துவிட்ட ஆடு என்பதால் வியாபாரிகள் வாங்கத் தயங்குகின்றனர். இந்த நிலையில், கறிக்கடையில் இறைச்சி வெட்டுநராக வேலை பார்த்த வெள்ளைச்சாமி (காளி வெங்கட்) அந்த ஆட்டை வாங்க முன்வருகிறார். தீபாவளி முதல் தனியாகத் தான் கடை தொடங்க, அதுவே மூலதனமாக இருக்கட்டும் என்று எண்ணுகிறார்.
இன்னொரு புறம், வெள்ளைச்சாமியின் மகனும் அவரது மைத்துனர் மகளும் தீவிரமாகக் காதலிக்கின்றனர். பெற்றோர் சம்மதிக்காததால், தாங்களே பதிவுத் திருமணம் செய்வதென்று முடிவெடுக்கின்றனர். தீபாவளிக்கு முந்தைய நாள் ஊரை விட்டுச் செல்லத் திட்டமிடுகின்றனர்.
இந்த நிலையிலேயே, மகனை அழைத்துக்கொண்டு செல்லையா வீட்டுக்குச் செல்கிறார் வெள்ளைச்சாமி. ஆடு திருடுபோன தகவல் தெரிந்ததும், அந்த வாகனத்தைப் பின்தொடர்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதோடு முடிவடைகிறது ‘கிடா’.
எளிய மனிதர்கள், அவர்களை அலைக்கழிக்கும் பிரச்சனைகள், அதற்கு நடுவே உறவுகளையும் நட்பையும் பேணும் வாழ்க்கை என்று நாம் பார்த்த, கேட்ட, கேள்விப்பட்ட சம்பவங்களைக் கதையாகக் கோர்த்திருக்கிறார் இயக்குனர் ரா.வெங்கட்.
ஆடு காணாமல் போவதில் இருந்து கதை தொடங்கினாலும், அது கிடைக்கப் பெறும்போது கதை மாந்தர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுவதாக முடிவடைகிறது இத்திரைப்படம். வழக்கமான சினிமாத்தனமான முடிவுகளாக அவை இல்லை; அதேநேரத்தில், இந்த பூமியில் இப்போதும் இரக்கமும் அன்பும் உதவும் மனப்பாங்கும் கொட்டிக் கிடக்கிறது என்பதைச் சொன்ன வகையில் நம்மை ஈர்க்கிறது.
‘பூ’ ராமுவுக்கு அஞ்சலி!
மறைந்த நாடக மற்றும் திரைப்படக் கலைஞர் ராமு தன் வாழ்நாளில் அன்பே சிவம் தொடங்கி பூ, பரியேறும் பெருமாள், நெடுநல்வாடை, சூரரைப் போற்று உட்படப் பல சிறந்த திரைப்படங்களில் இடம்பெற்றவர். ‘கிடா’ படத்தின் கதையில் அவரது பாத்திரம் பிரதானமாக விளங்குகிறது. தனது வெகுஇயல்பான நடிப்பு மூலமாக அப்பாத்திரத்திற்கு பூ ராமு உயிரூட்டியிருக்கிறார். இப்படம் அவருக்கான ’அஞ்சலியாக’ விளங்கும்.
அவரது மனைவியாக நடித்துள்ள பாண்டியம்மா, திரையில் சில நிமிடங்களே வந்தாலும் நிறைவானதொரு அனுபவத்தை வழங்குகிறார்.
பேரன் கதிர் ஆக நடித்துள்ள தீபன், குறை சொல்ல முடியாத அளவுக்குத் திரையில் வந்து போயிருக்கிறார்.
மிகமோசமான திரைக்கதையில் கூட நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் காளி வெங்கட் இதில் அசத்தியிருக்கிறார். ஒரு எளிய மனிதனின் ஆவேசத்தையும் சாந்தத்தையும் கன கச்சிதமாகத் திரையில் பிரதிபலித்திருக்கிறார்.
அவரது மனைவியாக நடித்துள்ள விஜயா நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
காளி வெங்கட் – விஜயாவின் மகனாக நடித்தவர், அவரது ஜோடியாக நடித்த பெண், ஆடு திருடும் நான்கு பேர், கறிக்கடைக்காரர், அவரது மகன் மற்றும் டீக்கடைக்காரர் உட்பட ஊர்க்காரர்களாக வருபவர்கள் என்று ஒரு பட்டாளமே இதில் நடித்துள்ளது. அனைவருமே ’அளந்து வைத்தாற்போல’ வசனம் பேசியிருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் எம்.ஜெயபிரகாஷ் நம் கண்ணில் பசுமையைக் காட்டியிருக்கிறார். பின்பாதியில் வரும் இரவு நேரக் காட்சிகளில் ஒளியை அளவாகப் பயன்படுத்தியிருக்கிறார்; கூடவே, நம் கண்ணில் ஈரம் கசியச் செய்யும்விதமாக கேமிரா கோணங்களையும் நகர்வையும் வடிவமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின், இயக்குனர் சொல்லும் கதையை மிகச்சரியாக நாம் உள்வாங்கத் துணை நிற்கிறார். இயற்கை மணம் மாறாமல், ஒவ்வொரு பிரேமும் இயல்பாகத் தெரிய மெனக்கெட்டிருக்கிறார் கலை இயக்குனர் கே.பி.நந்து.
கடைசி அரை மணி நேரக் காட்சிகளில் நாம் நெகிழ்ச்சியை அனுபவிக்கும் தருணங்கள் நிறையவே உண்டு. அப்போதெல்லாம், அந்த உணர்வை அதிகப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது தீசன் தந்துள்ள பின்னணி இசை. போலவே, ’கண்ணே நீ அழுதா மனம் தாங்குமா’ பாடலிலும் நம்மைக் கலங்க வைத்திருக்கிறார்.
தொடக்கக் காட்சியில் ஆடு திருடுபோனதைக் காண்பித்திருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய மைனஸ், அதனை முடிந்த அளவுக்கு ரத்தினச் சுருக்கமாகச் சொல்லியிருக்கலாம். போலவே, ஒவ்வொரு பாத்திரமாக அறிமுகப்படுத்திக் கதையின் முக்கியக் கட்டத்தை எட்டும்போது இடைவேளை வந்துவிடுகிறது. அதுவும் கூட, சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.
அதையெல்லாம் தாண்டி பின்பாதியைப் பார்க்கத் தொடங்கினால் ‘இனிப்பு தடவிய மருந்தை உண்ண வைப்பதைப் போல’ எளிய மனிதர்களின் வாழ்விலுள்ள மகத்துவமான தருணங்களை நமக்குள் ஊடுருவ வைக்கிறார் இயக்குனர்.
நெகிழ வைக்கும் காட்சியனுபவம்!
காளி வெங்கட் பாத்திரம் கறிக்கடை உரிமையாளரின் மகனோடு சண்டையிடுவதாகவும், தீபாவளியன்று தனியாகக் கடை வைப்பதாகச் சவால் விடுவதாகவும் ஒரு காட்சி உள்ளது. படத்தின் முடிவில், அப்பாத்திரம் அதனைச் செயல்படுத்துவதாகத்தான் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இயக்குனர் அதனைச் செய்யவில்லை. மாறாக, வேறொரு முடிவை முன்வைத்திருக்கிறார். அதேநேரத்தில், அப்பாத்திரத்தின் தன்மானத்தையும் அவர் உரசவில்லை. இது போன்று இன்னும் சில விஷயங்கள் இத்திரைக்கதையில் உள்ளன.
பாண்டியம்மா பாத்திரம், ஒரு முதிய பெண்மணியின் வீட்டுக்கு உதவி கேட்டுச் செல்வதாக ஒரு காட்சி உண்டு. அப்போது, அப்பெண்மணி செய்யும் காரியம், இளகிய மனதுடையவர்களைக் கண்ணீர் வடிக்க வைக்கும்.
அழுவதற்கு மட்டுமல்ல, வாய் விட்டுச் சிரிப்பதற்கும் இதில் காட்சிகள் உண்டு. டீக்கடைக்காரர் முன்பாக காளி வெங்கட் மது அருந்தும் காட்சி அதற்கொரு உதாரணம்.
ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகளாலேயே இந்தச் சமூகம் ஜீவிக்கிறது; இதுவே ‘கிடா’ சொல்லும் நீதி. கூடவே சாதி, இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒருவரது வாழ்க்கையோடு இன்னொருவர் சம்பந்தப்பட்டிருப்பதையும் உரக்கச் சொல்கிறது.
சுயநலமே பிரதானம் என்றாகிப் போன இன்றைய சூழலில், இப்படத்தில் இடம்பெறும் காட்சிகள் ஒருவருக்குக் கட்டுக்கதையாகத் தெரியலாம். அபத்தமானதாகவும் நடக்கவே இயலாததாகவும் தோன்றலாம். அப்படிப்பட்டவர்களும் கூட ‘இப்படி நிகழ்ந்தால் நல்லாயிருக்குமே’ என்று எண்ணும்படியான ஒரு படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குனர் ரா.வெங்கட்.
’எண்ணம் போல வாழ்வு’ என்பது போல, மனம் நெகிழும்படியான காட்சியனுபவத்தை அனுபவிக்க ‘கிடா’ ஒரு சரியான சாய்ஸ். அதேநேரத்தில், உலக சினிமாக்கள் பார்த்தவர்களுக்கு இப்படத்தில் நிறைய கிளிஷேக்கள் இருப்பதாகத் தோன்றவும் வாய்ப்புண்டு. அதனை மனத்தில் இருத்திக்கொண்டு தியேட்டருக்குச் என்றால், ஒரு நல்ல படம் பார்த்த நிறைவுடன் வெளியே வரலாம்! kali venkat kida movie review
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
நேருவின் 135வது பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!