”ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இன்னும் கலைஞர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வு தான் எனக்கு எப்போதும் இருக்கிறது” என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா ’கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
அதில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ் பேசுகையில், “முன்னாள் முதல்வர் கலைஞரின் சினிமா மற்றும் அரசியல் சாதனைகள் பற்றி பேச அறிவோ, வயதோ எனக்கு இல்லை. நான் அவரை முதலில் பார்க்கும்போது ‘வாங்க மன்மத ராசா என்று அழைத்தார்.
அப்போது தான் என்னுடைய படங்கள் எல்லாம் அவர் பார்க்கிறார் என்று எனக்கு புரிந்தது. அதை கேட்டு அப்போது நெகிழ்ந்துவிட்டேன்.
எந்திரன் படத்தை பார்த்தபோது கெட்ட சிட்டி கேரக்டரைப் பார்த்து அருகில் அமர்ந்திருந்த ரஜினி சாரின் தோளை தட்டிக்கொடுத்தார். அவர் கலைஞர் மட்டுமல்ல. நல்ல ரசிகர்” என்று பேசினார்.
மேலும், “அசுரன் படம் பார்த்துட்டு முதல்வர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘பிரதர் நான் ஸ்டாலின் பேசுறேன்’ என்றார். அவர் பிரதர் என்று அழைத்த அந்த யதார்த்தமான அணுகுமுறை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
முதல்வர் என்றாலே வானத்தில் ஒரு எட்ட முடியாத நட்சத்திரமாக இருக்க வேண்டும் என்பது போல் இல்லாமல், மிகவும் எளிமையானவராக, எளிதில் அணுகக்கூடிய ஒருவராக, நம்மில் ஒருவராக இருக்கும் முதல்வராக அவரை பார்க்கும்போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
ஒரு சிலர் மட்டும் தான் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. கலைஞரை நான் அப்படித்தான் பார்க்கிறேன்.
யாராவது அவர் மறைந்துவிட்டார் சொன்னால் தான் அப்படி நமக்கு தோன்றுகிறது. இன்னும் அவர் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற உணர்வு தான் எனக்கு எப்போதும் இருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னால் கலியன் பூங்குன்றனார் யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்று சொன்னார். 2000-ல் நம் கலைஞர் சொல்லியிருக்கிறார் ‘நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, நாம் என்று சொன்னால் உதடுகள் ஒட்டும்’ அப்படி என்று.
நாமாக வாழ்வோம், நலமாக வாழ்வோம். வாழ்க கலைஞர்” என்று தனுஷ் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா