மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. Kalaignar Karunanidhi centenary date
சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் ‘கலைஞர் 100 விழா’ பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பொதுக்குழுவில் பெறப்பட்டது.
திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், ‘கலைஞர் 100’ விழா டிசம்பர் 24-ம் தேதி (ஞாயிறு) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆர் நினைவு தினம் டிசம்பர் 24 என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசுகையில்,
“அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி, என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம். கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர். இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், இளையராஜா கலந்துகொள்ள இசைவு தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35,000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.
இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க உள்ளனர். இதற்காக டிசம்பர் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரையுலக வேலைகள் எதுவும் நடைபெறாது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொள்வார்கள்” என தெரிவித்தார்.
மேலும், “பெப்சியில் 25 ஆயிரம் பேர் உள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட சினிமாவைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ள சரியான இடமாக சேப்பாக்கம் மைதானம் இருக்கும் என்று நினைத்து தான் அதனை முடிவு செய்தோம். நேரு உள்விளையாட்டு அரங்கம் போதாது என்பதால் சேப்பாக்கத்தை முடிவு செய்தோம். விஜய், அஜித்குமார் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க போகிறோம். அவர்கள் கலந்துகொள்வார்கள் என நம்புகிறோம். யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எங்களின் கடமை அவர்களை அழைப்பதும் தான். வருவது அவரவரின் விருப்பம். க்யூ ஆர் கோடு அமைக்கப்பட்ட பாஸ் இலவசமாக வழங்கப்படும். அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்படும்.” என்றார்.
தமிழ்நாடு முதல் அமைச்சராகவும், திமுக கட்சியின் தலைவராகவும் 1969-ஆம் ஆண்டு கலைஞர் பதவியேற்ற பின்பு ஆண்டுதோறும் ஜூன் 3-ஆம் தேதி அவரது பிறந்தநாள் திமுகவினரால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ராமச்சந்திரன், அதிமுக என்கிற தனிக்கட்சி தொடங்கி 1977 ஆம் ஆண்டு அக்கட்சி எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழ்நாடு முதல் அமைச்சராக பதவி ஏற்றார். கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஊடகங்களும், பொதுவெளியிலும் முக்கியத்துவம் அளிக்க கூடாது என்ற வகையில் ஜூன் 3 அன்று பள்ளி இறுதி ஆண்டு தேர்வு முடிவுகளை வெளியிடும் நடைமுறையை அமுலுக்கு கொண்டுவந்தார் எம்.ஜி.ஆர்.
அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர், கலைஞரை பலவீனப்படுத்த மேற்கண்ட முடிவு எடுத்தார் என்பது வரலாறு. சகல கட்சியினரும் தொழில்முறையில் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அது போன்ற நடவடிக்கையில் ஈடுபடலாமா என்கிற கேள்வி தயாரிப்பாளர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது.
எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்தக் கட்சியை சார்ந்து செயல்படுவதும், அப்போதைய முதல் அமைச்சருக்கு சம்பந்தம் இல்லாமல் பாராட்டு விழா நடத்தி தங்கள் விசுவாசத்தை காட்டிக்கொள்வதை அடிப்படை கொள்கையாக கொண்டிருந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.
இந்திய சினிமா நூற்றாண்டுவிழாவை தமிழ்நாடு அரசு மற்றும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை இணைந்து 2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடத்திய போது கலைஞரின் திரையுலக பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்பட்டதுடன், அவருக்கான அங்கீகாரம், கௌரவம் புறக்கணிக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார்.
இதனை எதிர்க்கவோ, கண்டிக்கவோ துணிச்சல் இன்றி மெளனம் காத்தனர் திமுக சார்பு தயாரிப்பாளர்கள். அதேபோன்றதொரு நிலைமையில் அதிமுக ஆதரவு தயாரிப்பாளர்கள் உள்ளனரா என்கிற கேள்வி கலைஞர் நூற்றாண்டு விழா தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் தேதி டிசம்பர் 24 என்று அறிவிக்கப்பட்ட பின்னர் எழுப்பப்பட்டு வருகிறது.
காரணம் டிசம்பர் 24 எம்.ஜி.ஆர் நினைவு நாள். அன்றையதினம் அதிமுகவினரால் மட்டுமின்றி கலைஞரை போன்று எம்.ஜி.ஆர் நினைவு நாளை கட்சி வித்தியாசம் இன்றி வெகுஜன மக்கள் நினைவுகூறும் நிகழ்ச்சிகளை அவரது மறைவுக்கு பின்னர் நடத்தி வருகின்றனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி, கெளரவ செயலாளர் ராதாகிருஷ்ணன் இருவரும் திமுக உறுப்பினர்கள். இவர்கள் விருப்பங்களே சங்கத்தில் முடிவுகளாக அறிவிக்கப்படுகின்றன என்கின்றனர் அதிமுக ஆதரவு தயாரிப்பாளர்கள்.
தீவிர அதிமுக ஆதரவாளரான பெப்சி தலைவர் R.K.செல்வமணி, அதிமுக தலைமை கழக பேச்சாளர் இயக்குநர் R.V.உதயகுமார் போன்றவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒப்புக் கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுப்பட்டு வருகின்றது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், அவரை தொடர்ந்து எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வர் பொறுப்புக்கு வந்த பின்னரும் தீவிரமான அதிமுக தொண்டர் போன்றே பெப்சி தலைவர் R.K.செல்வமணியின் நடவடிக்கை இருந்தது. அதனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின்பு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க பல வழிகளில் முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை.
தெலங்கானா மாநில அமைச்சராக இருக்கும் தனது மனைவி ரோஜா மூலம் முயற்சித்தும் R.K.செல்வமணிக்கு அனுமதி கிடைக்காததால் கலைஞர் 100 விழாவில் தீவிரமாக ஈடுபட்டு அதன்மூலம் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
அதிமுக ஆதரவு தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, பொதுவான தயாரிப்பாளர்களும் கலைஞர் 100 விழாவினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
-அம்பலவாணன் Kalaignar Karunanidhi centenary date
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னைக்குள் என்றாலும்… முதல்வருக்கு டாக்டர்கள் அறிவுறுத்தல்!
Bigg Boss 7 Day – 53 ; தினேஷுக்கு எதிராக திரும்பும் ஹவுஸ்மேட்ஸ்!