தயாரிப்பாளர் சங்கத்தை தற்காலிகமாக காப்பாற்றிய கலைஞர் 100 விழா!

Published On:

| By Aara

Kalaignar 100 event saved producers council

இன்று (ஜனவரி 6) மாலை சென்னை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் திரையுலகம் நடத்த இருக்கிற கலைஞர் 100 கலை விழா, சினிமா வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. Kalaignar 100 event saved producers council

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்ற பெற்ற பெரும்பான்மையான நிர்வாகிகள் திமுக ஆதரவாளர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நடைபெற்ற முதல் பொதுக்குழுக்கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கலைஞரின் பங்களிப்பை போற்றும் விதமாக கலைஞர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி ‘கலைஞர் 100 விழா’ நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேதி அறிவிக்கப்பட்டதுமே எம்.ஜி.ஆர். நினைவு நாளில் கலைஞருக்கு விழாவா என்ற கேள்வி சினிமா, அரசியல் என இரு தரப்பிலும் எழுந்தது.

ஆனால் மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட ‘கலைஞர் 100 விழா’ இன்று ஜனவரி 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், அதே போன்று பிற நடிகர்களையும் சந்தித்து அழைப்பிதழ்களை கொடுத்து வருகின்றனர் விழாக்குழுவினர். இதுபோன்று அழைப்பது இதுவரை இல்லாத நடைமுறை. இதுபற்றியெல்லாம் தயாரிப்பாளர்கள் சங்க வட்டாரத்தில் பேசியபோது…

“முந்தைய விழாக்கள் எல்லாம் சம்பந்தபட்டவர்கள் அரசு அதிகாரத்தில் இருந்த போது நடத்தப்பட்டது. விழாக்கள் நடைபெற்றபோது தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்களாக கே.ஆர்.ஜி, இப்ராஹிம் ராவுத்தர், இராமநாராயணன் போன்ற ஆளுமை மிக்கவர்கள் தலைமை பொறுப்பில் இருந்தனர். ஆனால் அந்த விழாக்களுக்கும் இந்த விழாவுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தற்போதைய நிர்வாகிகள் சிலர் கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர். தலைவராக வெற்றி பெற்ற முரளி ராமசாமி சக நிர்வாகிகளை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளார்.

இதனால் கெளரவ செயலாளர்களாக இருக்கும் ராதாகிருஷ்ணன், பைவ்ஸ்டார் கதிரேசன் இருவருக்கும் இடையில் அதிகாரப் போட்டி கலாட்டாவால் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கலகலத்து போயுள்ளது.

ராதாகிருஷ்ணன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து புதிய தேர்தலை நடத்தும் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டனர். இதனால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் கலைஞர் 100 விழாவை சுட்டிக்காட்டி அதனை நடத்தி முடித்து விட்டு என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று திமுக காரரான ராதாகிருஷ்ணனுக்கு அவரது நலம் விரும்பிகள் கூறியுள்ளனர். எனவே கலைஞர் 100 விழா முடிந்த பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் கலாட்டாக்கள் அரங்கேறலாம்.

இது ஒருபக்கம் என்றால் கலைஞர் 100 விழாவுக்காக பெரிய அளவு வசூலும் நடந்துள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை பயன்படுத்தி தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பெருமளவில் இலாபம் பார்த்துள்ளார்கள்” என்கிறார்கள்.

-அம்பலவாணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விஜயகாந்த் படத்திற்கு மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்

ஏர்.ஆர்.ரகுமானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Kalaignar 100 event saved producers council

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel