உதயசங்கரன் பாடகலிங்கம்
காஜல் அகர்வாலை ‘ஸ்டைலிஷாக’ காட்டும் படம்!
தெலுங்கு படங்கள் என்றால் இப்படித்தான் இருக்குமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எல்லா காலகட்டத்திலும் உண்டு.
சிற்சில மாற்றங்களோடு அவ்வப்போது சில படங்கள் வெளியாகிப் பெருவெற்றியைப் பெற்றாலும், அவற்றின் அடிப்படை அம்சங்களில் பெரிதாக மாற்றம் இருக்காது. மிகச்சில படங்கள் மட்டுமே அந்த பாதையில் இருந்து வேறுபட்டு நிற்கும். அவையும் கூட, சில நேரங்களில் வேற்றுமொழிப் படங்களின் தாக்கத்தைத் தன்னகத்தே கொண்டிருக்கும்.
காஜல் அகர்வால் நடிப்பில், சுமன் சிக்கலா இயக்கியுள்ள ‘சத்யபாமா’ பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது. இதில் அவர் ஒரு போலீஸ் அதிகாரியாகத் தோன்றியுள்ளார்.
நாயகியை ‘ஸ்லோமோஷனில்’ நடக்க வைத்து, ஆக்ஷனில் அதிரடி காட்டச் செய்து, மேற்கத்திய பாணியில் குற்ற விசாரணையில் ஈடுபடுவதாகக் காட்டி, வழக்கமான தெலுங்கு படம் அல்ல இது என்று உணரச் செய்திருக்கிறது இப்படக்குகுழு.
எல்லாம் சரி, படம் பார்க்கச் சுவாரஸ்யமாக இருக்கிறதா?
தொடரும் விசாரணை!
திருமணத்தன்று மிகத்தாமதமாக மணமேடைக்குச் செல்லும் அளவுக்கு, தான் பார்க்கும் காவல் துறை பணியை நேசிப்பவர் சத்யபாமா (காஜல் அகர்வால்). அவரது கணவர் அமரேந்திரா (நவீன் சந்திரா) ஒரு நாவலாசிரியர். தனது மனைவியின் பணி இப்படித்தான் இருக்கும் என்று அறிந்து, அவரது பரபரப்பு இடையூறு இன்றித் தனது அமைதியான வாழ்க்கைமுறையைத் தொடர்பவர்.
குழந்தைப்பேற்றை இருவரும் ரொம்பவே எதிர்பார்த்தாலும், சத்யபாமா கருவுறாமல் இருக்கிறார். அதேநேரத்தில் பணியிலும் பின்னடைவை எதிர்கொள்கிறார். காரணம், ஒரு குற்ற வழக்கு.
பெண்கள் நலனுக்கென்று தனி ‘செயலி’, அதில் பதிவாகும் குற்றங்களுக்குத் தீர்வு காண தனி ‘குழு’ என்று இயங்கும் ஒரு பிரிவுக்குத் தலைமை வகித்தவர் சத்யபாமா. ஒருநாள், அவரைத் தேடி ஹசீனா என்ற பெண் வருகிறார்.
அப்போது, தனது திருமண நிகழ்வுக்காகக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் சத்யபாமா. கணவர் யது அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும், வீட்டிற்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்து அருவெருப்பூட்டுவதாகவும் அவரிடம் கூறுகிறார் ஹசீனா.
அந்த நேரத்தில் யது ஹசீனாவுக்கு ‘கால்’ செய்ய, மனைவியிடம் மரியாதையாக நடந்துகொள்ளுமாறு அவரை எச்சரிக்கிறார் சத்யபாமா. ஹசீனாவின் சகோதரர் இக்பால் (பிரஜ்வால் யத்வா), அவரது தோழி திவ்யாவிடம் (சம்பதா), ‘பிரச்சனைகள் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று உறுதியளிக்கிறார். பின்னர், தனது திருமணத்திற்குக் கிளம்பிச் செல்கிறார்.
அன்றிரவு சத்யபாமாவுக்கு ஹசீனா ‘கால்’ செய்கிறார். வீட்டிற்கு வந்து யது ரகளை செய்வதாகவும், கொலை வெறியோடு கத்திக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். ‘பயப்படாதே, உடனே நான் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு அங்கு செல்கிறார் சத்யபாமா. செல்லும் வழியில், ஹசீனாவின் ‘கால்’ கட் ஆகிறது.
அந்த இடத்திற்குச் செல்லும் சத்யபாமா, வீட்டுக்குள் ஹசீனாவைக் காணாமல் தேடியலைகிறார். கொல்லைப்புறத்தில் அப்பெண்ணின் கழுத்தில் யது கத்தியை வைத்துக்கொண்டு நிற்பதைக் காண்கிறார்.
‘அவளை ஒன்றும் செய்யாதே’ என்று சத்யபாமா சொல்லிக் கொண்டிருக்கும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கையிலிருக்கும் கத்தி ஹசீனாவைக் குத்திக் கிழிக்கிறது. உடனே, அவரை நோக்கிச் சுடுகிறார் சத்யபாமா.
குண்டடி பட்டபிறகும் தப்பித்து ஓடுகிறார் யது. அவரைத் துரத்திச் செல்கிறார். ஆனாலும், அவரைச் சத்யபாமாவினால் பிடிக்க முடியவில்லை. அதேநேரத்தில், ஹசீனாவின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவம் ஹசீனாவின் சகோதரர் இக்பாலை (பிரஜ்வால் யத்மா) ரொம்பவே காயப்படுத்துகிறது. ’சகோதரியைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன வாக்குறுதியைக் கடைப்பிடிக்க முடியவில்லையே’ என சத்யபாமாவிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்துகிறார்.
யதுவைத் துரத்திச் செல்கையில் பொது இடத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்படுகிறார் சத்யபாமா. சிறிது காலம் கழித்து மீண்டும் வேலையில் சேர்ந்தாலும், ஹசீனா வழக்கில் தீர்வு காணாதது அவரைச் செயல்படவிடாமல் தடுக்கிறது.
இந்தச் சூழலில், ஒருநாள் இக்பாலைக் காணவில்லை என்று சத்யபாமாவிடம் கூறுகிறார் அவரது தந்தை. அவரைத் தேடிச் செல்லும்போது, யது குறித்த சில தடயங்கள் கிடைக்கின்றன.
அதையடுத்து, இக்பால் காணாமல்போனதில் யதுவுக்குத் தொடர்பிருக்கிறதா என்று விசாரணையைத் தொடர்கிறார் சத்யபாமா. அப்போது, அவருக்குப் பல உண்மைகள் தெரிய வருகின்றன. அவை எத்தகையவை என்பதோடு ‘சத்யபாமா’ நிறைவு பெறுகிறது.
முழுக்க நாயகியை மையப்படுத்தி ஒரு ‘குற்ற விசாரணை’ தொடர்ந்து நிகழ்வது போன்று இதன் திரைக்கதை அமைந்துள்ளது.
அதேநேரத்தில் வெறுமனே ஹசீனா கொலை வழக்கு மட்டுமல்லாமல் பெண் கடத்தல் கும்பல், ஏஐ கேமிங் நுட்பம் கொண்டு நிகழ்த்தப்படும் மோசடிகள், காவல் துறைக்குள் நிகழும் அதிகார மோதல், பணியினால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பினால் குடும்ப வாழ்வில் பிரச்சனை என்று பல விஷயங்கள் ‘சத்யபாமா’வில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை எளிதாகத் திரையில் சொல்லப்படாத காரணத்தால் இப்படம் நம்மைக் கொஞ்சம் சோதிக்கிறது.
’ஸ்டைலிஷ்’ காஜல்!
இந்திப் படங்களில் துணை நடிகையாக நுழைந்து, தமிழில் நாயகியாக அறிமுகமாகி, தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறி, திருமணமான பின்னரும் தொடர்ந்து நடிப்பைத் தொடர்ந்து, இன்றும் ரசிகர்களை ஆச்சயர்ப்பட வைத்துக் கொண்டிருப்பவர் காஜல் அகர்வால். ‘ஜில்லா’வில் இவர் போலீஸாக நடித்துள்ளார்.
என்றபோதும், ரொம்பவே தோரணையுடன் அவரை ‘ஸ்டைலிஷ்’ ஆகக் காட்டியிருக்கிறது ‘சத்யபாமா’. முழுக்க முழுக்க அவரையே இப்படம் முன்னிலைப்படுத்துகிறது. காஜலை அப்படிக் காண்பது கொஞ்சம் கூடப் போரடிக்கவில்லை என்பதே இப்படத்தின் சிறப்பு.
காஜல் கணவராக இதில் நவீன் சந்திரா நடித்துள்ளார். மேலதிகாரி ஜோசப் ஆக பிரகாஷ்ராஜ் வந்து போயிருக்கிறார். இன்னும் ‘மரியாத ராமண்ணா’ வில்லன் நாகிநீடு, ’அலாவைகுண்டபுரம்லோ’ ஹர்ஷவர்தன், ரவிவர்மா என்று தெலுங்குத் திரையுலகின் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்கள் இதிலுண்டு. ஆனால், இவர்கள் எவருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை.
இந்தப் படத்தில் ஹசீனா, யதுவாக நடித்தவர்கள் மிகச்சிறப்பாகத் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர். அவர்களை மையப்படுத்தியதே இந்தக் கதை. ஆனாலும், அவர்களது பெயர்கள் பட விளம்பரங்களில் குறிப்பிடப்படவில்லை.
இவர்கள் தவிர்த்து அங்கித் கொய்யா, பிரஜ்வால் யத்மா, சம்பதா உட்படப் பலர் இதிலுண்டு. திரையில் முகம் தெரியும் அளவுக்கு அவர்களது பாத்திரங்கள் தென்படுகின்றன.
நாயகியை ‘ஸ்டைல்’ ஆக காட்டுவதில் தொடங்கி, பரபரவென்று துரத்திச் செல்லும் காட்சிகளில் துல்லியத்தை வெளிப்படுத்துவது வரை நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருகிறது விஷ்ணு பேசியின் ஒளிப்பதிவு.
ரோஹன் சிங்கின் தயாரிப்பு வடிவமைப்பு, வழக்கமான தெலுங்கு படங்களின் ‘வண்ணச் சிதறல்’களில் இருந்து இப்படத்தின் உள்ளடக்கத்தை வேறுபடுத்துகிறது.
ஸ்ரீசரண் பக்கலாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தைத் தொய்வின்றி பார்க்கச் செய்வதில் ரொம்பவே உதவியிருக்கின்றன.
படத்தொகுப்பாளர் பீகே, ரொம்பவே செறிவாக உள்ளடக்கம் தெரியும் வகையில் காட்சிகளை நறுக்கியிருக்கிறார். ஆனாலும் சில இடங்களில் கதைப்போக்கு புரியாமல் தலையைச் சொறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. , திரைக்கதையில் இருக்கும் தெளிவின்மையே அதற்குக் காரணம்.
ஏஐ கேமிங் மூலமாக முன்பின் தெரியாத இரண்டு பேர் உரையாடிக் கொள்வதாக, திரைக்கதையில் ஒரு பகுதி உண்டு. திரைக்கதை அமைத்த சஷிகிரண் டிக்கா மற்றும் இயக்குனர் சுமன் சிக்கலா அதனைத் தெளிவுற வடிவமைக்கவில்லை.
போலவே, இக்பால் பாத்திரத்தைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கும் காட்சி இதிலுண்டு. அதன் பின்னணி என்ன என்று நாம் முழுமையாக அறிந்து கொள்வதற்குள் அக்காட்சி முடிந்து போகிறது.
இப்படிப்பட்ட குறைகளே ‘சத்யபாமா’வின் மைனஸ். ஆனால், அவற்றை மறைக்கும் வகையில் முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்துகிறது திரைக்கதை.
ஆங்கிலம் மற்றும் வேறு அயல்மொழிப் படங்களில் பார்த்த குற்ற விசாரணை திரைப்படங்கள், நாயகியை முன்னிறுத்தும் திரைக்கதைகளில் இருந்து பொதுவான சில விஷயங்களை ‘சத்யபாமா’வில் எடுத்தாண்டிருக்கிறார் இயக்குனர் சுமன் சிக்கலா. அதுவே இப்படத்தில் ‘க்ளிஷேக்கள்’ அதிகம் என்பதைச் சொல்லிவிடுகிறது.
அதையும் மீறிப் படத்தில் காட்சியாக்கம் நம்மை ஈர்க்கிறது. மிகமுக்கியமாக, காஜல் அகர்வாலை நாம் இதுவரை பார்த்திராத கோணத்தில் காட்டுகிறது ‘சத்யபாமா’.
குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம்!
அங்கு, இங்கு என்று பல்வேறு திசைகளில் நகரும் திரைக்கதை, இறுதியாக ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. அந்த இடத்தில் கதைக்குழு முன்வைக்கும் விஷயங்கள் மிகச்சரியாகவே இருக்கின்றன. ஆனால், படம் முழுக்க அதனை முன்னுணர்த்தும் வகையில் காட்சிகள் இருக்கின்றனவா, இன்னொரு முறை படம் பார்த்தால் அவற்றை தெளிவாக உணர முடியுமா என்று கேட்டால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும்.
தொழில்நுட்பரீதியில் திரைக்கதியில் சொல்லப்படும் விளக்கங்கள் சாதாரண ரசிகர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்பதே உண்மை
அவற்றைக் கடந்துவிட்டால் ‘ஹிட் 1’ மற்றும் ‘ஹிட் 2’ உள்ளிட்ட குற்றவிசாரணையை மையப்படுத்திய திரைப்படங்கள் போன்று, ‘சத்யபாமா’வும் ஒரு வித்தியாசமான தெலுங்கு படம் பார்த்த திருப்தியைத் தரும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடியின் தேநீர் விருந்தில் முருகன்… மத்திய அமைச்சர்கள் யார், யார்?