நடிகர் அஜித்குமார் சிறியளவில் முகம் காட்டிய திரைப்படம் ‘என் வீடு என் கணவர்’. ஆனால், அவரது ‘பிலிமோகிராஃபி’யில் அப்படத்திற்கு இடம் உண்டா எனத் தெரியவில்லை. தமிழில் அவர் நாயகனாக நடித்த திரைப்படம் ‘அமராவதி’. அதற்கு முன்பாக, அவர் நாயகனாக அறிமுகமாகவிருந்த படம், தெலுங்கில் தயாரான ‘பிரேம புஸ்தகம்’. இவையிரண்டுமே 1993-ஆம் ஆண்டில் வெளியாகின. அதற்குப் பிறகான பத்தாண்டுகளில் அஜித் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார். Kadhal Mannan Star Status for Ajith
இந்த பத்தாண்டுகளில் அவரது வெற்றிப் படங்களைவிடத் தோல்விகளின் எண்ணிக்கை கணிசம். ஆனால், அவ்வாறு தோல்வியுற்ற படங்களில் சில அவருக்கென்று தனித்துவமான ரசிகர்களை உருவாக்கியிருக்கின்றன. பவித்ரா தொடங்கி உன்னைக் கொடு என்னை தருவேன், ரெட், ராஜா, ஆஞ்சநேயா என்று நீளும் அப்படங்களின் பட்டியல்.
அஜித்தின் வெற்றிக்கணக்கின் தொடக்கம், 1995இல் வெளிவந்த ‘ஆசை’ படத்தில் இருந்து தொடங்குகிறது. அதற்கடுத்த ஆண்டு வெளியான ‘வான்மதி’ பி, சி செண்டர்களில் ஹிட் ஆனது.

அதனைத் தொடர்ந்து காதல் கோட்டை நீங்கலாக கல்லூரி வாசல், மைனர் மாப்பிள்ளை, நேசம், ராசி, உல்லாசம், பகைவன், ரெட்டை ஜடை வயசு என்று அஜித் நாயகனாக நடித்த படங்கள் தோல்விகளாக அமைந்தன. Kadhal Mannan Star Status for Ajith
ஆசை, காதல் கோட்டை இரண்டுமே வசந்த், அகத்தியன் என்ற இரு இயக்குனர்களின் திரைப்படங்களாகவே நோக்கப்பட்டன. அந்த வகையில், தனிப்பட்ட முறையில் அஜித் நாயகனாக நடித்து வெற்றியை முதன்முறையாகத் தந்த படம், அவரது ஸ்டார் அந்தஸ்தை வெளிக்காட்டிய படம் என்று ‘காதல் மன்ன’னை மட்டுமே சொல்ல முடியும். அப்படியொரு ‘ஹீரோயிசத்தை’ திரையில் வெற்றிகரமாக உருவாக்கியவராக இயக்குனர் சரணை மட்டுமே குறிப்பிட முடியும்.
வித்தியாசமான ‘காம்பினேஷன்’! Kadhal Mannan Star Status for Ajith
‘ஜெயிக்குறதுதான் முக்கியம்’ என்ற எண்ணத்தோடு ஒரு ரூபாய் பந்தயச் சவாலுக்காக உயிரையே பணயம் வைக்கத் துணிகிற ஒரு சாதாரண இளைஞன். சகோதரி காதல் திருமணம் செய்த காரணத்தால், தந்தையின் கட்டுப்பாட்டுக் கோடுகளுக்குள் தன்னைக் குறுக்கிக் கொண்டு வாழ்கிற ஒரு இளம்பெண். கனவிலும் ஒன்றுசேராத வகையில் இரு துருவங்களாக இருக்கும் சந்தர்ப்பவசத்தால் ஒருவரையொருவர் சந்திப்பதும் நட்பாவதும் காதலாகிக் கசிவதுமே ‘காதல் மன்னன்’ படத்தின் கதை.
தொண்ணூறுகளில் வந்த பெரும்பாலான காதல் படங்கள் இப்படித்தான் இருந்தன. அப்படியிருக்க, இப்படம் எந்த வகையில் வித்தியாசப்பட்டது?
நாயகியின் அறிமுகமாகும் காட்சியே, அப்பாத்திரத்தின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியையொட்டி அமைக்கப்பட்டிருக்கும். அப்படி நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட நாயகியை நாயகன் காதலிக்கிறார் என்பதே ‘காதல் மன்னன்’ படத்தின் ஒருவரிக் கதை.
சுருக்கமாகச் சொன்னால், 1996ஆம் ஆண்டு வெளியாகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற இந்திப் படத்தின் கதையை மேலோட்டமாகத் தழுவியிருந்தது இப்படம். ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் ஷாரூக்கான், கஜோல் நடித்த அப்படத்தில் ஜதின் – லலித் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்.

’காதல் மன்னன்’னில் அதே போன்றதொரு மாயாஜாலத்தை இசையமைப்பாளர் பரத்வாஜ் நிகழ்த்தியிருந்தார். Kadhal Mannan Star Status for Ajith
சுமார் அரை டஜன் தெலுங்கு படங்களில் பணியாற்றிய அவரைத் தொடர்ந்து தமிழில் இசையமைக்க வழியமைத்த படம் இதுவே. ’வானும் மண்ணும்’, ‘உன்னைப் பார்த்தபின்பு நான்’, ‘திலோத்தமா’, ‘மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா’ என்று ஹிட் பாடல்களைத் தந்திருந்தார் பரத்வாஜ். அவற்றுள் ‘கன்னிப் பெண்கள் நெஞ்சினில் கையெழுத்து போட்டவன்’ எனும் பாடல் அஜித்துக்கு ரசிகர்கள், ரசிகைகள் பலரைப் பெற்றுத் தந்தது.
கிளைமேக்ஸ் காட்சிக்கு முன்னதாக வந்த ‘மெட்டு தேடி அலையுது’ பாடலை உருவாக்கியிருந்தார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். இந்தப் படத்தில் அவர் நடிகராகவும் அறிமுகமாகியிருந்தார். Kadhal Mannan Star Status for Ajith
’மெஸ் விஸ்வநாதன்’ என்பது அவரது பாத்திரப் பெயர். படம் முழுக்க உரத்த குரலில் அவர் வசனம் பேசியிருப்பார். கவிஞர் கண்ணதாசனின் ரசிகராகத் தோன்றியிருப்பார். அந்தவகையில், தமிழ் திரையுலகுக்கு அவர் அளித்த இசைப் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இப்படத்தில் அப்பாத்திரத்தை வார்த்திருந்தார் இயக்குனர் சரண்.
ஒய்யா என்ற பாத்திரத்தில் விவேக் தோன்றியிருந்தார். நித்யா மதானி உடனான காதலை வெளிப்படுத்துகிற காட்சிகளில் அவர் முகத்தில் ‘ரொமான்ஸ்’ வெளிப்படுவது ‘அட்டகாசமாக’ இருக்கும். Kadhal Mannan Star Status for Ajith
இதில் ‘யார் அந்த திலோத்தமா’ என்று டென்ஷன் ஆகும் கல்லூரி பிரின்சிபல் ஆக நாடக நடிகை எஸ்.ஆர்.சிவகாமி நடித்திருந்தார். ‘மீட் மை வுட்பி டாட்டர் இன் லா. என்னை விட கொஞ்சம் கலர் கம்மி’ என்று சொல்லிவிட்டு ‘ஹாஹாஹா’ என்று சிரிக்கும் மேல்தட்டு வர்க்கப்பெண்மணியாக, கரண் தாயாராக நடித்திருப்பார் ஒரு பெண்மணி. இவர்களது பாத்திர வார்ப்பும் நடிப்பும் இப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.
இவர்களோடு வழக்கமான வில்லத்தனத்தோடு கரண், கிரிஷ் கர்னாட், தாரிணி, ரமேஷ் கன்னா, லட்சுமி ரத்தன், தாமு என்று பலர் இதில் நடித்திருந்தனர்.
திலோத்தமா எனும் பாத்திரத்தில் நாயகியாக மானு தோன்றியிருந்தார். படத்தின் டைட்டிலில், அவரது பெயர் ‘அழகிய அறிமுகம்’ என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில், படம் முழுக்க அவரது பாத்திரம் கண்ணியமாகக் காட்டப்பட்டிருந்தது. Kadhal Mannan Star Status for Ajith
பரதநாட்டியம் மீது கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக, ‘காதல் மன்னன் படத்திற்குப் பிறகு நடிக்கக் கூடாது’ என்பதில் மானு தீர்மானமாக இருந்தார். அதன்படியே, அவர் திரையுலகில் இருந்து காணாமல் போனார். Kadhal Mannan Star Status for Ajith
பிறகு, நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலகட்டத்தில் அவரது பெயர் மீண்டும் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியது. முதல் படத்திற்குப் பிறகு தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சிகளில் ஆர்வம் காட்டியவர், இப்போது சென்னையில் நடனப்பள்ளியொன்றையும், ஒரு அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.

விஜயகுமார் மற்றும் ஏ.வெங்கடேஷின் ஒளிப்பதிவு, மோகன மகேந்திரன் கலை இயக்கம், கணேஷ்குமாரின் படத்தொகுப்பு என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களையும் படத்தில் இடம்பெற்ற நடிப்புக்கலைஞர்களையும் ஒன்றிணைத்த வகையில் ‘வித்தியாசமான காம்பினேஷனை’ தந்திருந்தார் இயக்குனர் சரண்.
கமர்ஷியல் பட இயக்குனர்களில் இவரது பாணி வேறுமாதிரியானது என்று சொல்லத்தக்க வகையில், நல்லதொரு அறிமுகமாக ‘காதல் மன்னன்’ பட உள்ளடக்கம் அமைந்தது.
இறுதி வரை ’ஹீரோயிசம்’! Kadhal Mannan Star Status for Ajith
’காதல் மன்னன்’ படத்தின் தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை அஜித்தின் ‘ஹீரோயிசம்’ டச் இருக்குமாறு பார்த்துக்கொண்டார் இயக்குனர் சரண். அதனிடையே காமெடி, ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் காட்சிகளை நிறைத்திருந்தார்.
’டெல்லியிலுள்ள கமிஷனர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பன்னிரண்டு மணி நேரம் வரை வாய் திறக்காமல் இருக்க வேண்டும்’ என்கிற பந்தயத்தில் நாயகன் வெற்றி பெறுவதாக, திரைக்கதையின் தொடக்கம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக ‘காதல் மன்னன்’ பாடல் இடம்பெற்றிருந்தது. Kadhal Mannan Star Status for Ajith
நாயகி மானுவின் பின்னால் அஜித், விவேக் இருவரும் திரியும் காட்சிகள் நகைச்சுவையைத் தருவதாக இருந்தன. அது மட்டுமல்லாமல், மானுவை அஜித் முதன்முறையாகப் பார்க்குமிடத்தில் ‘உனை பார்த்த பின்பு நான்’ பாடல் பின்னணியில் ஒலித்தது நாயகனின் உணர்வைப் பிரதிபலிப்பதாக இருந்தது.
அதனைப் பார்க்கையில், ‘இப்படி அஜித்தை ரொமான்ஸாக பார்த்து எவ்ளோ நாளாச்சு’ என்று அவரது ரசிகர்களே ‘பீல்’ பண்ணும் வகையில் இப்படத்திலுள்ள பெரும்பாலான ஷாட்கள், காட்சிகள் இருக்கும்.
திரைக்கதையின் நடுப்பகுதியில் மகளிர் கல்லூரிக்குள் நடத்தப்படும் ஸ்டிரைக் நாடகம், அதனூடே நாயகியை அழைத்துக்கொண்டு டெல்லிக்குப் பயணப்படும் நாயகன், பிறகு அவசர அவசரமாக இருவரும் சென்னை திரும்புவது, அதனிடையே பூக்கும் இருவருக்குமான காதல் என்று அக்காட்சிக்கோர்வை முழுமையாக ‘த்ரில்’ கூட்டும். கூடவே, நாயகனின் சாகசக் குணத்தை அடிக்கோடிடும் வகையில் அமைந்திருக்கும்.
இந்தக் கதையில், நாயகன் தனது சவாலுக்காக ஒரு ரூபாயை மட்டுமே எதிர் தரப்பிடம் பெற்றுக்கொள்வார். அந்த ஒரு ரூபாயை நாயகி தராமல் போக, அதனைப் பெற அவர் பின்னால் செல்வதாகக் காட்சிகள் வரும்.
யோசித்துப் பார்த்தால் ‘ஹம்பக்’ என்று சொல்லத்தக்க இது போன்ற காட்சியமைப்பே, நல்லதொரு கமர்ஷியல் படத்திற்கான உள்ளடக்கத்தை வார்த்தெடுக்கும் என உணரலாம். அதே நேரத்தில், அதன் அடிப்படையாக அமைந்திருக்கும் எளிமையை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்க வேண்டியிருக்கும்.
வெற்றி பெற்ற எந்தவொரு கமர்ஷியல் படத்தோடும் இதனைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்த வகையில், ‘காதல் மன்னன்’ படம் முழுக்க அஜித்தின் ‘ஹீரோயிசம்’ வேட்கைக்குத் தீனி போடும் வகையில் பல காட்சிகள் இருந்தன..
போலவே, ‘மெட்டு தேடி’ பாடல் நிறைவுற்றதும் ஜீன்ஸ், பனியன் அணிந்தவாறு பைக்கில் செல்வார் அஜித். நேராக நாயகியின் வீட்டு காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிப்பார். கல்யாணம் நடைபெறுகிற சூழலில், நாயகியைத் தேடிக் கிடைக்காமல் ‘திலோத்தமாவை நான் காதலிக்கிறேன்’ என்று கத்துவார். அங்கிருப்பவர்கள் திடுக்கிட்டுத் திரும்புவார்கள்.

அந்தக் காட்சியும் சரி; அதன்பிறகு கரண் ஓட்டிவரும் ’டைம்பாம்’ காரில் மானு உடன் ஏறும் காட்சியிலும் சரி; அஜித் திரையில் வெளிப்படுத்தும் ‘ஹீரோயிசம்’ மேல்நோக்கி எகிறியிருக்கும்.
அதுவரை ஒரு இளம் நாயகனாக மட்டுமே அறியப்பட்ட அஜித்துக்கு ‘காதல் மன்னன்’ படத்தைத் தந்து, அவரை வேறொரு தளத்திற்கு ஏற்றிவிட்டதில் சரணுக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த பிம்பத்தை மென்மேலும் உயர்த்தும் வகையில் ‘அமர்க்களம்’, ‘அட்டகாசம்’ படங்களையும் அவர் தந்தார்.
சமீபத்தில் வெளியான பேட்டியொன்றில், ‘ஹீரோக்களை எப்படி பவர்ஃபுல்லா காட்டணும்கறதுல இயக்குனர் சரண் ஒரு மாஸ்டர்’ என்று மானு புகழ்ந்திருந்தார். ‘காதல் மன்னன்’ படத்தைப் பார்க்கும் எவரும் அது உண்மை என்று ஒப்புக்கொள்வார்கள். முக்கியமாக, நாயகன் அஜித் அதில் முதலாவது ஆளாக இருப்பார்.