தன் பாலினம்… காதலோடு அங்கீகாரமும் பொது உடைமையாகட்டும்!

Published On:

| By Minnambalam Desk

அ. குமரேசன்

சில திரைப்படங்கள் எடுத்துக்கொண்ட உள்ளடக்கத்தாலும் அதை வெளிப்படுத்தும் கலையாக்கத்தாலும் பேசப்பட வேண்டிய படைப்புகளாக இருக்கும். வேறு சில படங்கள் அவற்றில் பேசப்பட்ட கருத்துகளைப் பற்றிச் சமுதாயத்தையே பேச வைப்பவையாக இருக்கும். kadhal enbadhu podhu udaimai

பேச வைக்கிற ஒரு படம்தான் ‘காதல் என்பது பொது உடைமை’.  காதல் மதம் பார்த்து, சாதி பார்த்து, இனம் பார்த்து, வயது பார்த்து, நாடு பார்த்து –  ஏன் பாலினம் பார்த்துக்கூட – வருவதல்ல. எதிர்ப் பாலினத்தவர்களிடையே மட்டும்தான், பெண்ணுக்கும் ஆணுக்கும்தான், காதல் பூக்கும் என்றில்லை.

சமுதாயத்தில் அப்படித்தான் நம்பப்படுகிறது, அதுதான் இயற்கை என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. (எதிர்ப் பாலினத்தவர்களின் இயற்கையான காதலை மட்டும் சமுதாயம் ஏற்றுக்கொள்கிறதா என்ன? அப்படி ஏற்றுக்கொள்ளுமானால் எதற்காக ஆணவக் கொலைகள் நடக்கின்றன?)

தன்பாலின ஈர்ப்பாளர்கள்தான் நாயகப் பாத்திரங்கள் என விளம்பரப் படங்களாலும் விமர்சனங்களாலும் ஏற்கெனவே தெரிந்துவிட்டது. ஆகவே, தன் மகள் சாம் யாரையோ காதலிக்கிறாள் என்றறிந்ததும் அவனை வீட்டுக்கு அழைத்து வரச் சொல்லும் தாய்க்கு, அவளுடைய காதல் இணை  “அவன்” அல்ல,   ”அவள்” என்று தெரிய வருகிற இடம் நமக்கு எதிர்பாராத திருப்பமாக இல்லை. ஆனாலும், தாய் லட்சுமி, மகள் சாம், அவளது இணை நந்தினி, அவளை அழைத்து வந்த நண்பன் ரவீந்திரன் இவர்களுக்கிடையே அதிர்ச்சியும் ஆத்திரமும் அழுகையுமாக அந்த நிமிடத்தில் எழுகிற  உணர்ச்சிப் பேரலை நம்மையும் மூழ்கடிக்கிறது.

லட்சுமியிடமிருந்து மணவிலக்குப் பெற்ற தேவராஜ், பிரிவுக்கான காரணம், முன்பு சாமை காதலித்தவன்தான் ரவீந்திரன், அவளுக்கும் நந்தினிக்கும் காதல் துளிர்த்த பொழுது என்ற விரிவாக்கங்கள் கதைக் கட்டுமானத்திற்கு வலுச் சேர்க்கின்றன.

படத்தில் மூன்று அணைப்புக் காட்சிகள். முதலாவது சாம்–நந்தினி காதல் அணைப்பு; இரண்டாவது கலங்கி நிற்கும் சாமுக்கும் நந்தினிக்கும் ரவீந்திரனின் தோழமை அணைப்பு; மூன்றாவது கொந்தளிப்பான உச்சத்தில் லட்சுமி–சாம்–தேவராஜ் பாச அணைப்பு. அந்த அணைப்புகள் பார்வையாளர்களுக்கு ஒரு கதகதப்பைக் கடத்துகின்றன.

பால் புதுமையினர் எனப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய புரிதலின் கதகதப்பு அது. இவர்களின் தேர்வு இயற்கையானதென்று புரிந்துகொள்ள முதல் அணைப்பும், தோழமைகள் ஆதரவாகத் தோள் கொடுக்க  இரண்டாவது அணைப்பும், குடும்பங்கள் தெளிந்து அங்கீகரிக்க மூன்றாவது அணைப்பும் வேண்டுகோள் விடுப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

இரு பெண்களிடமும் வீட்டுப் பணிப்பெண் மேரி கேட்கிற பாமரத்தனமான கேள்வியும், படித்தவர்களுக்கே பாதை காட்டும் பேச்சும் அழகானவை. லட்சுமி தனக்குக் கூடுதலாகக் கொடுக்கும் 500 ரூபாயைத் திருப்பிக்கொடுக்கிற இடம் பணத்துக்காக அல்ல, பண்பாடாகவும் வீட்டில் நடந்ததை வெளியே சொல்ல மாட்டேன் என்கிற பக்குவமிகு சுயமரியாதையைக் காட்டுகிறது. 

கலையாக வரும் கருத்து kadhal enbadhu podhu udaimai

‘லேடீஸ் அன் ஜென்டில்விமன்’ என்ற ஆவணப்படம் ஒன்று 2017இல் வெளியானது. தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான சமூக அங்கீகாரத்தைக் கோரும் அந்த ஆவணப்படத்தை இந்த மக்களின் உரிமைக் களத்தில் நிற்பவரும் இயக்குநருமான மாலினி ஜீவரத்தினம் உருவாக்கியிருந்தார். அதில் பங்கேற்று, இவர்களின் இயற்கைத் தன்மை, மனித உரிமை உள்ளிட்ட பார்வைகளில் கருத்துகளைக் கூறும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது.. இக்கருத்துகள் ஒரு கலைப் படைப்பாகவும் உருவாக்கப்பட்டால் பலரையும் சென்றடையுமே என்று விரும்பினேன். அதை இந்தப் படம் நிறைவேற்றியிருக்கிறது. 

இத்தகையோரைத் துணைப் பாத்திரங்களாகக் கொண்ட சில படங்களும் வலைத் தொடர்களும் வந்திருக்கின்றன. இவர்களையே மையப் பாத்திரங்களாகக் கொண்ட முதல் தமிழ்ப்படம் இதுவாகத்தான் இருக்கும். முன்பு கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிப்பிலும் வந்த “வேட்டையாடு விளையாடு”, தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரு ஆண்களைக் கொலை வன்மக் கொடூரர்களாகச் சித்தரித்தது. வடிவேலு போலீஸ் ஏட்டய்யாவாக நடித்த ஒரு படத்தின் ஒரு காட்சியில், இவர்களில் ஒருவர் நகைச்சுவைக்கு உரியவராக (“அவனா நீயி?”)  நடக்கவிடப்பட்டிருப்பார். அப்படிப்பட்ட படங்களோடு ஒப்பிட்டால் இது எவ்வளவு மேன்மையான படைப்பு என்று புரிந்துகொள்ளலாம்.

ஆங்கிலத்தில் ‘கரோல்’, ‘இமேஜின் மீ அன் யூ’, ‘சேவிங் ஃபேஸ்’, ‘பாட்டம்ஸ்’, ‘கால் மீ பை யுவர் நேம்’, ‘லவ் சைமன்’, ‘புரோக் பேக் மவுன்டெய்ன்’, ‘ஷெல்டர்’ ஆகியன உள்ளிட்ட சில படங்கள் இவர்களை மையப்படுத்தி வந்திருக்கின்றன. மலையாளத்தில் வந்த ‘காதல் தி கோர்’ படம் தன்பாலின ஈர்ப்புள்ள இரு ஆண்களின் கதையைக் கூறியது. தமிழில் முதல்முறையாக வந்துள்ள இந்தப் படம், முதல் முயற்சிகளுக்கே உரிய சவால்களையும்  எதிர்கொள்ளத்தான் வேண்டியிருந்தது.

கருத்தாக்கம், கலையாக்கம் இரண்டிலும் இந்தப் படம் வெற்றி பெற்றிருக்கிறது. முற்போக்கான சிந்தனைகளோடு வெளியான பல படங்கள் செய்நேர்த்தியில் தோல்வியடைந்திருக்கின்றன.   இந்தப் படம் இடைவேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க உரையாடலாகவே அமைந்திருக்கிறது. ஆனால் அது பாத்திரங்களுக்கு இடையேயானதாகப் போய்விடாமல் பார்வையாளர்களுடனான உரையாடலாக மாறிவிடுகிறது. ஒரே பாலினத்தவர்கள் இணைவது இயற்கைக்கு மாறானதில்லையா, அப்படி வாழ்ந்தால் குழந்தை எப்படிப் பிறக்கும், குடும்ப உறவு என்னாகும், உளவியல் ஆலோசனைகளால் சரிப்படுத்திவிட முடியாதா என்றெல்லாம் சுற்றி வருகிற கேள்விகளுக்கு வானவில்லாகப் பதில்கள் கிடைக்கின்றன.

பால் புதுமையினர்  கதையாகக் காட்சியளித்தாலும் உண்மையில் இது அம்மா–மகள் கதைதான். அம்மாவின் இடத்தில் சமூகத்தை வைத்துப் பார்க்கலாம்.

மாறுதலும் ஆறுதலுமான இப்படிப்பட்ட படங்களுக்கென்றே வந்தவராகத் திகழும் ரோகிணி தாயாகவும், சாம், நந்தினி பாத்திரங்களில் லிஜோமேல் ஜோஸ், அனுஷா பிரபு ஆகியோரும், நண்பனாக காலேஷ் ராமானந்த், தகப்பனாக வினீத், மேரியாக தீபா சங்கர் என அனைவரும் சிறப்பான நடிப்பால் அந்தக் கதாபாத்திரங்களின் மேல் காதலை  ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அவர்களோடு பார்வையாளர்களைப் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சரணவன்.  உமாதேவியின் பாடல் வரிகளுக்கு லயம் சேர்த்து, தேவையான இடங்களில் மௌனத்தையும் இசையாக்கியிருக்கிறார் கண்ணன் நாராயணன். சீராகத் தொகுத்தளித்திருக்கிறார் டேனி சார்லஸ். கருத்தும் கலையும் இரண்டறக் கலந்ததாகத் தமிழ் சினிமாவை உலகத் திரைகளுக்குக் கொண்டு செல்வோரின் அணியில் இணைந்திருக்கிறார் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன். இக்குழுவினருக்கு ஆடுகளத்தை அமைத்துக் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்களும் வெளியீட்டாளர்களும் அழுத்தமான கைகுலுக்கலுக்கு உரியவர்கள்.

பேசுவது முக்கியம்

படத்தைப் பற்றிப் பேசுவதோடு நில்லாமல், படம் பேசுகிற செய்தி தொடர்பாகப் பேசுவது முக்கியம். வரவேற்றோ எதிர்த்தோ கூட பொதுவெளியில் பேசப்பட வேண்டும். ஒரு படைப்பாக்கம் அப்போதுதான் முழு வெற்றி பெறும். படத்தை உருவாக்கியவர்கள் அதைத்தான் விரும்புவார்கள்.

இந்தியாவில் இவர்களின் திருமண உரிமையை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது. உலகில் அந்த உரிமையை ஏற்கெனவே அங்கீகரித்த நாடுகள் இருக்கின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், கனடா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, ஸ்வீடன், போர்ச்சுகல், ஐஸ்லாந்து, அர்ஜென்டினா, டென்மார்க், பிரேசில், பிரான்ஸ், உருகுவே, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, கிரீன்லாந்து, கொலம்பியா, பின்லாந்து, ஜெர்மனி, மால்டா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, தைவான், ஈகுவடார், கோஸ்டாரிகா, சிலி, ஸ்விட்சர்லாந்து, கியூபா, ஸ்லோவேனியா, அன்டோர்ரா,. எஸ்டோனியா ஆகிய நாடுகள் சட்டப்பூர்வமாக தன்பாலினத்தவர் மணவாழ்வை அங்கீகரித்திருக்கின்றன.  மெக்சிகோவின் பல்வேறு மாகாணங்களில் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வேறு சில நாடுகளிலும் இந்த அங்கீகாரத்திற்கான இயக்கங்கள் தொடர்கின்றன.

ஆகவே இது மேற்கத்திய நாகரிகம் என்று சட்டென்று தள்ளுபடி செய்ய சிலர் முயல்வார்கள்.  ஆனால், நாட்டின் தொன்மையான இலக்கியங்களில் இந்த மக்களின் கதைகள் இடம்பெற்றுள்ளன. ஆலயச் சிற்பங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், இடையில் ஊடுறுவிய மேல்தட்டுத்தனமான கருத்துகளால் தன்பாலின உறவே ஒழுக்கக்கேடானது என்ற வெறுப்பு வளர்க்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த சமுதாயத்தில் இந்த உறவை நாடுகிறவர்கள் சிறிய    எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள் என்பதாலேயே அவர்களின் உணர்வுப் பூர்வமான உறவு இயற்கைக்கு மாறானதாகிவிடாது.

சட்டப்பூர்வ அங்கீகாரம் அளித்துள்ள நாடுகளில், பல்வேறு சமூகப் பாதுகாப்புகள் உள்ளன. மருத்துவம், காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. பாகுபாடுகளைத் தடுக்கும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க அனுமதி அளிக்கப்படுகிறது. இத்தகைய சட்டப் பாதுகாப்புகள் தங்களுடைய உறவை வெளிப்படையாக அறிவிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளன. சமூக அரவணைப்பை உறுதிப்படுத்தியுள்ளன. எளிமையாகச் சொல்வதென்றால் இணையராக உறவினர் இல்லங்களுக்கும் பொது நிகழ்வுகளுக்கும் சென்று வர முடிகிறது. தாங்கள் தனிமைப்பட்டுவிடவில்லை என்ற தன்னம்பிக்கை மேலோங்குகிறது.அங்கீகாரத்தால் விளையும் தன்னம்பிக்கை ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்தில் இவர்களையும் பங்கேற்கச்  செய்கிறது.

கலை, அரசியல், தொழில் வணிகம் என பல்வேறு துறைகளில் கம்பீரமாக ஈடுபடும் தன்பாலின இணையர்கள் பலர் இருக்கிறார்கள்.  அயர்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் லியோ வரட்கர், அவரது கூட்டாளி மாத்யூ பர்ரட் இருவரும் பெயர் பெற்ற தன்பாலின இணையராவர். போலந்து அரசியலில் அன்னா கிராவ்போஸ்கா, இசபெல்லா கிராவ்போஸ்கா இரு பெண்களும் தங்களின் பணிகளுக்காக மதிக்கப்படுகிறவர்கள். ஜெனீவா ரோசெல். பார்பரா லின்: இருவரும் அறிவியலில் சிறப்பாகப் பங்களித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் டிம் குக் தனது பாலின ஈர்ப்பு அடையாளத்தை வெளிப்படையாக அறிவித்தவர். 

டென்னிஸ் நட்சத்திரம் மார்ட்டினா நவரத்திலோவா தனது பாலியல் தேர்வைத் தயக்கமின்றி வெளிப்படுத்தியவர். உலகறிந்த எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட் தயக்கக் கயிறுகளை அறுத்துக்கொண்டவர்தான். ஹாலிவுட் திரைப்படத் துறையில் நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் இத்தகைய இணையர்களாக இயங்குகிறார்கள். இவர்கள் பொதுச் சமூகத்தில் இவர்களைப் பற்றிய நேர்மறைக் கண்ணோட்டத்தை உருவாக்குவதிலும் சிறப்பாகப் பங்களித்து வருகிறார்கள்.

எதிர்ப்பதில் மத ஒற்றுமை!

உலகின் இத்தகைய காட்சிகளைக் காண மறுத்து இது ஒழுக்கக்கேடு என்றும், இதை அனுமதித்தால் சமூக ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்றும் கூறி, குறிப்பாக மதம் சார்ந்த அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. இந்தியாவில் இவர்களைத் தண்டனைக்குரிய  குற்றவாளிகளாகக் கூறும் பழைய விக்டோரியா காலத்துச் சட்டத்தைத் (சட்ட உரை 377) தள்ளுபடி செய்யக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில் தங்களையும் இவர்களின் எதிர்த் தரப்பினராக இணைத்துக்கொள்ளக் கோரி பல அமைப்புகள் இணைந்துள்ளன. இவ்வாறு  இணைந்திருப்பதில் எல்லா மதங்களையும் சேர்ந்த அமைப்புகள் இருப்பது கவனிக்கத்தக்கது. இதிலே மத ஒற்றுமை!

மதம் சார்ந்த கோட்பாடுகள் இவர்களை அங்கீகரிப்பதற்கு முக்கியமானதொரு தடையாகப் பல நாடுகளிலும் இருக்கின்றன. தனி மனித ஒழுக்கம் அல்லது சமூகச் சீர்குலைவு  ஆகியவற்றை விட அந்த அமைப்புகளின் கவலை, இது அங்கீகரிக்கப்படுமானால் வேலிகளைத் தாண்டிய உறவுகள் வலுப்பெறும், அது மத ஆதிக்கத்திற்கு சவாலாக வரும் என்ற அச்சம்தான் என்று ஊகிப்பது கடினமல்ல.  சாதி அமைப்புகளுடைய எதிர்ப்பும் இந்த அச்சத்திலிருந்தே வருகிறது. அவர்கள் யோசிக்க மறுப்பது என்னவென்றால், எதிர்ப் பாலினத்தவரிடையேயான ஈர்ப்புதான் ஆகப் பெரும்பான்மை. தன் பாலின ஈர்ப்பு கொண்டோர் மிகக்குறைவே. அந்த எண்ணிக்கையாலும் எதிர்காலத்தில் அது பெருகிவிடுவதாலும் மதமோ சாதியோ தகர்ந்துவிடும் என்று கவலைப்படுவது கற்பனையான பேய் பிசாசை நினைத்துப் பயப்படுவது போன்றதுதான்.

இந்நிலையில், இவர்களுக்குரிய அங்கீகாரம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அடுத்த விசாரணை ஏப்ரல் 18 அன்று நடைபெற இருக்கிறது. அந்த விசாரணை எங்கே இட்டுச் செல்லுமோ என்ற கவலையுடன் இந்த மக்கள் அந்த நாளை  எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் ஓர் ஆறுதல்

இதனிடையே, ஒரு ஆறுதலாக, தமிழ்நாட்டில் இவர்களுக்கான கொள்கை ஒன்றை உருவாக்கும் பணியில் மாநில அரசு ஈடுபட்டிருக்கிற செய்தி வந்திருக்கிறது. மதுரையைச் சேர்ந்த இரு பெண்களின் உறவுரிமை தொடர்பான ஒரு வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான ஆய்வுகளைப் படித்து, இடைக்கால ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். அதில், உச்சநீதிமன்றத்தின் முந்தைய வழிகாட்டல்படி மாறுபாலினத்தவர்களுக்கான கொள்கையை உருவாக்குவதில் தற்போதைய நிலவரம் என்னவென்று கேட்டதுடன், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கும் சேர்த்து ஒரே கொள்கையாக உருவாக்கலாம் என்ற கருத்தையும் கூறியிருந்தார்.

அரசுத் தரப்பிலிருந்து, தனித்தனிக் கொள்கைகள் உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தனிக் கொள்கைகளாக உருவாக்கப்பட்டாலும் முதலில் ஒன்று, பிறகு இன்னொன்று என்றில்லாமல் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியிடப் பணித்துள்ளார். வரும் செப்டம்பரில் அடுத்த விசாரணை நடைபெற உள்ளது.

தனித்தனிக் கொள்கைகளாக வேண்டாம், ஒருங்கிணைந்த ஒரே கொள்கையாகவே உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மாறுபாலினத்தவர்கள் சிலரும், தன்பால் ஈர்ப்பாளர்கள் சிலரும் முன்வைத்திருக்கிறார்கள். தனித்தனிக் கொள்கைகளாக இருந்தால், ஒவ்வொரு பிரிவினருக்குமான கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும், ஒரு பிரிவினர் இன்னொரு பிரிவினருக்கான வாய்ப்புகளில் ஆக்கிரமிக்கிறார்கள் என்ற அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடும் என்று கருதுகிறேன். எப்படியானாலும், இந்தக் கொள்கைகளை வகுப்பதில், மாறுபாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள், அறிவியலாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோருடன் விரிவான கலந்துரையாடலை அரசு  நடத்த வேண்டும், எல்லோரும் ஏற்கத்தக்கக் கொள்கை ஆவணங்களை உருவாக்க வேண்டும்.

கடந்த காலம் எப்படியோ, இனி வரும் காலத்தில் இத்தகைய மக்களின் இத்தகைய அங்கீகாரங்கள் நிலைபெற்றால்தான் நாகரிகமடைந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள்ள முடியும். kadhal enbadhu podhu udaimai

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share