வெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘கடவுளே அஜித்தே’ என்ற கோஷத்தால் தான் கவலையடைந்திருப்பதாக அஜித் தனது ரசிகர்களிடம் இன்று (டிசம்பர் 10) தெரிவித்துள்ளார்.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையை குறிவைத்து வெளியாக உள்ளது.
அஜித்தின் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் விடாமுயற்சி படத்தை காண அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
இதற்கிடையே சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் எல்லாம் ‘கடவுளே… அஜித்தே…’ என கோஷமிட்டு வந்தனர்.
விஜய் தவெக முதல் மாநாடு முதல் கடந்த 8ஆம் தேதி டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாராத்தான் போட்டி வரையிலும் இந்த கோஷம் அவரது ரசிகர்களால் எழுப்பப்பட்டு வந்தது.
ஏற்கெனவே தன்னை தல என்றும் அழைக்க வேண்டாம், அஜித் குமார் அல்லது ஏகே என்று மட்டும் அழைத்தால் போதும் என்று அஜித் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது தன்னை ’கடவுளே.. அஜித்தே’ என்று அழைக்க வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க…. அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை.
எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன். எனவே, பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன்.
என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
டங்ஸ்டன் சுரங்கம் : திருமாவளவனிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்
‘கல்வி உதவி தொகை வருமான உச்சவரம்பை உயர்த்த வேண்டும்’ : பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!
25 Years of Bala : தமிழ் சினிமாவின் இன்னொரு முகத்தை காட்டிய பாலா