கப்ஜா – நெளியவிட்டிருக்கும் ‘கப்சா’: விமர்சனம்!

சினிமா

சில படங்களின் பெயரைக் கேட்டவுடன் உற்றுக் கவனிப்போம். ‘கொஞ்சம் வித்தியாசமா இருக்கே’ என்று யோசிப்போம் அல்லது ‘ஏன் இப்படியொரு பேரை வச்சாங்க’ என்று கேள்வி கேட்போம். அப்படி ஏதும் நிகழாமல் ‘இந்த பேருக்கு என்ன அர்த்தம்’ என்று சில தலைப்புகள் எண்ண வைக்கும். அப்படியொரு டைட்டில் தான் ‘கப்ஜா’.

’ஆற்றல்மிக்க அதிகார பீடம்’ எனும் அர்த்தம் தொனிக்கும் பெயர். அதனைக் கேட்டவுடன், ஹீரோ உபேந்திரா ‘இம்ப்ரெஸ்’ ஆகியிருக்க வேண்டும். ஹீரோ கால்ஷீட் கிடைத்துவிட்ட அவசரத்தில், அடித்துப் பிடித்து பழைய படங்களில் அதிகமாக இடம்பெற்ற காட்சிகளை எல்லாம் கண்டறிந்து, அவற்றை மட்டுமே திரைக்கதையாகக் கோர்த்திருக்கிறார் இயக்குனர் ஆர்.சந்துரு. பார்த்த கதை, காட்சிகள் எனும்போது புதிதாக நாம் சொல்வதற்கு எதுவுமில்லாமலிருப்பதால் எளிதாக வேலை முடிந்துவிடும் என்று அவர் நினைத்திருக்கலாம்.

இந்த விஷயம் ஹீரோ, தயாரிப்பாளர், சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை ஒருவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்திருக்கிறார் இயக்குனர். ஆனால் பாருங்கள். திரையில் படம் ஓடத்தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே அந்த உண்மை புரிந்துவிடுகிறது.

ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்!

ஒரு ஊர்ல ஒரு பெரிய பணக்காரர். அவரு ஊர் மக்களுக்கு நல்லது பண்ணுவாரு. வெள்ளைக்காரன் காலத்துல, அவங்களை எதிர்த்து சண்டை போட்டு மக்களை காப்பாத்துறாரு. அதுக்காக, அவரை வெள்ளைக்கார அதிகாரிங்க தூக்குல ஏத்துறாங்க.

அப்புறம், அவரோட சம்சாரமும் ரெண்டு ஆண் குழந்தைங்களும் உயிர் பிழைக்க இன்னொரு ஊருக்குப் போறாங்க. மூத்தவன் புலின்னா, சின்னவன் எலி. ஆனா பாருங்க, மூத்த மகன் தைரியமா அம்மாவோட வீட்டுல இருக்குறான்; சின்ன பையன் பயந்துபோய் ஏர்போர்ஸ்ல சேருறான். அவன் தான் நம்ம கதையோட மெயின் ஹீரோ.

ட்ரெய்னிங் முடிஞ்சு டியூட்டியில ஜாய்ன் பண்றதுக்கு முன்னாடி, லீவு போட்டுட்டு ஊருக்குப் போறான் தம்பி. அப்ப, அங்க உள்ள பெரிய ரவுடியோட புள்ளைக்கும் அண்ணனுக்கும் சண்டை. அதுல அண்ணன் அந்தாளை கொன்னுடறாரு. போலீஸ் அரெஸ்ட் பண்ண வர்றப்போ, ‘எங்கேயாவது ஓடிடு’ன்னு அம்மா சொல்றாங்க. ‘சட்டம் தன் கடமைய செய்யட்டும்’னு சொல்லி அண்ணனை போலீஸோட அனுப்பி வைக்கறாரு தம்பி.

ஆனா பாருங்க, அந்த ரவுடியோட ஆளுங்க அண்ணனை கொன்னுடறாங்க. ஊருக்கு நடுவுல அவரோட பொணத்தை தொங்கவிட்டு, அதை அந்தம்மாவும் தம்பியும் பார்த்து அழுற மாதிரி பண்றாங்க. ‘இதுதான் நீதியா தர்மமா’ன்னு பொங்கி எழறான் தம்பி. அதுக்கப்புறம் அவன் தர்மத்தை நிலை நாட்டுறானா இல்லையாங்கறது தான் மிச்சப்படம்.

kabzaa movie review

இந்த கதைக்கு நடுவுல, இன்னொரு சைடு கதையும் உண்டு. அதுல, அந்த ஊர் ராஜ வம்சத்து பொண்ணை தம்பி காதலிக்கிறான். அதை அந்த ராஜாவால ஏத்துக்க முடியலை. அதேநேரத்துல, தன் கைய விட்டுப் போன பழைய பவரை அடையறதுக்கு அவனை யூஸ் பண்ணிக்க நினைக்கறாரு ராஜா. காரணம், இந்தியா சுதந்திரம் அடைஞ்சபிறகு சமஸ்தானங்களோட அதிகாரம் பறிபோய், அதெல்லாம் கேங்க்ஸ்டர்கள் கைக்கு போயிருச்சு. அதை முறியடிக்க, ஹீரோவை அவரு யூஸ் பண்ணிக்கறாரு. ஆனாலும், ராஜகுமாரி அவனைக் கல்யாணம் பண்ணதுல அவருக்கு கொஞ்சம் கூட இஷ்டமே இல்ல.

மேற்சொன்ன கதைகளைக் கேட்டதும், உங்கள் மனதில் ஒரு படம் ஓடுமே! அதை அச்சு அசலாகப் படம்பிடித்திருக்கிறார் இயக்குனர் ஆர்.சந்துரு. கூடவே, இந்த காலத்திற்கு ஏற்றாற் போல ‘துருப்பிடித்த தொனியில்’ காட்சியாக்கத்தைத் தந்திருக்கிறார். புரியவில்லையா, ‘ரஸ்டிக் டோன்’ (rustic tone) என்று சொல்வார்களே.. அந்த வகையில் பழுப்பு, கருப்பு, சாம்பல் கலந்த வண்ணங்களைத் திரையில் காட்டியிருக்கிறார். ஏற்கனவே கன்னடத்தில் வெளியாகி ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டு பாகங்களும் பெருவெற்றி பெற்றதைக் கண்டு பொங்கியிருக்கிறார். அதன் விளைவு திரையில் நன்கு தெரிகிறது.

ஆனால், படம் பார்க்கும் நமக்குத்தான் கஷ்டம். ஒவ்வொரு காட்சி முடியும்போதும், ‘பழைய ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழம்’ என்று கரகாட்டக்காரன் படத்தில் குள்ளமணி ஒரு டயலாக் சொல்வாரே. அதுதான் நினைவுக்கு வருகிறது.

கேஜிஎஃப் காப்பியா?

சமீபத்தில் வெளியான ‘மைக்கேல்’ படம் அப்படியே ‘கேஜிஎஃப்’ பாணியில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. அது ஓரளவுக்கு உண்மை. நாயகனைத் திரையில் அறிமுகப்படுத்துவது முதல் ஒரு கதாபாத்திரம் வழியே மொத்தக் கதையையும் சொல்வது வரை அப்படியே கேஜிஎஃப் வார்ப்பில் அமைந்திருந்தது. தாய்ப்பாசமும் இரண்டுக்குமான அடிப்படையாக இருந்தது. போலவே, ஒரேநேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட காட்சிகளை ‘இண்டர்கட்’டில் சொல்லும் உத்தியும் அதில் இருந்தது.  

அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, மேம்போக்காக அப்படியே ‘கேஜிஎஃப்’ படத்தின் காட்சிகளை மாற்றி எழுதி, அதே பாணியில் தந்திருக்கிறது ‘கப்ஜா’. அதனால், படமே ‘கப்சா’வாகியிருக்கிறது.

இப்படம் உருவான காலகட்டத்தில் இயக்குனருக்கும் ஹீரோவுக்கும் இடையே இப்படியொரு உரையாடல் நிகழ்ந்திருக்க வேண்டும்.

’சார், கேஜிஎஃப் மாதிரி ஒரு படம் பண்ணனும்’. ‘அப்படியா, ஏன் அதே மாதிரி பண்ணனும், அதையே இன்னொரு முறை பண்ணிடுவோம்’.

கேட்க காமெடியாக இருந்தாலும், படம் பார்க்கும்போது அது உண்மை என்றே எண்ணத் தோன்றும். அவ்வளவு ஏன், ‘கேஜிஎஃப்2’வில் பங்களாவை விட்டுத் தப்பிக்கும் ஹீரோயினை ஹீரோ மீட்க முயலும் காட்சியில் பின்னால் பத்து இருபது கார்கள் துரத்துவதாகக் காட்டப்படும்; எவ்வளவு பிரமாண்டமான சண்டைக்காட்சி அது என்பதை உணர்த்தும் வகையில், ஒவ்வொரு காரின் உறுமலுக்கும் நடுவே திரையில் இருளும் மௌனமும் நிரம்பும். தியேட்டரில் அக்காட்சிக்கு கைத்தட்டல்கள் அள்ளியது.

அந்த உத்தியை, உபேந்திரா ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் பின்பற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் மகேஷ். அதைப் பார்க்கும் நாம் தான் இருப்பு கொள்ளாமல் இருக்கையில் நெளிய வேண்டியிருக்கிறது.

’கப்ஜா’வின் ப்ளஸ் பாயிண்ட் இரண்டு. ஒன்று, விஎஃப்எக்ஸ் மற்றும் வண்ணமூட்டலுக்கு இடம் தந்திருக்கும் ஏ.ஜே.ஷெட்டியின் ஒளிப்பதிவு. இன்னொன்று, கிட்டத்தட்ட ‘கேஜிஎஃப்’ பாணியிலேயே ரவி பஸ்ரூர் அமைத்திருக்கும் பின்னணி இசை.

ஓம், ஏ, சூப்பர் உட்படத் தன்னைத் தனித்துவமாக ரசிகர்கள் உணரும் அளவுக்குத் திரையில் பல படங்களைத் தந்த இயக்குனர் உபேந்திரா. ஐம்பதுகளில் இருக்கும் அவரை இளைஞராகக் காட்டும்போது, நம்மால் சிரிப்பை அடக்க முடிவதில்லை. அது மட்டுமல்லாமல், அவர் ஏன் ‘கேஜிஎஃப்’ யாஷ் போல திரையில் தோன்ற விரும்பினார் என்று தெரியவில்லை. கன்னடம் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்ட காரணத்தால் அந்த பொருமல் வெளிப்படையாகத் தெரிந்திருக்கிறது.

இந்த படத்தில் உபேந்திராவின் தாய் ஆக நடித்தவர் சுதா. எண்பது, தொண்ணூறுகளில் வந்த பல தமிழ், தெலுங்கு படங்களில் இவரைப் பார்த்திருக்க முடியும். கே.பாலச்சந்தரின் ‘டூயட்’ படத்தில் பிரபுவின் சிற்றன்னையாக வருவாரே, அவரேதான். ஹீரோவின் சகோதரராக வருபவர் சுனில் புரானிக் எனும் கன்னட இயக்குனர். இருவருக்குமே பெரிதாகக் காட்சிகள் இல்லை. ஆனால், அடிப்படைக் கதை இவர்களை சுற்றித்தான் பின்னப்பட்டிருக்கிறது. என்னவொரு வினோதம்.

இந்த கதையில் கிச்சா சுதீபாவையும் சிவராஜ்குமாரையும் ஏன் கொண்டு வந்தார்கள் என்று தெரியவில்லை. உபேந்திரா ரசிகர்கள் ‘உச்’ கொட்டியதைப் போன்ற நிலையையே அவர்களது ரசிகர்களும் அனுபவித்திருப்பார்கள்.

நாயகியாக ஸ்ரேயா சரண். ‘சிவாஜி’யில் நாம் பார்த்த அதே தோற்றம். அதே நடிப்பு. என்ன, ‘கப்ஜா’வில் கொஞ்சம் வயதாகிவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மற்றபடி அதே பொலிவு மாறாமல் இருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து தெலுங்கு, கன்னடப் படவுலகில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் முரளி சர்மா, நவாப் ஷா, ஜான் கொக்கன், கோட்டா சீனிவாச ராவ், பூசணி கிருஷ்ணமுரளி, தேவ் கில், பிரமோத் ஷெட்டி, அவினாஷ் என்று இரண்டு டஜன் நடிகர்களை மிகச்சில ஷாட்களுக்கு பயன்படுத்தியிருக்கிறது ‘கப்ஜா’.

‘தாராளபிரபு’வில் நாயகியாக வந்த தான்யா ஹோப் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். அதனை வேடிக்கை பார்க்க வரும் உபேந்திரா அவருடன் சேர்ந்து ஆடுவது, சிரஞ்சீவியின் தெலுங்கு படங்களை நினைவூட்டுகிறது. இது புகழ்ச்சியா, இகழ்ச்சியா என்பதை நீங்கள் தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் காட்சிகள் வாரியாகப் படத்தை விமர்சிக்கவோ, அடிப்படைக் கதைக்கரு என்னவென்பது பற்றிக் கேள்வி எழுப்பவோ பல விஷயங்கள் உண்டு. ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கவனம் செலுத்த விரும்பாதவற்றை நாம் பேசி என்னவாகப் போகிறது.

இந்த படத்தைப் பார்க்கத் தொடங்கியதுமே, ‘கேஜிஎஃப் காப்பி இது’ என்ற எண்ணம் எழும். முழுப்படத்தையும் பார்த்து முடிந்ததும், அந்த எண்ணம் உங்கள் மனதில் அறவே இராது. காரணம், கேஜிஎஃப் 1 & 2வை பகடி செய்யும் வகையிலேயே ’கப்ஜா’ அமைந்திருக்கிறது. அந்த வகையில், இது ஒரு பிரமாண்டமான ‘ஸ்பூஃப்’ திரைப்படம். சுருக்கமாகச் சொன்னால், ‘கப்ஜா’ என்பது கேஜிஎஃப்பை கிண்டலடிக்கும் பெரிய திரை ‘லொள்ளுசபா’!.

உதய் பாடகலிங்கம்

இபிஎஸ் சமுத்திரம்… ஓபிஎஸ் கூவம்: ஜெயக்குமார் காட்டம்!

சதுரகிரி கோவிலில் பக்தர்கள் தரிசனம்!

+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *