திருவினையான ‘முயற்சி’! Kaadhal Enbathu Podhu Udamai Review
’காதல் என்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும்தானே தனிவுடமை’ என்ற பாடல் ‘பாலைவன ரோஜாக்கள்’ படத்தில் இடம்பெற்றது. இளையராஜா குரலில் ஒலிக்கும் இந்தப் பாடலானது, பிரிவுக்குள்ளாகும் காதலர்கள் படும் வலியையும் வேதனையையும் சொல்வதாக வடிக்கப்பட்டிருக்கும். இதன் முதல் வரியை டைட்டிலாக கொண்டு வெளியாகியிருக்கிறது ஒரு தமிழ் திரைப்படம். காதலர் தினத்தையொட்டி வந்திருக்கிற இப்படத்தின் ட்ரெய்லர் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க வைத்தது. ஏனென்றால், தன்பாலின ஈர்ப்பை மையப்படுத்தி இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.
லென்ஸ், தலைக்கூத்தல் படங்களின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இதனை இயக்கியிருக்கிறார். கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார். லிஜோமோள் ஜோஸ், அனுஷா பிரபு, கலேஷ் ராமனாந்த், ரோகிணி, தீபா சங்கர், வினீத் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். Kaadhal Enbathu Podhu Udamai Review

‘காதல் என்பது பொதுவுடைமை’ திரைப்படம் சுவாரஸ்யமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதா?
இணையின் அறிமுகம்! Kaadhal Enbathu Podhu Udamai Review
ஒரு பேச்சாளராக, முற்போக்கு சிந்தனையாளராக, பெண்ணியச் செயற்பாட்டாளராக அறியப்படுபவர் லட்சுமி (ரோகிணி). அவரது ஒரே மகள் சாம் (லிஜோமோள் ஜோஸ்).
சாமுக்கு பதினோரு வயதாக இருக்கும்போது, தந்தை தேவராஜ் (வினீத்) லட்சுமியைப் பிரிந்துவிடுகிறார். விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணை மணந்து கொள்கிறார்.
லட்சுமியின் அரவணைப்பில் வளரும் சாம், தாயிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கிறார். ஆனால், தனக்கு எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு இல்லை என்பதை மட்டும் மறைக்கிறார்.
பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்து பணிக்குச் சென்ற காலத்திலும் இது தொடர்கிறது. அந்த காலகட்டத்தில், தற்செயலாக நந்தினியைச் (அனுஷா பிரபு) சந்திக்கிறார் சாம். பார்த்தவுடன் காதல் கொள்கிறார். Kaadhal Enbathu Podhu Udamai Review
அதேநேரத்தில், ரவீந்திரா (கலேஷ் ராமானந்த்) எனும் நபரும் சாமிடம் தனது காதலைச் சொல்கிறார். இருவரில் யாரை சாம் காதலிக்கிறார்? இந்த கேள்விக்கான பதிலை எந்தவிதக் குழப்பமுமின்றிக் கண்டெடுக்கிறார் சாம். Kaadhal Enbathu Podhu Udamai Review
ஒரு நன்னாளில் நந்தினி, ரவீந்திரா சகிதம் தாய் லட்சுமியைச் சந்திக்கிறார். ’மகள் காதலில் இருக்கிறாள்’ என்று மட்டும் அறிந்த லட்சுமி, அன்றுதான் அவரது காதல் இணையை நேரில் காண்கிறார். அதன்பிறகு அவர் எவ்வாறு உணர்ந்தார்? தன் மனதில் இருப்பவற்றை வெளிப்படுத்தினார் என்று நீள்கிறது ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தின் மீதி.
ட்ரெய்லரிலேயே சொல்லிவிட்ட காரணத்தால், சாமுக்கு நந்தினி மீதுதான் காதல் என்பதைத் தனியே சொல்ல வேண்டியதில்லை. அதனை லட்சுமியும் இதர குடும்ப உறுப்பினர்களும் ஏற்றார்களா, இல்லையா என்பதுவே இப்படத்தின் கிளைமேக்ஸ்.

தன்பாலின ஈர்ப்பைக் காட்டுகிறேன் பேர்வழி என்று வரம்பு மீறுகிற வகையில் வசனங்களோ, காட்சிகளோ இதில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், ஒரு சாதாரணக் குடும்பம் இப்படியொரு சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று காட்டிய வகையில் ‘யதார்த்தத்தை’ கொஞ்சமாகப் பிரதிபலிக்கிறது இப்படம். அதுவே இதன் யுஎஸ்பி.
ரசிக்கும்படியான கதை சொல்லல்!
இந்த படத்தில் மொத்தமாக முக்கால் டஜன் பாத்திரங்களே வந்து போகின்றன. அவர்களில் முதன்மையான இடத்தை லிஜோமோள் ஜோஸும் ரோகிணியும் பெற்றிருக்கின்றனர்.
காதலில் விழுந்த ஒரு பெண்ணின் முகக்குறிப்புகளை, உடல்மொழியை ‘அபாரமாக’ வெளிக்காட்டியிருக்கிறார் லிஜோமோள். அவரது இணையாக நடித்திருக்கும் அனுஷா பிரபு, தன் குரல் மற்றும் உடல்மொழியில் பெண்மையைக் குறைத்து வெளிப்படுத்தி அப்பாத்திரத்தை வேறுபடுத்திக் காட்டியிருக்கிறார். Kaadhal Enbathu Podhu Udamai Review
‘வருஷங்களுக்கு சேஷம்’ படத்தில் இசையமைப்பாளராகக் கலக்கிய கலேஷுக்கு இதில் நண்பன் ப்ளஸ் ஒருதலைக் காதலன் பாத்திரம். ரசிகர்கள் கிண்டலடிக்காத வகையில் அதனைக் கையாண்டிருக்கிறார்.
குடும்பமாகப் படம் பார்க்க வருகிற ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ரோகிணி, தீபா சங்கர் பாத்திரங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. அதனைத் திரையில் இருவருமே சரியாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கின்றனர்.
வினீத் மற்றும் அவரது மனைவியாக வருபவர் பற்றிய குறிப்புகள் திரைக்கதையில் தெளிவாக இல்லை. அதனால், அவர்களது நடிப்பும் நம்மைக் கவர்ந்திழுக்கும்படியாக இல்லை. வினீத்துக்கு டப்பிங் குரலா, ஒரிஜினலா என்று தெரியவில்லை. ஆனால், அது நம்மைக் கவரும்படியாக இல்லை.
இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ், இதன் ஒளிப்பதிவு. அதனைக் கையாண்டிருக்கும் ஸ்ரீ சரவணன், ரசிகர்கள் எந்த இடத்திலும் சோர்வை உணர்ந்திடக் கூடாது என்று மெனக்கெட்டிருக்கிறார்.
டேனி சார்லஸின் படத்தொகுப்பு, பிளாஷ்பேக்குகள் இல்லாத திரைக்கதையில் வசனங்கள் மற்றும் பாத்திரங்களின் உடல்மொழி வழியே கதை கடத்தப்படுவதைக் கவனமாகக் கையாண்டிருக்கிறார்.
ஆறுச்சாமியின் கலை வடிவமைப்பு அழகழகாக ‘பிரேம்களை’ ஆக்க உதவியிருக்கிறது. உயர் நடுத்தர வர்க்கத்து மனிதர்களைத் திரையில் பார்க்கிறோம் என்ற உணர்வை ஊட்டியிருக்கிறது.
இது போக ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட இதர தொழில்நுட்பப் பணிகளும் சிறப்புறக் கையாளப்பட்டிருக்கின்றன.
‘தீயாய் மோதும் கண்கள் செந்தாழமே’ பாடல் கேட்க இனிமையாக இருக்கிறது. அந்த வகையில், நம்மை ஈர்க்கிறார் இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன். ஆனால், அந்தப் பாடலின் தொடக்கமும் சரி, அதன் தொடர்ச்சியும் சரி, நம் மனதில் சில பாடல்களை நினைவூட்டுகிறது.
‘சத்யா’வில் வரும் ‘வளையோசை கலகலவென’, ’இதயத்தை திருடாதே’வில் வரும் ’விடிய விடிய நடனம்’ மற்றும் அதே பாணியில் தெலுங்கு படமான ‘நிர்ணயம்’மில் இளையராஜா தந்த ‘எப்புடெபுடானி’ பாடல்களின் சாயலில் ‘டிஸ்கோ ராஜா’வில் ‘நுவ்வு நாதோ எமனாவோ’ பாடலைத் தந்தார் தமன். இந்தப் பாடல் மேற்சொன்னவற்றின் சாயலில் அமைந்திருப்பது தற்செயல்தானா என்று தெரியவில்லை.
ஆனால், ‘தீயாய்’ பாடலின் தொடக்க இசை சில காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கையில் மேற்சொன்ன பாடல்கள் மனதுக்குள் தாளமிடுவதென்னவோ உண்மை.

அனைத்தையும் மீறி, தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரு பெண்களின் காதலை ஒரு ‘மெயின்ஸ்ட்ரீம் பிலிம்’ ஆகத் தரப் பெரும் துணிச்சலும் முனைப்பும் வேண்டும். அந்த வகையில், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் முயற்சி திருவினையாகியிருக்கிறது.
முடிந்தவரை, இந்தப் படத்தில் பல காட்சிகளைச் சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார் ஜெயபிரகாஷ். அதேநேரத்தில், படம் பார்ப்பவர்களில் சிலர் எந்த இடத்திலும் கிண்டலடித்துவிடக் கூடாது என்பதிலும் கவனம் காட்டியிருக்கிறார். அதுவே இப்படத்தின் சிறப்பம்சம்.
நந்தினி பாத்திரத்திற்கான பிளாஷ்பேக் இந்தப் படத்தின் திரைக்கதையோடு ஒட்டாமல் தனித்திருக்கிறது. போலவே, வினீத் மற்றும் அவரது மனைவியாக வருபவருக்குத் திரைக்கதையில் சரியான இடம் மற்றும் விளக்கம் தரப்படவில்லை. குறிப்பாக, வினீத் பாத்திரத்தின் நடிப்பு இன்னும் வேறுமாதிரியாக இருந்திருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அதேநேரத்தில், தீபாவின் பாத்திரம் கதையில் வரும் முக்கியத் திருப்பத்தை எப்படிக் கையாள்கிறது என்பதைக் காட்டிய வகையில் கவர்கிறார் இயக்குனர். இப்படி சில ப்ளஸ்களும் மைனஸ்களும் படத்தில் இருக்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இப்படியொரு முயற்சியை வரவேற்பது அவசியம். அதேநேரத்தில், இதே பாணியில் கதை சொல்கிறேன் என்று சிலர் ஆபாசக் கூத்துகளை அரங்கேற்றிவிடக் கூடாது என்ற கவலையும் எழத்தான் செய்கிறது.
தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை பாத்திரம் ஏற்ற விஜய் சேதுபதியும், அவரது மனைவியாக வரும் காயத்ரியும் சேலை அணிந்து, வீட்டினுள் அமர்ந்து இயல்பாக உரையாடுவதாக ‘கிளைமேக்ஸில்’ காட்டப்பட்டிருக்கும். போலவே, வஞ்சகர் உலகம் படத்தில் குரு சோமசுந்தரம் மற்றும் அவரது நண்பராக வருபவரின் பாத்திரங்கள் தன்பாலின ஈர்ப்பைப் பேசியிருக்கும். Kaadhal Enbathu Podhu Udamai Review
அந்த வரிசையில் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘காதல் என்பது பொது உடைமை’. என்னதான் மல்டிப்ளெக்ஸ் படமாக இது அடையாளம் காணப்பட்டாலும், இன்னும் சில நாட்களில் ஓடிடி மற்றும் யூடியூப் தளங்களில் வெளியிடப்படும்போது மிக நன்றாகவே இப்படம் கவனிப்பைப் பெறும். அந்தப் பார்வையாளர்கள் தான் இப்படத்தின் உண்மையான வெற்றியைத் தீர்மானிப்பார்கள்! Kaadhal Enbathu Podhu Udamai Review