உதய் பாடகலிங்கம்
கொஞ்சம் நேர்த்தி கூட்டியிருக்கலாம்!
ஊர், பஞ்சாயத்து, கலைக்குழு, கலைஞர்களின் வாழ்வு, ஆட்டம் பாட்டம், அடிதடி நிறைந்த ஒரு திரைப்படத்தைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது. அந்த எண்ணம் தோன்றினால் தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், நாட்டுப்புறப்பாட்டு, புதுப்பட்டி பொன்னுத்தாயி, வீரத் தாலாட்டு, சங்கமம் என்று ஒரு சில படங்களே நம் நினைவுக்கு வரும்.
இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப இப்போதைய தலைமுறைக்கு அப்படியொரு படத்தைக் கொடுத்தால் எப்படியிருக்கும்? இந்தக் கேள்வியோடே தங்களது படைப்பை முன்வைத்திருக்கிறது ‘காடப்புறா கலைக்குழு’. சமீபத்தில் வெளியான இதன் ட்ரெய்லர் கவனத்தை ஈர்த்தது. அந்தச் சூட்டோடு படம் பார்க்கச் சென்றால், அது தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?.
இரண்டு கலைக்குழுக்கள்..!
ஆபாசமாகப் பாடி நடனம் ஆட முடியாது என்பது முதல் ஆட்டக்கலைஞர்களை வேற்று நபர்கள் தொடக்கூடாது என்பது வரை பல நிபந்தனைகளை விதிப்பவர் காடப்புறா கலைக்குழு உரிமையாளர் பாவாடைசாமி (முனீஸ்காந்த்). தனது குழுவில் இருப்பவர்களைக் குடும்பமாகப் பாவிப்பவர்.
அவருக்கென்று மனைவி, குழந்தைகள் எவரும் இல்லை. அவரால் வளர்க்கப்படுபவர் தமிழ் (ஹரிகிருஷ்ணன்). அவர், நாட்டுப்புற நிகழ்த்துகலைகள் குறித்த முதுகலைப்படிப்பைப் பயின்று வருகிறார். அவரது மனதை ஈர்த்தவர் அக்கிராமத்தைச் சேர்ந்த கலையரசி (சுவாதி முத்து). தமிழும் கலையரசியும் ஒருவரையொருவர் விரும்பினாலும், அதனை இருவருமே வெளிப்படுத்துவதில்லை. காரணம், கலையரசியின் சகோதரர் பென்சில் மீசை பெருமாளுக்கும் (சூப்பர்குட் சுப்பிரமணி) பாவாடைசாமிக்கும் இடையிலான முட்டல் மோதல்.
பாவாடையின் குழுவில் இருக்கும் பெண் கலைஞரை மூவர் அசிங்கமாக வர்ணித்து ஃபேஸ்புக்கில் பதிவிட, அது பெரிய பிரச்சனையாகிறது. அந்த நபர்களை அடித்து துவைக்கிறார் தமிழ். பஞ்சாயத்து தலைவர் ஈஸ்வரமூர்த்தி (மைம் கோபி) வரை விஷயம் செல்கிறது. அவரோ, தனது அரசியல் பதவியைக் காப்பதற்காக அவ்விஷயத்தை ஆறப் போட விரும்புகிறார். ஆனால், அதே ஈஸ்வரமூர்த்தி பாவாடையோடு மோதும் சூழல் அதற்கடுத்த தேர்தலில் தானாக உருவாகிறது. தேர்தலில் ஈஸ்வரமூர்த்தியை எதிர்த்துப் போட்டியிடும் சரவணனை ஆதரிக்கிறார் பாவாடைசாமி.
முதலில் அதனைப் பெரிதாக எண்ணாத ஈஸ்வரமூர்த்தி, மெதுவாக பாவாடைசாமியின் மூலமாக எதிரணி பலப்படுவதைக் கண்டு பொருமுகிறார். தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, அனைவரையும் கவனித்துக் கொள்ளலாம் என்றிருக்கிறார். அவரது எண்ணப்படியே தேர்தலில் வெற்றி பெற்றாரா? பாவாடைசாமி மீது அவருக்கிருந்த கடுப்பு என்னவானது? தமிழும் கலையரசியும் காதலை வெளிப்படுத்தினார்களா என்று நகர்கிறது ‘காடப்புறா கலைக்குழு’.
உண்மையைச் சொன்னால், இதுவொரு கமர்ஷியல் படம். கிட்டத்தட்ட ‘கரகாட்டக்காரன்’ படத்தை நினைவூட்டும் ஒரு படைப்பு. அதேநேரத்தில், மையக்கதையை விட்டு விலகி அவ்வப்போது நகைச்சுவைக் காட்சிகளுக்குத் தாவியிருப்பது ரொம்பவே திரைக்கதையை ’பஞ்சர்’ ஆக்கியிருக்கிறது. இரண்டு கலைக்குழுக்கள் இடையே இருக்கும் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பதா அல்லது அரசியல்வாதி ஈஸ்வரமூர்த்தியின் செல்வாக்கைச் சரிப்பதில் பாவாடைசாமி குழுவினரின் பங்கைக் காட்டுவதா என்ற குழப்பத்தில் தவித்திருக்கிறார் இயக்குனர் ராஜா குருசாமி. அதையும் மீறி படம் சுவாரஸ்யப்படுத்துவதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம்.
அற்புதமான கலைஞர்கள்!
முனீஸ்காந்தைச் சுற்றியே கதை நகர்கிறது என்றபோதும், காளி வெங்கட்டுக்கும் இதில் முக்கியத்துவம் உண்டு. எளிதாகச் சிரிக்க வைப்பதைப் போலவே, இருவரும் மிக எளிதாக நம்மை அழ வைத்து விடுகின்றனர். அதுவே அவர்களது திறமைக்கான சரியான புகழாரம். முனீஸ்காந்துக்கான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்திற்கு திருஷ்டி பரிகாரம்.
ஹரிகிருஷ்ணனுக்கு இதில் வழக்கமான கமர்ஷியல் பட நாயகன் பாத்திரம். அதற்கேற்ப சண்டைக்காட்சிகளிலும் நடனத்திலும் அற்புதமாகத் தோன்றியிருக்கிறார். இவரா ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்தவர் என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது அவரது இருப்பு. அவரது ஜோடியாக வருகிறார் புதுமுகம் சுவாதி முத்து. எந்த காஸ்ட்யூமில், என்னென்ன மேக்கப்பில் அழகாக இருப்பார் என்று யோசித்து அவரை திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். அதனால் கதை நாயகி என்பதைவிட, ஒரு அழகான பெண்ணாகத் தோன்றவே அதிகம் கவனத்தைச் செலவழித்திருக்கிறார் சுவாதி.
மைம் கோபிக்கு இதில் வில்லன் வேடம். ‘அல்வா’ போல அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவரது அல்லக்கைகளாக வருபவர்களும் சரி, போலீஸ் இன்ஸ்பெக்டராக வருபவரும் சரி, நம்மைச் சிரிக்க வைத்திருக்கின்றனர். இன்னும் சூப்பர்குட் சுப்பிரமணி, ஆந்தக்குடி இளையராஜா, டெலிபோன் ராஜ், ஸ்வேதா என்று பலர் இப்படத்தில் உண்டு. அதில் சுப்பிரமணி செய்யும் அலப்பறைகள் ரொம்பவே பழைய காமெடியாக உள்ளது.
இவர்கள் அனைவரையும் தாண்டி தெய்வானை ஆத்தாவாக வரும் ஸ்ரீலேகா நம் மனதைத் தொடும் நடிப்பைத் தந்திருக்கிறார். அவரை இன்னும் அற்புதமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
ட்ரெய்லர் கலர்ஃபுல்லாக இருந்ததே ’காடப்புறா கலைக்குழு’ படத்திற்கான விசிட்டிங்கார்டு. அதுவே ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. படமும் அந்த நற்பெயரைக் காப்பாற்றியிருக்கிறது. படத்தொகுப்பாளர் ராம் கோபி கதை சொல்லலில் கவனத்தைச் செலவழித்திருக்கிறார். அதேநேரத்தில், நகைச்சுவைக் காட்சிகளுக்கு ‘கத்திரி’ போடத் தயங்கியிருக்கிறார். கலை இயக்குனர் இன்பா ஆர்ட் பிரகாஷின் கைவண்ணத்தில் நாட்டுப்புறக்கலைகள் குறித்தும், அவர்களது வாழ்க்கை குறித்தும் நெருக்கமாகப் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது.
ஹென்றியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. ’நாட்டுக்கூத்து’, ‘ரட்டக்க ரட்டக்க’ மட்டுமல்லாமல் மெலடி மெட்டும் கூட சட்டென்று நம்மை இருக்கையோடு இறுக்கிக் கட்டிப் போடுகிறது. அதே தவில், நாதஸ்வர சத்தத்தையே நயமாகக் கோர்த்து பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் ஹென்றி தந்திருக்கும் பிஜிஎம் நம்மை உற்சாகமூட்டுகிறது. அடுத்தடுத்த படங்களிலும் இதே கைவண்ணத்தை அவர் தொடர வேண்டும்.
அற்புதமான நடிப்புக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உதவியோடு ஒரு நல்ல பொழுதுபோக்கு படத்தைத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராஜா குருசாமி.
திசை மாறும் திரைக்கதை!
மைம் கோபி ஏற்ற ஈஸ்வரமூர்த்தி பாத்திரமானது எவ்வாறு முனீஸ்காந்தின் பாவாடை பாத்திரம் மீது ரௌத்திரம் கொள்கிறது என்பதுவே கதையின் மையம். அதனால் ஹரிகிருஷ்ணன் – சுவாதி காதல், சூப்பர்குட் சுப்பிரமணியின் நகைச்சுவை, ஸ்ரீலேகா மீதான முனீஸ்காந்தின் கரிசனம் என்று கிளைகள் பெருகுவது திரைக்கதையின் திசையை மாற்றியமைக்கிறது.
பாடல் காட்சிகள் தவிர்த்து கிராமியக் கலைகள் பெரும்பாலான இடங்களில் காட்டப்படவே இல்லை. போலவே, ஊராட்சித் தேர்தல் தொடர்பான பரபரப்பும் திரைக்கதையில் இல்லை. நாயகியின் காஸ்ட்யூம், மேக்கப் எல்லாமே ஒரு கிராமத்துக்குச் சுற்றுலா வந்தவர் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. கதையில் மற்ற பாத்திரங்கள் மிக யதார்த்தமாக உலவுவது ரொம்பவே துருத்தலாக அதனை உணர வைக்கிறது.
என்னதான் பல பாத்திரங்களைத் திரையில் காட்டினாலும், தொடக்கம் முதல் இறுதி வரையில் மைம் கோபி – பாவாடை இருவரை மட்டுமே மையப்படுத்துவதில் இன்னும் கவனம் கூட்டியிருக்கலாம். கதையில் வரும் முக்கியப் பாத்திரங்களை படத்தொகுப்பு உத்திகளைப் பயன்படுத்தி அடிக்கோடிட்டுக் காட்டியது போல, பின்பாதியில் வரும் திரைக்கதை திருப்பங்களிலும் அந்த நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கலாம்.
சில நகைச்சுவைக் காட்சிகள், வசனங்கள் பழையதாகத் தெரிந்தாலும், படத்தின் முடிவு நம்மைச் சிரிப்பூட்டுகிறது. அதே தொனியைப் படம் முழுவதும் சீராகப் பின்பற்றியிருந்தால், ஒரு சரவெடியான ஜனரஞ்சக பொழுதுபொக்கு சித்திரமாக இது மாறியிருக்கும். அதற்கான நேர்த்தி கைவராமல் போனதால், இப்போது ‘ஓகே’ ரகமாக மாறியுள்ளது. அதேநேரத்தில் மிக எளிமையான, கிராமியம் சார்ந்த பொழுதுபோக்கு படமாக அமைந்திருப்பதையும் மறுக்க முடியாது. அந்த ஒரு காரணமே அதிகளவில் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தால் இப்படம் வெற்றியைச் சுவைக்கும்!.
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களை அலறவிடும் உதயநிதி… துரைமுருகன் சிபாரிசுக்கே இந்த கதி!
கிச்சன் கீர்த்தனா: தினை கிச்சடி
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!