தமிழில் சினிமா பைத்தியம், கல்லுக்குள் ஈரம், நீங்களும் ஹீரோதான், ஒரு வீடு இரு வாசல் உட்பட மிகச்சில படங்களே தமிழ் திரையுலகம் இயங்கும் விதத்தைத் திரையில் காட்டியவை. அவ்வை சண்முகி, பம்மல் சம்பந்தம், டிஷ்யூம் உள்ளிட்ட சில படங்கள் அதே களத்தைப் பின்னணியாகக் கொண்டவை.
கேமிராவுக்கு பின்னால் இருக்கும் உலகைக் காண்பித்தால் ரசிகர்கள் பார்க்க மாட்டார்கள் என்ற சிந்தனை திரைத்துறையினரிடம் உண்டு. அது போன்ற சென்டிமெண்ட்களை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கும் ‘ஜூப்ளி’ சீரிஸ்.

அகர்சக்தி குரானா, பிரசோன்ஜித் சாட்டர்ஜி, அதிதி ராவ் ஹைத்ரி, வாமிகா கபி, ராம் கபூர், சிதாந்த் குப்தா, நந்திஷ் சந்து, ஸ்வேதா பாசு உட்படப் பலர் நடித்திருக்கும் இந்த வெப்சீரிஸை இயக்கியிருப்பவர் விக்ரமாதித்ய மோத்வானே. சவுமிக் சென் உடன் இணைந்து அவர் தந்த அடித்தளத்திற்கு எழுத்தாக்கம் தந்திருப்பவர் அதுல் சபர்வால்.
1940 – 1955 காலகட்டத்தில் இந்தி திரையுலகில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றியும், சில நட்சத்திரங்களின் உருவாக்கத்தைப் பற்றியும் பேசுகிறது ‘ஜூப்ளி’.
திரைக்கதையில் வரும் சம்பவங்கள், பாத்திரச் சித்தரிப்புகள், குறிப்பிட்ட தகவல்கள் உள்ளிட்டவை வாழ்ந்து மறைந்த ஜாம்பவான்கள் சிலரைக் குறிப்பிடுவது போன்றிருப்பதாகவும் விவாதம் எழுந்திருக்கிறது. அதுவே, ‘ஜூப்ளி’ உண்மைக்கதையா என்ற எண்ணத்தையும் விதைக்கிறது.
வெள்ளிவிழா படைப்புலகம்!
பம்பாய் நகரின் ஒருபுறத்தில் இயங்குகிறது ராய் டாக்கீஸ். ஸ்ரீகாந்த் ராய் அதன் உரிமையாளர். ஒரு தயாரிப்பாளராக இருந்தாலும் கதைத் தேர்வு, நடிகர் நடிகைகள், படமாக்கப்படும் விதம், வெளியீட்டு உத்திகள் என்று பல விஷயங்களில் கவனம் செலுத்துபவர். ஸ்டூடியோவின் நிதிப் பரிமாற்றம் போன்ற பணிகளைக் கவனித்துக் கொள்கிறார் ராயின் மனைவி சுமித்ரா குமாரி. அவரே, ராய் டாக்கீஸின் பெரும்பாலான படங்களில் நாயகியாகவும் நடிக்கிறார்.
ராய் டாக்கீஸில் மதன் குமார் என்ற பெயரில் புதிதாக ஒரு நட்சத்திர நடிகரை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார் ஸ்ரீகாந்த். அதற்குப் பொருத்தமாக, ஜம்ஷெத் கான் என்பவரையும் தேர்ந்தெடுக்கிறார். நாடகத்தின் மீது ஆர்வமுள்ள அந்நடிகரோடு ஒப்பந்தம் மேற்கொள்வதில் திணறுகின்றனர் ராய் டாக்கீஸ் அதிகாரிகள். அப்போது, அவரை நேராகச் சென்று சந்திக்கிறார் சுமித்ரா.
மிகச்சில நிமிடங்களில் அவர் மீது காதல் கொள்கிறார். அந்த உறவு படுக்கையறை வரை தொடர்கிறது. இந்த சம்பவங்கள் லக்னோவில் நடக்கின்றன. ஆனால், பம்பாயில் இருக்கும் ஸ்ரீகாந்த் ஒரு உளவு நிறுவனம் மூலமாக இருவரது உறவையும் அறிகிறார்.

மதன் குமாராக ஜம்ஷெத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகப் பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிடுகிறார் ஸ்ரீகாந்த். ஸ்டூடியோவில் பணியாற்றும் பினோத் தாஸை லக்னோவுக்கு அனுப்பி, இருவரையும் அங்கிருந்து அழைத்து வருமாறு சொல்கிறார். அவரும் ஒரு ரயிலில் பயணிக்கிறார். அப்போது, கராச்சியில் இருந்து லக்னோவுக்குச் செல்லும் ஜெய் கன்னா என்ற நாடக இயக்குனரைச் சந்திக்கிறார் பினோத். ஜம்ஷெத் கானைத் தனது நாடகத்தில் நடிக்க வைக்கும் முடிவில் இருப்பதை அறிந்து கொள்கிறார்.
திரை நட்சத்திரம் ஆவதைக் கைவிட்டு கராச்சிக்குச் செல்லும் முடிவில் உறுதியாக இருக்கிறார் ஜம்ஷெத். சுமித்ராவோ தனது நட்சத்திர அடையாளத்தை உதறிவிட்டு, அவருடன் செல்லத் தயாராக இருக்கிறார். லக்னோவில் உள்ள சிவப்பு விளக்குப் பகுதியொன்றில் நிலோஃபர் என்பவரைச் சந்திக்கும் ஜெய், அப்பெண் மீது சட்டென்று காதலில் விழுகிறார். அந்தப் பெண்ணோ, ஜம்ஷெத் உடன் நட்பில் இருப்பவர். இவர்களுக்கு நடுவே, எப்படியாவது ஜம்ஷெத்தை பம்பாய்க்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று பிரயத்தனப்படுகிறார் பினோத்.
இந்நிலையில், எல்லாமே தலைகீழாக மாறும் சூழல் வாய்க்கிறது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி லக்னோவில் கலவரம் வெடிக்கிறது. அதேநேரத்தில், பினோத்தும் ஜம்ஷெத்தும் காருக்குள் ஒருவரோடு ஒருவர் மோதுகின்றனர்; கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. பினோத் தப்பித்துவிட, ஜம்ஷெத் மட்டும் கலவரக்காரர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அதன்பிறகு பினோத், சுமித்ரா, ஜெய் மற்றும் நிலோஃபரின் வாழ்வு எப்படியெல்லாம் மாறுகிறது என்பதைச் சொல்கிறது ‘ஜூப்ளி’.
வெள்ளிவிழா படைப்புகளைத் தரும் திரையுலகம், எந்த அளவுக்கு உண்மைத்தன்மையுடன் செயல்படுகிறது எனச் சொல்கிறது இந்த சீரிஸ். அதனை ஆவணப்படப் பாணியில் சொல்லாமல் ரத்தமும் சதையும் மிக்க, உயிர்ப்புமிக்க, உணர்வுச் செறிவுடைய ஒரு கதையாகச் சொல்லியிருப்பதுதான் ‘ஆஹா’ என்று பாராட்டக் காரணமாகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஓடும் வகையில் 10 எபிசோடுகள் இதில் உள்ளன.
அபாரமான காட்சியாக்கம்!
ஐம்பதுகளில் இந்தியத் திரைப்படங்களில் அதிகமாகப் புழங்கப்படும் வார்த்தைகளில் ஒன்றாக இருந்தது கேவா கலர் (Geva Colour). செம்மண்ணை கரைத்து ஊற்றினாற் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துவது. அந்த நிறத் தொனியைத் தரும் நுட்பம் கொண்டு, பலரும் திரையில் கடந்த காலத்தைக் காட்டுகின்றனர். ஆனாலும் பொருத்தமான உடைகள், அணிகலன்கள், ஒப்பனை, காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் இடங்கள் மற்றும் பொருட்கள் என்று பல விஷயங்கள் அதற்குத் தேவை. அந்த வகையில், ‘ஜூப்ளி’யின் தயாரிப்பு வடிவமைப்பாளர்கள் அபர்ணா சுத், முகுந்த் குப்தா முதற்கொண்டு அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் அபாரமாக உழைத்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் பிரதீக் ஷா. ஒவ்வொரு பிரேமிலும் நம்மைப் பிரமிக்க வைக்கிறார். பல காட்சிகளில் பழைய படங்களை மீண்டும் பார்க்கும் உணர்வை ஊட்டுகிறார். மிக முக்கியமாக, விஎஃப்எக்ஸ் கலைஞர்களின் பங்களிப்பு எந்த இடத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் கண்டறியவே முடியவில்லை.
ஆர்த்தி பஜாஜின் படத்தொகுப்பு சீராகக் கதை சொல்வதைச் செம்மைப்படுத்தியிருக்கிறது. வழக்கமாக, வெப்சீரிஸ்களில் டைட்டிலுக்கு முன்பாக ஒரு கிளைக்கதை சொல்லும் வழக்கம் உண்டு. டைட்டிலும் ஓரிரு நிமிடங்களுக்கு நீளும். இதில், எல்லாமே ரத்தினச் சுருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு சம்பவங்களை முன்கதையாகக் காட்டிவிட்டு, ‘ஜூப்ளி’ என்ற எழுத்துகள் ஒளிர்வதோடு அதனை நிறைவு செய்துவிடுகிறார் இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே.
அமித் திரிவேதியின் இசையில் வழக்கமாகவே ஒரு ‘ரெட்ரோ’ உணர்வு பீறிடும். இதிலோ, கதைக்களமே அப்படியொன்றாக உள்ளது. மனிதர் புகுந்து விளையாடியிருக்கிறார். ஐம்பதுகளில் வந்த இந்தி திரையிசையை அப்படியே இப்போதைய பாணியில் தந்திருக்கிறார்.
ஆனால், அவரை விடவும் பின்னணி இசை அமைத்திருக்கும் அலோக்நந்தா தாஸ்குப்தாவின் உழைப்பே நம்மை அதிகமும் கவர்கிறது. காட்சிக்குத் தேவையான அளவுக்கு இசையைத் தருவதில் மனிதர் ’ஜித்தராக’ இருக்கிறார்.
இந்த கதையில் ஜாம்ஷெத் கானாக நந்திஷ் சந்து, ஸ்ரீகாந்த் ராய் ஆக பிரசோன்ஜித் சாட்டர்ஜி, பினோத் தாஸ் ஆக அபர்சக்தி குரானா, ஜெய் கன்னாவாக சிதாந்த் குப்தாவு, பைனான்சியர் வாலியா ஆக ராம் கபூர், சுமித்ரா ஆக அதிதி ராவ் ஹைத்ரி, நிலோஃபர் குரேஷி ஆக வாமிகா கபி, ரத்னா ஆக ஸ்வேதா பாசு நடித்துள்ளனர். இவர்கள் தவிர்த்து, ராமராக நடித்த அருண் கோவில் உட்படப் பலர் இதில் வந்து போகின்றனர். இதில் நடித்தவர்களில் ’காற்று வெளியிடை’ மூலமாக அதிதி ராவும், ‘மாலை நேரத்து மயக்கம்’ மூலமாக வாமிகா கபியும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள்.
இந்த காட்சி சிறந்தது என்று சொல்ல முடியாதபடி, ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல காட்சிகளில் மேற்சொன்ன அனைவரும் சிறந்த நடிப்பைத் தந்திருக்கின்றனர்.
தமிழ் டப்பிங் பணியை அண்ணாதுரை கண்ணதாசன், கே.எஸ்.ரகுநந்தன் உள்ளிட்டோர் மேற்கொண்டிருக்கின்றனர். வசனங்களில் கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் உண்டென்றாலும், அவை நம் காட்சியனுபவத்தைச் சிதைப்பதில்லை. வாலியாவுக்கு டப்பிங் தந்த விக்ரம் மோசஸூம், ஸ்ரீகாந்த் ராய்க்கு குரல் தந்த விஜய் ஆதிராஜும் நம் கவனத்தைக் கொள்ளையடிக்கின்றனர்.
‘ஜூப்ளி’யில் அதுல் சபர்வாலின் அபாரமான திரைக்கதைக்கு காட்சியாக்கம் தந்த வகையில் அசத்துகிறார் இயக்குனர் விக்ரமாதித்ய மோத்வானே. எண்பது ஆண்டுகளுக்கு முன் இந்தி திரையுலகம் தந்த படைப்புகள் எப்படியிருந்தன என்பது மட்டுமல்லாமல், அவ்வுலகில் இருந்தவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பதையும் உள்வாங்கினால் மட்டுமே இப்படியொரு படைப்பை ஆக்க முடியும்.

அரசாட்சியின் தலையீடு!
திரைப்படங்கள் ஆனாலும், பொதுவெளி ஆனாலும் ஆண்களே எதையும் தீர்மானிப்பவர்களாக விளங்குகின்றனர். இந்த கதையில், ‘பொருந்தாக் காமம்’ என்ற வகையில் சுமித்ரா குமாரியின் காதல் காட்டப்படுகிறது. ஆனால், அந்த பெண்ணோ தன்னை உண்மையாக நேசிக்கும் ஒரு ஆண் உடன் வாழ விரும்புகிறார். ஒரு ராணி போலத் தன்னை உணர வைக்கும் ஆண்களுடன் மட்டுமே சுற்றித் திரிய விரும்புகிறார் நிலோஃபர். ஆனால், அவர் விரும்பும் எந்த ஆணும் அவரிடம் உண்மையான காதலை வெளிப்படுத்துவதே இல்லை. அதேநேரத்தில், இந்த இரு பெண்களுமே தாங்கள் வாழும் காலகட்டத்தை மீறி பாலியல் சுதந்திரம் கொண்டவர்களாக வாழ்கின்றனர்.
இந்த கதையில் சொன்னது போலவே, 1930 – 50களில் பம்பாய் டாக்கீஸ் என்றொரு ஸ்டூடியோ வெற்றிகரமாக இயங்கியது. அதனை நடத்தியவர் ஹிமான்சு ராய். அவரது மனைவி, பிரபல நடிகை தேவிகா ராணி. 1937 வாக்கில் நஜ்ம் உல் ஹசன் என்ற நடிகரோடு தேவிகாவுக்குக் காதல் ஏற்பட்டது; அது பம்பாய் டாக்கீஸின் வியாபாரத்திலும் பெரிய மாற்றங்களை உண்டுபண்ணியது.
அப்போது, நஜ்ம் உல் ஹசன் – தேவிகா இருவரையும் மீண்டும் பம்பாய் டாக்கீஸுக்கு அழைத்து வந்தவர் அங்கு பணியாற்றிய சசாதர் முகர்ஜி. அவரது சொந்த மைத்துனர் தான் நடிகர் அசோக் குமார். அவரது உண்மையான பெயர் குமுத்லால் கங்குலி.அப்போது, அசோக் குமாரும் பம்பாய் டாக்கீஸில் உள்ள லேப்பில் தான் பணியாற்றினார். சசாதர் செய்த காரியத்திற்குப் பரிசாக, குமுத்லால் ‘அசோக் குமார்’ ஆனார். நஜ்ம் உல் ஹசன் திரை வரலாற்றில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். மேற்சொன்ன ராய், அந்த காலத்திலேயே தனது பம்பாய் டாக்கீஸை இந்திய பங்குச் சந்தையில் இடம்பெறச் செய்தவர் என்ற தகவல், அவர் எப்பேர்ப்பட்ட தொலைநோக்குச் சிந்தனை கொண்டவர் என்பதைச் சொல்லும்.

இந்த கதையில் வரும் நிலோஃபர் பாத்திரம் கூட நடிகை நர்க்கீஸின் சாயலை வெளிப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. நர்கீஸ் – ராஜ் கபூர் காதல் பற்றி அவர்களது வாரிசுகளும் கூட பொதுவெளியில் பேசியிருக்கின்றனர். என்னதான் அசோக் குமார், ராஜ் கபூர், நர்கீஸ், தேவிகா ராணி மற்றும் தேவ் ஆனந்த், கமல் அம்ரோகி போன்ற ஜாம்பவான்களின் வாழ்க்கைச் சாயல் காணக் கிடைத்தாலும், ’ஜூப்ளி’ ஒரு அழகான கற்பனைக் கதையே. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் உண்மைகள்தான், நமது சிந்தனையைக் கிளறுவதாக உள்ளன.
இந்தி திரையுலகில் ரஷ்யா, அமெரிக்கா நாடுகளின் பிரதிநிதிகள் எப்படித் தலையிட்டனர் என்பது இந்த கதையில் சொல்லப்படுகிறது. அதன் மூலமாக, இந்தியா உடன் அந்த நாடுகள் நட்பு கொள்ள பிரயத்தனப்பட்டதும், அதற்காக இந்திய உளவுப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டதுமாகக் கதை நகர்கிறது. நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்வைத் தீர்மானிக்கும் அளவுக்கு அச்செல்வாக்கு இருந்ததாகச் சொல்வதை ’அதீதமானதாக’ எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த தலையீடு உண்மை என்பது போன்றே பல காட்சிகள் இதில் உள்ளன.
ஜெய் கன்னா இயக்கும் ‘பைஜு ஆவாரா’ படம் 1951இல் ரஷ்யாவில் திரையிடப்படுவது ஒரு அரசியல் செயல்பாடாக ‘ஜூப்ளி’யில் காட்டப்படுகிறது. உண்மையில், ராஜ்கபூர் இயக்கிய ‘ஆவாரா’ படம் இதேபோல ரஷ்யாவில் திரையிடப்பட்டு பெருவரவேற்பைப் பெற்றது. ஜெய்யின் முதல் படமான ‘டாக்சி டிரைவர்’ என்ற பெயரில் தேவ் ஆனந்த் ஒரு படம் இயக்கியுள்ளார். இந்தி சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான ‘காகஜ் கே ஃபூல்’ படத்தை குரு தத் உருவாக்கியதும் இதில் லேசாகச் சொல்லப்படுகிறது.
வெறுமனே தகவல்களாக இல்லாமல், உண்மைகளைக் கதையின் பொருத்தமான இடங்களில் பொதிப்பதன் மூலமாக கிளாசிக் அந்தஸ்தை பெறுகிறது ‘ஜூப்ளி’. எதிர்காலத்தில் இதனை ரசித்துக் கொண்டாடவும், எதிர்மறையாக விமர்சிக்கவும் அந்த உண்மைத்தன்மையே காரணமாக இருக்கும்!
உதய் பாடகலிங்கம்
பொறியியல் மாணவர் சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!