சாதீயத்திற்கு எதிரான ’கமர்ஷியல் சினிமா’!
ட்வெய்ன் ஜான்சன் போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் திரையில் புஜபல பராக்கிராமத்துடன் தோன்றுவதோடு, எதிர்ப்படுபவர்களை எல்லாம் பொடிப்பொடியாக்கும் வகையிலான ஆக்ஷன் தருணங்களை வெளிப்படுத்துவார்கள். அதே தொனியைத் திரையில் வெளிப்படுத்த நம்மூரில் நட்சத்திரங்கள் மிகக்குறைவு.
இந்தி திரையுலகில் வித்யுத் ஜம்வால், ஹ்ரித்திக் ரோஷன் என்று ஒரு சிலரே அப்படிப்பட்ட படங்களைத் தந்து வருகின்றனர். அதிலும் ஜான் ஆபிரகாம் போன்ற ஒரு நாயகன் அப்படி நடிக்கும்போது பார்வையாளர்களான நமக்கு போரடிக்காது.
வெறுமனே ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாமல் கதையோட்டத்திலும் அலையலையாய் பல விஷயங்களை இடம்பெறச் செய்வதில் காட்டும் கவனமே அவரது முந்தைய படங்களை வெற்றியடையச் செய்தது. அந்த வரிசையில் இன்னொன்றாக இடம்பெற முனைந்திருக்கிறது, நிகில் அத்வானி இயக்கியுள்ள ‘வேதா’.
இந்த படத்தில் டைட்டில் பாத்திரத்தில் நடித்திருப்பது ஜான் அல்ல; அப்பாத்திரத்தை ஏற்றிருப்பவர் நடிகை ஷர்வாரி வாஹ். ஆஷிஷ் வித்யார்த்தி, அபிஷேக் பானர்ஜி, குமுத் மிஸ்ரா, தன்வி மல்ஹரா, அனுராக் தாகூர் என்று இதில் பலர் நடித்துள்ளனர். தமன்னாவும் கௌரவ தோற்றத்தில் தலைகாட்டியிருக்கிறார்.
இந்தியில் தயாரான இப்படம் தமிழ், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
‘வேதா’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?
சாதீய அடக்குமுறைகள்!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பார்மர் எனும் ஊரில் நிகழ்வதாக, இப்படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.
எல்லையோரப் பாதுகாப்பு படையில் பணியாற்றும் மேஜர் அபிமன்யு (ஜான் ஆபிரகாம்), தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்திற்குச் செல்கிறார். அவரது சகாக்கள் தொலைவில் இருந்து கண்காணிக்கின்றனர்.
ஒருகட்டத்தில் அவரது அடையாளம் தீவிரவாதிகளுக்குத் தெரியவர, அவரைச் சுற்றி வளைக்கின்றனர். அப்போது நடக்கும் தாக்குதலில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். அக்கும்பலின் தலைவன் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என்று வயர்லெஸ்ஸில் மேலதிகாரியின் உத்தரவு வருகிறது. அதையும் மீறி, அந்த நபரைக் கொல்கிறார் அபிமன்யு. அதனால், ராணுவ நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகி, அப்படையில் இருந்து நீக்கப்படுகிறார்.
அந்த தீவிரவாதிக் கும்பலின் தலைவன் தான், அபிமன்யுவின் மனைவி ராஷியைக் (தமன்னா) கொன்றவர்.
சில நாட்கள் கழித்து, ராஷியின் தந்தை வசித்து வரும் பார்மருக்கு வருகிறார் அபிமன்யு. அவர் வேலை பார்க்கும் கல்லூரியிலேயே குத்துச்சண்டை பயிற்சியாளருக்கு உதவியாளராகச் சேர்கிறார்.
ஆனால், அதற்கு அவ்வூரின் பெரிய மனிதரான ஜிதேந்தர் பிரதாப் சிங்கின் (அபிஷேக் பானர்ஜி) அனுமதியைப் பெற வேண்டியிருக்கிறது. அவரது தம்பி சுயோக் பிரதாப் சிங் (ஷிதிஜ் சௌகான்) அந்தக் கல்லூரியில் தான் படிக்கிறார்.
அவர்கள் இருவரும் மன்னர்கள் போன்று அவ்வட்டாரத்தில் செயல்பட்டு வருகின்றனர். காரணம், அவர்கள் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதே.
இந்த நிலையில், அவர்களது சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார் வினோத். அவர் அவ்வூரில் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் சாதியினரில் ஒருவர்.
வினோத்தின் சகோதரி வேதாவுக்கு (ஷர்வாரி) குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று ஆர்வம். இன்னொரு சகோதரியும் அந்த ஆசைக்கு உறுதுணையாக இருக்கிறார்.
ஆனால், அவர்களது பெற்றோர் பயப்படுகின்றனர். அதனைச் செய்தால், ’உயர்சாதியினரின் ஆத்திரத்திற்கு ஆளாக நேரிடும்’ என்று பின்வாங்குகின்றனர். அதையும் மீறி, குத்துச்சண்டை பயிற்சி நடக்குமிடத்திற்குச் செல்கிறார் வேதா. தந்தையிடம் அடம்பிடித்து, பயிற்சிக்கான பணத்தைச் செலுத்தத் தயாராகிறார்.
அப்போது, ஜிதேந்தர் சிங்கின் தம்பி சுயோக்கும் அவரது ஆட்களும் வேதாவை அடித்து அவமானப்படுத்துகின்றனர்.
காயத்தில் இருந்து மீள்வதற்குள், ‘எனக்கு குத்துச்சண்டை கத்துக் கொடுங்க’ என்று அபிமன்யுவிடம் கேட்கிறார் வேதா. அவரும் அப்பெண்ணுக்குக் கற்றுக்கொடுக்கத் தொடங்குகிறார்.
இந்த நிலையில், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது வேதாவின் சகோதரரும் அவரது காதலியும் தனிமையில் இருப்பதைப் பார்க்கிறார் சுயோக். சாதிப் பஞ்சாயத்திற்கு விஷயம் செல்கிறது. வேதாவின் குடும்பத்தினர் ஊரார் முன் அவமானத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.
அதையடுத்து, அப்பெண்ணும் வினோத்தும் ஊரைவிட்டுச் சென்றுவிடுகின்றனர். அதனால், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி அழைக்கிறார் ஜிதேந்தர். திருமண நிகழ்வின்போது அவர்களைக் கொலை செய்கிறார்.
அதன்பிறகு, அவர்களது பார்வை வேதாவின் மீதும் அவரது சகோதரி மீதும் படிகிறது. உயிருக்கும் கற்புக்கும் பயந்து அவர்கள் ஓடுகின்றனர்.
அம்முயற்சியின்போது, தன்னைப் பலி கொடுத்து வேதாவைக் காப்பாற்ற முடிவெடுக்கிறார் சகோதரி. அக்கூட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்த வேதா, நேராகச் சென்று அபிமன்யுவைப் பார்க்கிறார்.
தன் குடும்பத்தினரின் இழப்புக்குச் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். அபிமன்யுவோ, நேராக ஜிதேந்தரைச் சந்தித்து இதற்கொரு முடிவு கட்டுவோம் என்கிறார். அதையடுத்து, இருவரும் ஜிதேந்தரின் மாளிகைக்குச் செல்கின்றனர். அங்கு, ஒரு பெருங்கூட்டமே அவர்களைக் கொல்லக் காத்திருக்கிறது.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது ‘வேதா’வின் மீதி.
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலவும் சாதீய அடக்குமுறைகளையும், அதற்கு எதிராக வெகுண்டெழும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வாழ்வனுபவங்களையும் லேசாகத் தொட்டுச் செல்கிறது இப்படம்.
மிரட்டும் சண்டைக்காட்சிகள்!
ராஜஸ்தான் வட்டாரத்தில் நிலவும் சாதீய அடக்குமுறைகள் குறித்த கதைகளை நந்திதா தாஸ் நடித்த ‘பவந்தர்’ போன்ற படங்களில் பார்த்திருப்போம். ஆனால், ‘வேதா’வில் அவ்விஷயத்தை முழுக்க ‘கமர்ஷியல் சினிமா’வுக்கான காட்சியாக்கத்துடன் அணுகியிருக்கிறார் இயக்குனர் நிகில் அத்வானி.
அசீம் அரோரா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியிருக்கிறார்.
தமிழ் பதிப்பில் குரல் ஒலிக்கும் விதமோ, வசனங்களோ செயற்கையாகத் தெரியாதது ஆறுதல். வாயசைப்புடன் பொருந்த வேண்டும் என்று எண்ணாமல், வசனங்களில் இருக்கும் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
வசனங்களில் சமஸ்கிருத வாடை கொஞ்சம் உண்டு. சாதீயத்திற்கு எதிரான ஒரு படத்தில் அவற்றை இடம்பெறச் செய்திருப்பது சர்ச்சையை எழுப்பக்கூடியது. ஆனால், இயக்குனர் திட்டமிட்டு அதனை இடம்பெறச் செய்திருக்கிறார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மலாய் பிரகாஷ், திரையின் ஒவ்வொரு பிரேமிலும் யதார்த்தமும் சினிமாத்தனமும் கலந்திருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார். அதுவே, இதில் வரும் பெரும்பாலான பிரேம்கள் ஒரே வண்ணத்தில் அமையக் காரணமாக இருக்கிறது.
சில கதாபாத்திரங்கள் ஒரு பக்கமாய் ஓட, அதற்கு எதிரான திசையில் வேறு சில பாத்திரங்கள் நகர்கின்றனர். அவர்கள் என்னவானார்கள் என்பதற்குப் பதில் சொல்லாமலேயே திரைக்கதை நகர்கிறது. படத்தொகுப்பாளர் மாஹிர் ஜவேரியும் அதற்குக் காரணமாகியிருக்கிறார்.
தயாரிப்பு வடிவமைப்பாளர் பிரியா சுஹாஸ், சண்டைப்பயிற்சி இயக்குனர் ஜுனைத் ஷெய்க், ஒப்பனையாளர், ஒலி வடிவமைப்பாளர் என்று பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தின் உள்ளடக்கத்தினை ரசிகர்கள் செறிவாக உணர வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கின்றனர். குறிப்பாக, ஜுனைத் தந்திருக்கும் சண்டைக்காட்சிகள் விஎஃப்எக்ஸ் உடன் இணைந்து மிரட்டல் அனுபவத்தைத் தருகின்றன.
கார்த்திக் ஷா அமைத்துள்ள பின்னணி இசை, காட்சிகளில் இருக்கும் காதல், நெகிழ்ச்சி, ஆத்திரம், வன்மம் ஆகியவற்றை அதிகப்படுத்தும் விதமாக ஒலிக்கிறது.
அபிமன்யுவாக வரும் ஜான் ஆபிரகாம், படம் முழுக்க முறுக்கேறிய உடலும் முறைப்பான பார்வையுமாகத் திரிகிறார். என்னதான் ஜிம் பாடி என்றாலும், மூச்சை இழுத்துப் பிடித்தாற்போல நிற்பதும் நடப்பதும் பேசுவதும் கொஞ்சம் செயற்கையாகத் தெரிகிறது.
ஷர்வாரிக்கு இது இரண்டாவது ஜாக்பாட். ‘முஞ்யா’வில் கிளைமேக்ஸ் காட்சியில் அசத்தியவர், இதில் படம் முழுக்கத் தோன்றியிருக்கிறார். நன்றாகத் தனது இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வில்லனாக வரும் அபிஷேக் பானர்ஜி ‘அசால்டாக’ படம் முழுக்க வந்து போயிருக்கிறார். ஆஷிச் வித்யார்த்தி ‘இது போதும்’ என்பது போலத் தன் பங்குக்கு நடித்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து குமுத் மிஸ்ரா, ராஜேந்திர சாவ்லா, அனுராக் தாகூர், தன்வி மல்ஹரா, ஊர்வசி துபே, ரஜோஸ்ரீ, ஷிதிஜ் சௌகான், பரிதோஷ் சந்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
ஜான் ஆபிரகாம் மனைவியாக சில ஷாட்களுக்கு வந்து போயிருக்கிறார் தமன்னா. ‘அதுவாவது பரவாயில்லை’ என்பது போல ஒரு பாடலில் கொஞ்சமாய் நடனமாடியிருக்கிறார் மௌனி ராய்.
இந்தப் படத்தின் கதை மிகப்புதுமையானது என்று சொல்லிவிட முடியாது. பல கமர்ஷியல் படங்களில் வந்த கதை தான் என்றபோதும், சாதீய பின்னணியில் அது சொல்லப்பட்ட விதத்தினால் ‘வேதா’ வேறுபடுகிறது.
ஷர்வாரி தான் இக்கதையில் முதன்மை பாத்திரம் என்றபோதும், ஜான் ஆபிரகாம் அவருக்குப் பின்னால் அரணாக விளங்குவதாகக் காட்டுகிறது திரைக்கதை. அதனால், பெரும்பாலான காட்சிகளில் ‘கமர்ஷியல் படத்திற்கான’ அம்சங்களே நிறைந்து நிற்கின்றன.
குடும்ப விழாக்கள், உறவுகளின் முக்கியத்துவம், காதல் விளையாட்டுகளில் குழப்பம், கேங்க்ஸ்டர் உலகம், கேசினோ கொள்ளை, தீவிரவாதிகளை அழித்தல் என்றே இந்தி திரையுலகம் குறிப்பிட்ட சில விஷயங்களைக் கொண்டே கமர்ஷியல் படங்களை உருவாக்கி வருகிறது.
சமீபகாலமாக அந்த கதை சொல்லலில் நிறையவே மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. ‘வேதா’ படத்தின் உள்ளடக்கத்தையும் அவ்வாறே நோக்க வேண்டியிருக்கிறது.
இப்படத்தில் மண்மணம் கமழும் அம்சங்களை எதிர்பார்க்க வேண்டாம் என்றாலும், வழக்கமான பாதையில் இருந்து விலகி நிற்பது நிச்சயம் பாராட்டப்படக் கூடியது.
அது மட்டுமல்லாமல், திரைக்கதையில் சுமார் 75 சதவீதக் காட்சிகள் செறிவாக அமைந்திருக்கின்றன. பரபரப்பாக நகர்ந்து, நம்மைத் திரையோடு ஒன்றச் செய்கின்றன. அந்த ‘காட்சியாக்கம்’ மிக அரிதாகவே நிகழும். இயக்குனர் நிகில் அத்வானி அதனைச் சாதித்திருக்கிறார்.
‘பழைய கதை என்றாலும் பார்க்க ப்ரெஷ்ஷாக இருக்கும்’ என்று ஒரு சில படங்களையே வரிசைப்படுத்த முடியும். அந்த வகையில், ‘வேதா’வையும் தாராளமாக வைக்கலாம்!
உதயசங்கரன் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
களைகட்டும் தவெக கொடி அறிமுக விழா : விஜய்க்கு சீமான் வாழ்த்து!
கிச்சன் கீர்த்தனா : ஸ்வீட் கார்ன் முளைப்பயறு சாலட்
கொடி பறக்குதா? – அப்டேட் குமாரு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – பண பரிவர்த்தனை நடந்ததா? : மோனிஷா விளக்கம்!
செங்கல்பட்டு பாலாறு பகுதியில் பழமையான கற்கோடரி… அகழாய்வு செய்ய கோரிக்கை!
நடிகர் விஜய்யை தெரியும்… முதல்வர் ஸ்டாலினை தெரியாது!- சென்னையில் மனுபாக்கர் ஓபன் டாக்!