ஜிகிரி தோஸ்து: விமர்சனம்

சினிமா

நட்பு கலாட்டாவாக அமைந்திருக்கலாம்!

சிறிய படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவது மிக அரிதாக நிகழும். அதற்கேற்றவாறு, அதன் உள்ளடக்கம் செறிவானதாக இருக்க வேண்டும் அல்லது நல்லதொரு பொழுதுபோக்கைத் தர வேண்டும். அதற்கு உத்தரவாதம் தரும் படங்களை முன்கூட்டியே அடையாளம் காண்பது கடினம். அந்த வரிசையில் இடம்பெறுமா என்ற கேள்வியை எழுப்பியது சமீபத்தில் வெளியான ‘ஜிகிரிதோஸ்து’ பட ட்ரெய்லர்.

தற்போது அப்படம் தியேட்டரில் ரிலீஸாகி இருக்கிறது. படம் அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ததா, இல்லையா?

விட்டுக்கொடுக்காத நண்பர்கள்!

சினிமாவில் ஹீரோவாக நடிக்க விரும்புகிறார் ரிஷி (ஷாரிக் ஹாசன்). தான் கண்டறிந்த ‘டெரரிஸ்ட் ட்ராக்கர்’ எனும் மின்னணு சாதனத்தைத் தனது கல்லூரியில் சமர்ப்பிக்கத் துடிக்கிறார் விக்னேஷ் (அரன் வி). உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த லோகி (விஜே ஆஷிக்), தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

ரிஷியின் கேர்ள்ப்ரெண்ட் திவ்யா (அம்மு அபிராமி), தனக்குத் தெரிந்த இயக்குனர் ஒருவரிடம் அடுத்தநாள் மாலை அறிமுகப்படுத்துவதாகச் சொல்கிறார்.

போலவே, அதற்கடுத்த நாள் தனது புராஜக்டை கருத்தரங்கு அறையில் சமர்ப்பிக்க முனைகிறார் விக்னேஷ். அந்த நேரத்தில், அவரது ‘டெரரிஸ்ட் ட்ராக்கர்’ வேலை செய்யவில்லை. அதையடுத்து, அடுத்த ஆண்டு செய்முறை தேர்வு எழுதுமாறு சொல்லிவிடுகிறார் பேராசிரியர்.

தேர்வில் தோற்றதால் மனதொடிந்திருக்கும் விக்னேஷைத் தேற்ற, ரிஷியும் லோகியும் அவரது கல்லூரிக்குச் செல்கின்றனர். அங்கிருந்து, மூவரும் காரில் மகாபலிபுரம் புறப்படுகின்றனர். அன்று மாலைக்குள் திரும்பிவிட வேண்டும் என்பதே லோகியிடம் ரிஷி முன்வைக்கும் ஒரே நிபந்தனை. ஆனால், விதி வேறுவிதமாக விளையாடுகிறது.

செல்லும் வழியில், ஒரு காரில் இளம்பெண்ணைச் சிலர் கடத்திச் செல்வதை மூவரும் பார்க்கின்றனர். அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வேண்டும் என்று ரிஷி சொல்ல, அதற்கு விக்னேஷ் சம்மதிக்கிறார். லோகி மறுப்பு தெரிவிக்கிறார். நண்பர்கள் பிடிவாதமாய் சொல்ல, வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறார்.

 

கடத்தியவர்கள் அந்தப் பெண்ணை அடைத்து வைத்திருக்கும் இடத்தை அறிபவர்கள், சில நூறு மீட்டர்கள் தொலைவில் ஒளிந்து கொள்கின்றனர்.

அந்த இடத்தில் இருந்து, ‘டெரரிஸ்ட் ட்ராக்கர்’ மூலமாகக் கடத்தல்காரர்களின் மொபைல் அழைப்புகளை ஒட்டுக் கேட்கின்றனர்.

அப்போது, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர், ஒரு அரசியல்வாதி அந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிகிறது. அப்பேச்சுகளைப் பதிவு செய்யும் விக்னேஷ், அவற்றைத் தனக்குத் தெரிந்த ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்கு அனுப்பி வைக்கிறார்.

அந்த அதிகாரி (கௌதம் சுந்தர்ராஜன்) துறைமுகம், விமானநிலையம் போன்ற இடங்களுக்குப் பாதுகாப்பு தரும் பிரிவின் ஐஜியாக இருக்கிறார். அவர் மூலமாக, அந்த கடத்தல் கும்பலின் சட்டவிரோதச் செயல்பாடுகள் வெளியே தெரிய வருகிறது. அதேநேரத்தில், நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விக்னேஷ் தனது சாதனத்தைப் பயன்படுத்தி சிலரது மொபைல் அழைப்புகளை ஓட்டுக் கேட்பதைக் கண்டறிகின்றனர். கடத்தலில் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரிடமே, அந்த விவரத்தைக் கூறுகின்றனர்.

அதையடுத்து என்ன நடந்தது? ரிஷி, விக்னேஷ், லோகி மூவரும் வில்லன் கும்பலிடம் மாட்டினார்களா? கடத்தப்பட்ட இளம்பெண் மீட்கப்பட்டாரா என்று சொல்கிறது இந்த ‘ஜிகிரி தோஸ்து’. படம் முழுக்கச் சேர்ந்தே திரியும் மூன்று நண்பர்களும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதில்லை. அந்த நட்புதான் படத்தின் டைட்டிலுக்கான காரணம்.

எளிமையான படம்!

மூன்று பேர் பிரதான வேடத்தில் நடித்திருந்தாலும் டான்ஸ், பைட் என்று முதல் வரிசையில் ‘சீட்’ பிடிக்கிறார் ஷாரிக் ஹாசன். ரொம்பவும் உணர்ச்சிவசப்படுவதற்கான வாய்ப்பு திரைக்கதையில் இல்லாததால், படம் முழுக்க ‘ஜெண்டிலாக’ வந்து சென்றிருக்கிறார்.

இப்படத்தை இயக்கியிருக்கும் அரன், விக்னேஷ் பாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிதாக அலட்டிக்கொள்ளாத முகபாவனையோடு தோன்றினாலும், அவர் முகத்தில் எந்நேரமும் சிரிப்பு ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம்.

ஆங்காங்கே சில ‘ஒன்லைனர்கள்’ வழியே நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார் விஜே ஆஷிக். ‘மேடம் ஒரு செல்ஃபி’, ‘அங்கிள் வேலை பார்த்தது நீதானா’ என்பது போன்ற வசனங்கள் வழியே வசீகரிக்கிறார்.

பவித்ரா லட்சுமி, அம்மு அபிராமி என்று இரண்டு இளம்பெண்கள் இருந்தாலும், இருவரையுமே ஹீரோயின்களாக எண்ண முடிவதில்லை. காரணம், இருவருக்கும் திரையில் பெரியளவில் வாய்ப்பு தரப்படவில்லை.

இவர்கள் தவிர்த்து கடத்தல் கும்பலின் தலைவனாக வரும் பாடகர் சிவம், அவரது அல்லக்கையாக வருபவர், கேபிஒய் சரத், துரை சுதாகர், அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், ஆர்.என்.ஆர். மனோகர், மதுமிதா என்று ஒரு டஜன் கலைஞர்கள் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.

மகேஷ் மேத்யூவின் சண்டை வடிவமைப்பு, பின்பாதிக் காட்சிகளில் தென்படும் ‘அமெச்சூர்தனத்தை’ மறக்கடிக்கிறது.

இரண்டொரு லோகேஷன்களில் பல காட்சிகள் நிகழ்வதால், பெரிதாகச் சிரமங்கள் இல்லாமல் அமைந்திருக்கிறது கிஷோரின் கலை இயக்கம்.

அருள்மொழி வர்மனின் படத்தொகுப்பில், மிக எளிமையாகக் கதை திரையில் விரிகிறது.

பல இடங்களில் பரபரப்பை ஊட்டுகிறது சரண் ஆர்வியின் ஒளிப்பதிவு. பின்பாதியில் ஒரு ஆலமரத்திற்கு கீழே மூன்று பேரும் இடம்பிடித்துக்கொண்டபிறகு, கேமிரா கோணங்கள் போரடிக்கின்றன.

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல்களில் ஜொலிக்காவிட்டாலும், பின்னணி இசை மூலமாக விறுவிறுப்பூட்டியிருக்கிறார்.

பட்ஜெட்டை முடிவு செய்துவிட்டுக் காட்சிகளை இயக்குனர் அரன் எழுதியிருப்பது ‘உள்ளங்கை நெல்லிக்கனி’யாகத் தெரிகிறது. மிகத்திறமையான காட்சியாக்கத்தால் அதனை மறைத்திருக்கலாம்; ஆனால், அது நிகழவில்லை.

சகிக்கலாம்!

ஒவ்வொரு வாரமும் எத்தனையோ படங்கள் பார்வையாளர்களைச் சோதிக்கும் ரகத்தில் இருக்க, அந்த நிலையை உருவாக்காமல் ஆசுவாசம் தருகிறது ‘ஜிகிரி தோஸ்து’.

வில்லன் கூட்டத்திற்கும் நாயகர்களுக்குமான இடைவெளியைச் சுட்டிக்காட்டி, அதன் வழியே கூர்மை நிறைந்த திருப்பங்களைத் இடம்பெறச் செய்திருந்தால் திரையில் வேறுமாதிரியாகப் பலன்கள் கிடைத்திருக்கும். அது நிகழவில்லை.

இடைவேளைக்கு முன்னதாக, அடுத்தடுத்த போன் கால்களின் வழியே கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் நமக்குத் தெரிய வருகின்றனர். பின்பாதியிலும் சில திருப்பங்களைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர். அது சரியான முறையில் காட்சியாக்கம் பெறவில்லை. அது போன்ற இடங்களை ‘பட்டி டிங்கரிங்’ செய்து திரைக்கதையை மெருகேற்றியிருந்தால், இன்னும் செறிவாகப் படம் அமைந்திருக்கும்.

அது நிகழாத காரணத்தால், இப்படமானது ‘சகிக்கலாம்’ என்ற பட்டியலில் இடம்பெறுகிறது.

இந்த கதையோ, படமாக்கப்பட்ட விதமோ பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை என்றபோதும், பெரிதாகக் குறைகள் தென்படாதவாறு உழைப்பைத் தந்த வகையில் கவனிப்பைப் பெறுகிறது அரன் & டீம்.

நட்பைக் கொண்டாடும் படங்களில் நகைச்சுவையும் நண்பர்களின் கலாட்டாவும் முக்கிய இடம்பிடிக்கும். இதில் அவற்றுக்குக் குறைவான இடம் தந்திருப்பதே மிகப்பெரிய குறை. அதனைச் சரி செய்திருந்தால், இளைய தலைமுறையினரின் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த ‘ஜிகிரி தோஸ்து’!

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நடிகர் போண்டா மணி காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8

இரண்டே வாரங்களில் ஆதித்யா எல்1 இலக்கை அடையும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

பியூட்டி டிப்ஸ்: துருத்திக்கொண்டு நிற்கும் பற்களுக்கு நவீன சிகிச்சை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *