இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ், இன்வெனியோ ஒரிஜின்ஸ் ஆகிய மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.
இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஜிகர்தண்டா முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, கதையின் கரு மட்டும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவம்பர் 04 ஆம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
படத்தின் கதைக்களம் 1975 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது.
“கருப்பா இருந்தா கேவலமா? தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ” என்று ராகவா லாரன்ஸ் குரலில் தொடங்கும் வசனம், கேங் வார், ஹீரோவாக எடுக்க நினைக்கும் கேங்ஸ்டர்,
படத்தை எடுத்து முடிக்க போராடும் இயக்குனர், மலைவாழ் மக்களின் பிரச்சனைகள் என ட்ரெய்லரின் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆக்சன் கலந்த விறுவிறுப்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
டெங்கு பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை மெட்ரோ பணியிடங்களில் மழைநீர்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!