இது வேறுமாதிரியான பிரமாண்டம்! jigarthanda double x movie review Tamil
இரண்டு நாயகர்கள் ஒரு படத்தில் நடிக்கும்போது, அவர்கள் திரையில் தோன்றுவது நண்பர்களாகவா, எதிரிகளாகவா என்ற எண்ணம் தோன்றும். மல்டிஸ்டாரர் படங்கள் ஹிட் ஆவதும், ப்ளாப் ஆவதும், அந்த ஒரு எதிர்பார்ப்பைச் சார்ந்தே அமையும்.
கார்த்திக் சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’ படத்தில் சித்தார்த்தும் பாபி சிம்ஹாவும் ஒருவருக்கொருவர் எதிரெதிர் திசைகளில் இருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே பாணியில் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தைத் தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
இதில் ராகவேந்திரா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உடன் நிமிஷா சஜயன், சத்யன், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ, இளவரசு உட்படப் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
படம் எப்படியிருக்கிறது? ‘ஜிகர்தண்டா’வை போலிருக்கிறதா?
மதுரையில் ஒரு ரவுடி!
ஆளும் கட்சியில் நடிகர் ஜெயக்கொடியின் (ஷைன் டாம் சாக்கோ) வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறார் அமைச்சர் கார்மேகம் (இளவரசு). அதனால், முதலமைச்சரின் நன்மதிப்பைப் பெற முடியாமல் தடுமாறுகிறார் ஜெயக்கொடி. கார்மேகத்தைப் பழி வாங்குவதற்காக, போலீஸ் அதிகாரி ரத்னகுமாரை நாடுகிறார். அமைச்சருக்கு நெருக்கமாக இருக்கும் ரவுடிகளைக் கொன்றால் அவரது செல்வாக்கைச் சரித்துவிடலாம் என்கிறார் ரத்னகுமார். அதனைச் செயல்படுத்த, காவல் துறை பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட பிறகு குற்றச்செயல்களில் சிக்கித் தண்டனை அனுபவித்துவரும் 4 பேரை அழைத்து வருகிறார். தான் சொல்லும் ரவுடிகளைக் கொன்றால், மீண்டும் அவர்களை போலீஸ் வேலையில் சேர்ப்பதாக உறுதியளிக்கிறார். அது நிகழாவிட்டால் மரணம் நிச்சயம் என்று எச்சரிக்கிறார்.
அந்த 4 குற்றவாளிகளில் ஒருவர் கிருபாகர் (எஸ்.ஜே.சூர்யா) அடிப்படையில் பயந்தாங்கொள்ளியான அவர், கல்லூரி மாணவர்கள் நால்வரைச் சிலர் வெட்டிக் கொன்றதாக அவருக்கு சிறை தண்டனை கொடுக்கிறது நீதிமன்றம்.
தான் மீண்டும் நல்வாழ்வு வாழ, ஒரு ரவுடியைக் கொன்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். அதன்படி மதுரையிலுள்ள அல்லியஸ் சீசர் (ராகவேந்திரா லாரன்ஸ்) எனும் ரவுடியை கிருபாகர் கொன்றாக வேண்டும். அவரை எப்படி அணுகுவது என்று முழிக்கும்போது, அவர் ஒரு படம் தயாரித்து ஹீரோவாக நடிக்க உள்ளதாக செய்தி வெளியாகிறது. அதற்கான கதையைச் சொல்லி இயக்குனராகும் வாய்ப்பைப் பெற ஒரு கூட்டமே காத்திருக்கிறது.
துரை பாண்டியன் (சத்யன்) எனும் உதவி இயக்குனரோடு அந்த வரிசையில் ஒருவராக நிற்கிறார் கிருபாகர். தன்னை சத்யஜித்ரேவின் உதவி இயக்குனர் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அல்லியஸ் சீசரின் சுயசரிதத்தைப் படமாக்கப் போவதாகச் சொல்கிறார். அவர் சொல்வதை சீசரும் ஏற்றுக்கொள்கிறார்.
அந்தக் கணம் முதல் சீசர் மேற்கொள்ளும் கொடூரங்களை கேமிராவில் படம்பிடிக்கத் தொடங்குகிறார். ஒருகட்டத்தில் தன்னால் சீசரைக் கொல்ல முடியாது என்பதை உணர்கிறார் கிருபாகர். வனத்தில் யானைகளைச் சூறையாடிவரும் செட்டாண்ணி உடன் சீசர் மோதினால் என்ன என்று யோசிக்கிறார்.
அதன்படியே, அல்லியஸ் சீசரை அங்கு அழைத்துச் செல்கிறார். அதன்பிறகு நிகழ்ந்தது என்ன? யாருமே வீழ்த்த முடியாத செட்டாண்ணியை சீசரால் வீழ்த்த முடிந்ததா? கிருபாகர் என்னவானார் என்பதைச் சொல்கிறது ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
இந்த படம் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் திரையில் ஓடுகிறது. எனினும் எந்தவித நெருடலும் இல்லாத அளவுக்குத் திரையில் மாயாஜாலம் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
அசத்தல் நடிப்பு!
ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த படங்களில் இதுதான் பெஸ்ட் என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் தான் ஏற்ற பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். நடனக் காட்சிகளில் தென்படும் நளினம் மட்டுமே, ’அவர் ராகவேந்திரா லாரன்ஸ்’தான் என்பதை நினைவூட்டுகிறது. மற்றபடி படம் முழுக்க மனிதர் அசத்தியிருக்கிறார்.
இன்னொரு பக்கம் எஸ்.ஜே.சூர்யா, ‘தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான நட்சத்திரம்’ என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். முதன்முறையாக லாரன்ஸை நேருக்கு நேர் சந்திக்கும் காட்சியில், அவரது நடிப்புக்குக் கிடைக்கும் கைத்தட்டல்கள் அடங்க வெகுநேரமாகிறது.
லாரன்ஸ் மனைவியாக நடித்துள்ள நிமிஷா சஜயன், நம் மனதைத் தொடுகிறார். உதவி இயக்குனராக வரும் சத்யன் முன்பாதியில் சில இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.
ஷைன் டாம் சாக்கோ, நவீன் சந்திரா ஏற்ற பாத்திரங்களை யாரை இன்ஸ்பிரேஷனாக வைத்துக்கொண்டு கார்த்திக் சுப்புராஜ் படைத்தார் என்று தெரியவில்லை. அந்த வரிசையில் இளவரசு, பவா செல்லதுரை பாத்திரங்களும் சேர்கின்றன. தியேட்டரில் அமர்ந்திருக்கையில் அது பற்றியெல்லாம் யோசிக்காமல் அவர்களது சிறப்பான நடிப்பை மட்டுமே ரசிக்கிறது மனது. திரையில் குறியீடுகளை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள், இவற்றை வைத்து பல விமர்சனக் கட்டுரைகளை எழுதக் கூடும்.
இவர்கள் தவிர்த்து, படம் முழுக்கப் பெருங்கூட்டமே திரையில் நடமாடுகிறது.
ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே பல சாதனைகளைப் படைத்தபோதும், இந்த படம் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், திரையில் பிரமாண்டத்தோடு இணைந்து எளிய மனிதர்களின் உணர்வுகளையும் திறம்படக் காட்டியிருக்கிறார். பின்பாதியில் நிறைந்திருக்கும் காடு சார்ந்த காட்சிகள், அவரது உழைப்பின் மகிமையை உணர்த்துகின்றன.
ஷஃபீக் முகம்மது அலியின் படத்தொகுப்பு, மிகச்சீராகக் கதை நகரவும், ஷாட்களில் நிறைந்துள்ள பிரமிப்பை உணரவும் இடமளிக்கிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் டி.சந்தானம் மற்றும் கலை இயக்குனர்கள் பாலசுப்பிரமணியம், குமார் கங்கப்பனின் உழைப்பினால், ஒவ்வொரு பிரேமும் ‘ரிச்’சாக தெரிகிறது. மதுரை நகர செட் மற்றும் காடுவாழ் மக்களின் குடியிருப்புகளைக் காட்டுமிடத்தில் அது பிரமிப்பின் உச்சத்தைத் தொடுகிறது. உண்மையைச் சொன்னால், வேறு மாதிரியான பிரமாண்டம் இது.
இன்னும் நடனம், சண்டைப்பயிற்சி, ஒலி வடிவமைப்பு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு என்று பல அம்சங்களில் நிறைவைத் தருகிறது இந்த ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’.
அனைத்துக்கும் மேலே, வெகுநாட்கள் கழித்து தனது இசையினால் விருந்து படைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். பாடல்கள் ஏற்கனவே ஹிட் என்ற நிலையில், பின்னணி இசையால் பின்பாதிக் காட்சிகளில் புத்துயிரூட்டியிருக்கிறார்.
ஒரு இயக்குனராக, கார்த்திக் சுப்புராஜ் இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பெரிதாக அறிமுகமில்லாத ‘வெஸ்டர்ன்’ வகைமை சாயலில் காட்சிகளை வடிவமைத்து, அதனை நம்மூருக்கு ஏற்றவாறு காட்சிப்படுத்துவது ரொம்பவே கடினம். லாஜிக் சார்ந்த கேள்விகளுக்குக் கொஞ்சமும் இடமளிக்காமல், அந்த சவாலை அபாரமாக எதிர்கொண்டிருக்கிறார்.
இயக்குனரின் திறமை!
மிக மெதுவாக நகரும் காட்சிகளும், பழங்குடியின மக்களைத் திரையில் காட்டியிருக்கும் விதமும், திரைக்கதையில் இடம்பெற்றிருக்கும் அரசியலும் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும். அது போன்ற குறைகளைப் புறந்தள்ளினால், கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் திரையனுபவம் மிக சுவாரஸ்யமானதாகத் தெரியும்.
சினிமா என்பது பேராயுதம் என்பதைத் தனது ‘ஜிகர்தண்டா’வில் காட்டியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு ரவுடியின் கோர முகத்தை, அவரது பிம்பத்தைத் திரையில் வேறுவிதமாகக் காட்டுவதன் மூலமாகச் சிதைக்க முடியும் என்று நிரூபித்திருந்தார். ஒருவகையில் சினிமா எனும் நுட்பம் மீதான விமர்சனம் அது.
மீண்டும் ஒருமுறை, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ஸில் அதனை அவர் அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறார். முந்தைய படத்தில் இருந்த பாத்திர முரண்கள், காட்சிகள் நகரும் திசை, பிரச்சனைகளுக்கான தீர்வு என்று அனைத்துமே இதில் வேறுவிதமாகக் கையாளப்பட்டுள்ளன.
அதாவது, வெளிப்புறத் தோற்றத்தில் இரண்டுக்கும் ஒற்றுமை தென்பட்டாலும் உள்ளடக்கம் முற்றிலுமாக வேறுபட்டது. அந்த வகையில், தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுக்குநூறாக்கியதோடு அவர்களைத் திருப்திப்படுத்தும் படமொன்றைத் தந்திருக்கிறார். அந்த திறமையைப் பாராட்டியாக வேண்டும்.
ரசிகர்களுக்கு ஏற்கனவே தெரிந்த கதையொன்றை எடுத்துக்கொண்டு, முற்றிலும் புதிய காட்சியனுபவத்தைத் தருவது எளிதான காரியமல்ல. அமிதாப் பச்சன் நடித்த ‘டான்’ படத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, அதிலிருந்த பாத்திரங்களையும் கதைப்போக்கையும் காட்சியமைப்பையும் அப்படியே வைத்துக்கொண்டு, திரைக்கதையில் முற்றிலும் புதிய அனுபவத்தை ஷாரூக்கானின் ‘டான்’ வழியே தந்தார் இயக்குனர் ஃபர்ஹான் அக்தர்.
பாத்திரம் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டதாக இருந்தாலும், சமைக்கப்படும் உணவின் அளவும் ருசியும் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையில் இருப்பதைப் போன்றது அது. கிட்டத்தட்ட அது போன்றதொரு சவாலை ஏற்று, தான் வடித்த ‘ஜிகர்தண்டா’வை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆக மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். jigarthanda double x movie review Tamil
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
தியேட்டரில் அமைச்சரின் மகன், பேரன் மீது தாக்குதல்!
ரூ.360 குறைந்த தங்கத்தின் விலை!