ஜெயம் ரவியின் முதல் ‘ஏ’ சர்ட்டிபிகேட் படம்!
ஆண்டனி ஹாப்கின்ஸ் நடித்த ‘சைலன்ஸ் ஆஃப் தி லேம்ப்ஸ்’ படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? சைக்கோ த்ரில்லர் படங்கள் மீது வெறுப்புள்ளவர்களையும் விரும்பிப் பார்க்கச் செய்யும் படமது. அந்த வகைமைப் படங்கள் மீது ஆர்வம் கொண்ட இயக்குனர்களுக்கும் திரைக்கதையாசிரியர்களுக்கும் அதுவொரு அடிப்படைப் பாடம். முதன்மையான பாத்திரங்கள் அனைவரையுமே ஏதோவொரு மனநலப் பாதிப்பில் சிக்குண்டவர்களாகக் காட்டியிருக்கும் அப்படத்தில் அறம் சரியாகப் பின்பற்றப்பட்டிருக்கும்.
சரி, ஏன் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது? அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ், நரேன், விஜயலட்சுமி, அழகம்பெருமாள், வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘இறைவன்’ படத்தைப் பார்த்தபோது, ‘உலகப் புகழ்பெற்ற சைக்கோ த்ரில்லர் படங்களில் வெளிப்பட்ட நீதியம்சங்களில் ஒன்று கூட இதில் இடம்பெறவில்லையே’ என்ற எண்ணம் தோன்றியது.
சரி, அதனால் படத்திற்கு ஏதும் பங்கம் நேர்ந்திருக்கிறதா?
இறைவனாகக் கருதிக்கொள்பவன்!
சென்னையில் தொடர்ச்சியாகச் சில இளம்பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுகின்றனர். அந்தப் பிணங்கள் காணக் கிடைக்கும் விதம் காவல் துறையினரைப் பதைபதைக்கச் செய்கிறது. பிரம்மா என்ற ஸ்மைலி கில்லர் (ராகுல் போஸ்) என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் ஒரு மனநலம் பிறழ்ந்த நபர் தான் அக்கொலைகளை நிகழ்த்துகிறார். அது தொடர்பான தகவல்களையும் போலீசுக்கு அனுப்புகிறார். போலீஸ் அதிகாரிகள் ஆண்ட்ரூ (நரேன்), அர்ஜுன் (ஜெயம் ரவி) தலைமையில் அந்த பிரம்மாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்படுகிறது.
ஒருநாள், பிரம்மாவின் இடத்திற்குத் தனது குழுவினருடன் செல்வதாகத் தகவல் அளிக்கிறார் ஆண்ட்ரூ. அர்ஜுன் அங்கே செல்லும்போது, அனைவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆண்ட்ரூ உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில், பிரம்மாவுடன் சண்டையிடுகிறார் அர்ஜுன். போலீசாரால் பிரம்மா சுற்றிவளைக்கப்பட, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆண்ட்ரூ மடிகிறார்.
ஆண்ட்ரூ இழப்பை அடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்கிறார் அர்ஜுன். ‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்பதாலேயே தனக்கென்று குடும்பம் வேண்டாம் என்று கருதியவர், ஆண்ட்ரூவின் வீட்டில் அவரது மனைவி (விஜயலட்சுமி), குழந்தை சோபியா (ஆலியா), தங்கை பிரியாவுக்குப் (நயன்தாரா) பாதுகாப்பாகத் தங்குகிறார். ஒரு காபி ஷாப் தொடங்குகிறார்.
ஏற்கனவே அர்ஜுன் மீது காதலில் இருக்கும் பிரியா, அதன்பிறகு அவரோடு நெருக்கமாகப் பழகுகிறார். இந்த நிலையில், பிரம்மா போலீஸ் பிடியில் இருந்து தப்பிய தகவல் கிடைக்கிறது. அதன்பிறகு, மீண்டும் சென்னையில் தொடர்கொலைகள் நடக்கின்றன.
அது, அப்போது நியமிக்கப்பட்ட தனிப்படை போலீஸ் அதிகாரிக்கு (அழகம்பெருமாள்) மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அந்த நிலையில், பிரம்மா மீண்டும் போலீஸ் பிடியில் மாட்டுவார் என்று உறுதியாக போலீசாரிடம் சொல்கிறார் அர்ஜுன். அந்த நேரத்தில், கடைசியாக பிரம்மாவின் பிடியில் இருந்து தப்பிய ஷாலு மீண்டும் அவரிடம் சிக்கிய தகவல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
அர்ஜுன் அங்கு செல்லும்போது, அந்த இடத்தில் பிரம்மாவும் இருக்கிறார். இருவருக்கும் சண்டை நிகழ, அப்போது வரும் போலீசாரால் பிரம்மா சுட்டுக் கொல்லப்படுகிறார். ஆனால், பிரம்மா உடன் இன்னொரு நபரும் இக்கொலைகளில் ஈடுபட்டதாகக் கருதுகிறார் அர்ஜுன். இறப்பதற்கு முன்னர், பிரம்மாவும் அதனை உறுதிப்படுத்துகிறார்.
அதன் தொடர்ச்சியாக, அந்த மர்ம நபர் பெண்களை இழந்த பெற்றோருக்கு சில பார்சல்களை அனுப்புகிறார். அதிலிருப்பவைகாண்பவரைப் பதைபதைக்கச் செய்பவை. அதேபோல, அர்ஜுனுக்கு ஒரு மிரட்டல் கடிதம் அனுப்புகிறார். அதனைக் கண்டதும், அந்த கொலையாளியின் இலக்கு தானே என்று அவருக்குப் புரிகிறது. அதையடுத்து, ஆண்ட்ரூவின் வீட்டில் இருந்து வெளியேறி அந்தக் கொலையாளியைப் பிடிக்கும் முயற்சிகளில் அர்ஜுன் இறங்குகிறார்.
யார் அந்த இன்னொரு கொலையாளி? எதனால் அவர் அர்ஜுனை ‘டார்கெட்’ செய்கிறார்? அதற்குப் பதிலளிக்கிறது ‘இறைவன்’ படத்தின் மீதி.
கேட்கையில் சுவாரஸ்யம் தரும் இக்கதையைக் கொஞ்சம் கூட ஈர்ப்பு ஏற்படுத்தாத வகையில் திரையில் தந்திருக்கிறார் இயக்குனர் அகமத்.
தன்னை இறைவனாகக் கருதிக்கொள்ளும் ஒரு சைக்கோ கொலையாளிக்கும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட தண்டனைகளைத் தர விரும்பும் ஒரு காவல் துறை அதிகாரிக்குமான மோதல்தான் இப்படத்தின் மையம். அதனை ரசிகர்களுக்குப் புரியவைக்க, இருவரும் ஏன் தங்களது கொள்கையில் உறுதியாக இருக்கின்றனர் என்பதை விலாவாரியாகச் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், இயக்குனரோ அதைத் தவிர்த்து பலவற்றைத் திரையில் நீட்டி முழக்கியிருக்கிறார்.
முதல் ‘ஏ’ படம்!
ஜெயம் ரவி நடித்த படங்களில் இதுவரை எதுவும் ‘ஏ’ சர்ட்டிபிகேட் பெற்றதில்லை. அந்த பெருமையை உடைத்திருக்கிறது ‘இறைவன்’. அப்படியென்றால், அதற்கு நியாயம் சேர்க்கும்விதமாக எப்பேர்ப்பட்ட கதையமைப்பும் காட்சியாக்கமும் இதில் நிறைந்திருக்க வேண்டும். அது சுத்தமாக இல்லை.
இப்படியொரு படத்தில் ஜெயம் ரவி ஏன் நடித்தார்? இந்த கேள்வியே, படத்தில் அவரது அபாரமான நடிப்பையே துடைத்தெறிந்துவிடுகிறது.
நயன்தாராவுக்கு கண்ணாடி பார்க்கும் வழக்கம் உண்டா எனத் தெரியவில்லை. குறைந்தபட்சமாக, தான் நடிக்கும் படங்களை ஒருமுறை பார்ப்பார் என்று நம்பலாம். அப்படி ‘இறைவன்’ படத்தைப் பார்த்தபிறகு, அடுத்து தான் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திர வடிவமைப்பை மாற்ற விரும்புவார் என்று தோன்றுகிறது.
இந்த படத்தில் வில்லனாக ராகுல் போஸ் நடித்துள்ளார். முன்பாதியைக் கண் இமைக்காமல் நாம் பார்க்க காரணமாக இருப்பது அவர்தான். இரண்டாம் பாதியில் அதற்கும் வழியில்லாமல் போகிறது.
’நான் மகான் அல்ல’ காலம் தொட்டு நடிகர் வினோத் கிஷனுக்கு ஒரேமாதிரியான பாத்திரங்களே வாய்க்கின்றன. இதிலும் அப்படியொரு முத்திரை அழுத்தமாகக் குத்தப்பட்டிருக்கிறது. இளமை சொட்டச் சொட்ட ஒரு காதல் கதையில் யாராவது அவரை நடிக்க வைத்தால் நல்லது.
இந்த படத்தில் நரேன், விஜயலட்சுமி, ஆலியா, ஆஷிஷ் வித்யார்த்தி, அழகம்பெருமாள், பக்ஸ், உதய் மகேஷ், அஸ்வின் குமார் உட்படப் பலர் நடித்துள்ளனர். அவர்களில் சார்லியின் நடிப்பு நம்மை ஈர்க்கிறது.
இருண்மை மிக்க சுற்றுப்புறங்களில் சுற்றிச் சுழன்றாடும் ஹரி கே.வேதாந்தத்தின் ஒளிப்பதிவு நம்மை அசத்துகிறது. அதற்கேற்ப டிஐ பணிகளும் சிறப்பாக அமைந்துள்ளன.
மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பானது, இயக்குனர் எடுத்த காட்சிகளனைத்தையும் ஒரே சீராக அடுக்கியிருக்கிறது. அவற்றில் தொழில்நுட்ப அம்சங்கள் மிளிர்கின்றன. ஆனால், கதை சீராக நகர்கிறதா இல்லையா என்பதில் அக்கறை காட்டப்படவில்லை.
ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஒவ்வொரு பிரேமையும் ‘ரிச்’ ஆக காட்டுவதில் பங்களிப்பைக் கொட்டியிருக்கிறது.
இன்னும் சண்டைக்காட்சி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, ஒலியமைப்பு என்று பலவற்றில் அசத்தலான உழைப்பு வெளிப்பட்டுள்ளது.
சரி, ஒரு படமாக இது திருப்தியைத் தருகிறதா? ‘இல்லை’ என்றே சட்டென்று சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம், படத்தின் அடிப்படைக் கதையமைப்பில் இருக்கும் கோளாறுகள் தான்.
தோற்ற இடம்!
சில ‘சைக்கோ த்ரில்லர்’ படங்களில் நாம் பின்பாதியில் பார்த்த சில திருப்பங்கள் இதில் முன்பாதியிலே இடம்பெறுகின்றன. உடனே, ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்று தோன்றும். ஒருகட்டத்தில் அதுவே தொடர்கதையாகி, கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் கதை எங்கெங்கோ திரும்புகிறது. முக்கால்வாசி பார்த்தபிறகு, ‘இது ஒரு படம் மாதிரியே இல்லையே’ என்ற எண்ணம் மேலெழுகிறது. மிக முக்கியமாக, அடுத்தடுத்து கொலைகள் நடப்பதாகக் காட்டும்போது பீதி விஸ்வரூபமெடுக்கிறது. ‘சைக்கோ படமா இருந்தாலும், ஒரு நியாயம் வேண்டாமாடா’ என்ற எண்ணம் பிறக்கிறது.
படத்தின் பின்பாதியில் வரும் பாத்திரம் தான் கதைத் திருப்பங்களுக்குக் காரணம் என்றால், அதனை நியாயப்படுத்தும்விதமான காட்சிகளை முன்பாதியிலேயே நிறைத்திருக்க வேண்டும். சொல்லப்போனால், மொத்தக் கதையுமே அப்பாத்திரம் பேசும் விஷயங்களில் இருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். இப்படத்தில் அது இல்லவே இல்லை. அதனால், பல பாத்திரங்கள் திடீரென்று திரையில் தோன்றி அதிர்ச்சி தருகின்றன.
பல காட்சிகளில் வில்லனும் நாயகனும் ஒரேமாதிரியானவர்கள் என்று சொல்ல முன்வருகிறார் இயக்குனர் அகமத். அப்படியென்றால், இரண்டு பேரும் சைக்கோ கொலையாளிகளா என்ற கேள்வி எழுகிறது. அதனை விலாவாரியாக விவரித்திருந்தால், இந்த படம் திரையில் விரிந்த விதம் வேறுமாதிரியாக அமைந்திருக்கும். அதை விடுத்து, வேகமாகச் செல்லும் கார் ஸ்டீயரிங்கை ஆள் ஆளாக்குத் திருப்புவதைப் போல கதை நகர்கிறது.
ஒரு மனிதர் ஏன் சைக்கோ கொலையாளி ஆகிறார் என்பதற்கு இக்கதை பதில் சொல்லத் தேவையில்லை. ஆனால், அவர் ஏன் தன்னை இறைவனாகக் கருதுகிறார் என்பதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். குறைந்தபட்சமாக, நாயகனாவது தனது கடந்த கால என்கவுண்டர்களுக்கு விளக்கம் சொல்லியிருக்க வேண்டும். எதுவுமே சொல்லாமல் ’இறைவன்’ என்ற பெயரை வைத்துவிட்டு, பக்தர்கள் போல நாம் தியேட்டருக்கு வர வேண்டுமென்று நினைப்பதை என்னவென்று சொல்வது?
சைக்கோ த்ரில்லர் ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்கக் கூடாது. மீறிப் படம் பார்த்தவர்கள், ‘பார்க்குறவங்களை எல்லாம் சைக்கோ ஆக்க நினைக்குறாங்களே’ என்று புலம்பத்தான் வேண்டும். என்றென்றும் புன்னகை, மனிதன் தந்த இயக்குனர் அகமத்திடம் இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை!
உதய் பாடகலிங்கம்
வாச்சாத்தி சம்பவத்தில் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவில்லை: பாலகிருஷ்ணன்
“வாச்சாத்தி வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை” – வழக்கறிஞர் இளங்கோவன்
வாச்சாத்தி வழக்கு: குற்றவாளிகள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!